அதிமுக., குறித்து வதந்தி பரப்புவதை கௌதமி நிறுத்த வேண்டும்: சி.ஆர். சரஸ்வதி ஆவேசம்

சென்னை:
அதிமுகவைப் பற்றி வதந்தி பரப்புவதை நடிகை கௌதமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சி.ஆர். சரஸ்வதி ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், அவற்றை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் நடிகை கௌதமி பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து கௌதமிக்கு அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆவேசமாக ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

அண்மையில் காலமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை அளிக்கப்பட்டது, அவர் குணமாகி வருவதாகக் கூறப்பட்டது, திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது என அனைத்துமே பல சந்தேகங்களை எழுப்புகின்றன. இது தொடர்பான உண்மைகளை பிரதமர் மோடி வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து நடிகை கௌதமி தான் ஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதியுள்ளதாக டிவிட்டரிலும், தனது வலைப்பூவிலும் எழுதி, முழு கடிதத்தையும் போட்டிருந்தார்.

கௌதமியின் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளார் அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி.

இதுதொடர்பாக அவர் பேசியது:

அப்போலோவில் நடந்தது மோடிக்கு தெரியும் அம்மாவின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு நாளும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து பிரதமர் அலுவலகம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டேதான் இருந்தது. ஏனென்றால், பிரதமர் மோடியும், மறைந்த அம்மாவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பில் இருந்தவர்கள். எனவே, கௌதமி விமானத்தை எடுத்துக் கொண்டு தில்லிக்குப் போய் விசாரித்துக் கொள்ளட்டும்.

மத்திய அமைச்சர்கள் பல முறை அப்போலோவிற்கு வந்தார்கள். மரியாதைக்குரிய ராகுல்காந்தி வந்தார். மாண்புமிகு கவர்னர் வந்தார். இத்தனை பேரும் மருத்துவமனைக்கு வந்து அம்மாவைப் பற்றி டாக்டர் மற்றும் முக்கியமானவர்களிடம் விசாரித்துவிட்டு, கீழே சென்று எல்லா பத்திரிகைகளுக்கும் அம்மா நலமாக இருக்கிறார் என்றுதான் சொன்னார்கள்.

இந்தச் செய்தியை அதிமுகவினர் மட்டும் சொல்லி இருந்தால் கௌதமிக்கு இவ்வளவு பெரிய சந்தேகம் வந்திருக்கலாம். ஊடகங்களுக்கு செய்தி சொன்னவர்கள் அனைவரும் தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும், அப்போலோ வந்துவிட்டு இந்தச் செய்தியைத்தான் ஊடகங்களுக்கு சொல்லிவிட்டு போனார்கள்.

அம்மா உடல் நலம் தேறி வருகிறார். நன்றாக இருக்கிறார். விரைவில் வீட்டிற்கு வந்து விடுவார் என்று அவர்கள் சொன்னதை எல்லாம் கௌதமி பார்க்கவில்லையா அல்லது படிக்க வில்லையா?

எய்ம்ஸ் டாக்டர்ஸ் யார்? அரசு மருத்துவர்கள் தானே? அவர்கள்தான் தில்லியில் இருந்து இங்கு வந்து, மருத்துவமனையில் அம்மாவுக்கு சிகிச்சை கொடுத்தார்கள். ரிச்சர்ட் என்ன அதிமுகவைச் சேர்ந்த டாக்டரா? அவரும்தானே சிகிச்சை கொடுத்தார்.

ஐ.சி.யூவில் இருக்கும் போது நிச்சயம் யாராக இருந்தாலும் நோயாளியை பார்க்க முடியாது. வார்டுக்கு வந்த பின்னர் மற்றவர்கள் பார்த்திருக்கலாமே என்று கௌதமி கேட்கிறார்.

அவருக்காக இன்னொரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். எங்கள் அம்மாவிற்கு ஒரு குணம் உண்டு. வீட்டில் கூட யாராவது தன்னைப் பார்க்க வந்தால், முழு அலங்காரம் செய்து கொண்டுதான் வெளியில் வந்து, தன்னைக் காண வந்தோரை பார்ப்பார்.

கேசுவலாக, வீட்டில் தானே இருக்கிறோம் என்று ஏனோ தானோ என்று உடை உடுத்த மாட்டார். அவரது வழக்கம் அப்படி.

எம்.ஜி.ஆர் எப்படி தொப்பியோடு இருப்பார் என்று அடையாளம் இருக்கிறதோ அதே போன்று அம்மாவும் அலங்காரத்தோடுதான் இருப்பார். ஆகவேதான் மருத்துவமனையில் இருந்த போது, தன்னை யாரும் அந்த உடையில் பார்க்க அம்மா விரும்பவில்லை.

நான் 15 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். எத்தனை முறை கார்டனுக்கு கௌதமி வந்திருக்கிறார்கள். எத்தனை முறை அம்மாவை சந்தித்து பேசி இருக்கிறார்கள். கட்சியைப் பற்றியோ, அம்மாவைப் பற்றியோ தெரியாமல் கௌதமி இப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

கௌதமி தில்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து அனைத்தையும் கேட்டுக் கொள்ளட்டும். நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

எனக்கு பிறகு இந்தக் கட்சியை தொண்டர்கள் வழி நடத்துவார்கள் என்று எங்கள் அம்மா தெளிவாக சட்டமன்றத்தில் சொன்னார்கள். இந்தக் கட்சி இன்னும் பல 100 ஆண்டுகள் இருக்கும். அதுபோன்ற தொண்டர்களைக் கொண்ட கட்சி இது. நிச்சயமாக வெற்றி நடை போடும். வீர நடை போடும். அம்மா விட்டுச் சென்ற பணிகளை கழகம் தொடர்ந்து செய்யும். தேவை இல்லாமல் எல்லோரும் சேர்ந்து ஒரு வதந்தியை பரப்புவதில் கௌதமியும் சேர்ந்துவிட்டதை  நினைத்தால் வருத்தமாக உள்ளது.  யார் என்ன வதந்தியைக் கிளப்பினாலும் சரி, இந்தக் கழகம் வீறுநடை போடும். அம்மாவின் பாதையில் இந்தக் கட்சி செல்லும்

– என்று சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.