மக்களவையில் தடுக்கிறார்கள்; மக்களிடம் பேசுகிறேன்: பிரதமர் மோடி

மக்களவையில் தான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் இப்போது பேசுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

குஜராத் மாநிலம் தீசா கிராமத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். கறுப்பை வெள்ளையாக்க உதவிய வங்கி அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். மோடி எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறியவில்லை.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுக்தி. சமூக நலத்திட்டங்களை முடக்கிய ஊழல்வாதிகளின் அதிகாரத்தை பறிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இருக்கிறோம். அதற்கு அவை தடையின்றி நடைபெற வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தேர்ந்த அனுபவம் கொண்ட குடியரசுத் தலைவரும்கூட நாடாளுமன்ற முடக்கம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் நான் பேச முடியாத அளவுக்கு அமளி நீடிப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன். பண மதிப்பு நீக்கத்தால் தீவிரவாதிகள் பலமிழந்துள்ளனர். கள்ளநோட்டுகள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் சீராகிவிடும். மக்கள் மொபைல் வழி பண பரிவர்த்தனைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பனஸ்கந்தா பகுதிக்கு ஒரு பிரதமர் வருவது மிக நீண்ட இடைவெளிக்குப் பின் என்று கூறியிருந்தேன். ஆனால் நால் ஒரு பிரதமராக வரவில்லை. இந்த மண்ணின் மைந்தனாகத்தான் வந்திருக்கிறேன்.
ஒரு நேரத்தில், பனஸ்கந்தா, கட்ச் ஆகிய இடங்களில் இருந்து மக்கள் வேறு வேலைவாய்ப்பு தேடி வெளியேறினார்கள். ஆனால், இப்போது நிலை அடியோடு மாறிவிட்டது. நான் அப்போது சொன்னேன். விவசாயிகளே… நீங்கள் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துங்கள், அதே வகையில் மின்சாரத்தின் மீதும் என்று! பனஸ்கந்தாவில் உள்ள விவசாயிகள் அதைக் கேட்டு சொட்டு நீர்ப் பாசன முறைக்கு மாறினார்கள். நீர் சிக்கனத்தைக் கடைப்பிடித்தார்கள். இப்போது தாங்கள் மட்டுமல்ல அடுத்த தலைமுறையின் வாழ்க்கை முறையையே மாற்றிக் காட்டியிருக்கிறார்கள். இந்த நாடு சுயநல நாடு அல்ல. நாம் எதிர்கால சந்ததியின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையைக் கொண்டுள்ளோம். ” என்று பேசினார்.