ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா: தஞ்சம் அடைந்த தம்பிதுரை

அதிமுகவை வழிநடத்தத் தேவையான தலைமைப் பண்புகள் நிறைந்தவர் சசிகலா என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்றும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

“மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரம்.

சமூகநீதி காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வை உறுதி செய்யவும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தன்னையே அர்ப்பணித்து தன்னை நேசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று அதிமுகவை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆவார். அவருக்குப் பின்னர் கட்சியை வழிநடத்த அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஜெயலலிதா.

இப்போது ஜெயலலிதா நம்மிடையே இல்லாத நிலையில், அதிமுகவை வழிநடத்தும் தகுதியும், ஆற்றலும், அனுபவமும் ஒருங்கே அமையப் பெற்றவர் வி.கே. சசிகலா மட்டுமே.

அகில இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அறியப்பட்ட இயக்கமாக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டிருக்கும் அதிமுகவையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக சசிகலா திகழ்கிறார்.

கட்சியை நடத்துவதிலும், ஆட்சியை நடத்துவதிலும் ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உறுதுணையாக இருந்தவர்.

பல்வேறு சோதனைகளிலும், சரித்திர நிகழ்வுகளையும் ஜெயலலிதாவோடு தோளோடு தோள் நின்று எதிர்கொண்டவர். அதன்படி, கட்சியை வழிநடத்த தேவையான தலைமைப் பண்புகள் நிறைந்தவர் சசிக்கலா மட்டுமே.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்களின் வழியில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆற்றல் நிறைந்தவர் சசிகலா ஒருவர் மட்டுமே.

இவரே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதை கட்சித் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவர்.

எனவே, கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்று அதிமுகவையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.