சண்டிகர் மாநகராட்சியில் பாஜக., அபார வெற்றி: பணக்கொள்கைக்கு மக்கள் ஆதரவு!

சண்டிகார்:
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசின் புதிய பணக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை இது வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

சண்டிகர் மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகள் 26. இவற்றுக்கு தேர்தல் நடந்தது. இதில் 22 இடங்களில் பா.ஜ.க, மற்றும் அகாலிதள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 4 வார்டுகளே கிடைத்துள்ளன. இந்த அமோக வெற்றியை பா.ஜ.க., தொண்டர்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற மகாராஷ்ட்டிரா , குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.க, அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெற்றதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தையே முடக்கியது. ராகுலும் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மோடியின் கொள்கையால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், சண்டிகர் தேர்தலில் பா.ஜ.க, அமோக வெற்றி பெற்றது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் பணக்கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டதையே இது காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.