நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி!

சென்னை:
நாடார் சமுதாயம் குறித்த அவதூறு பாடம் நீக்கப்பட்டது பாமகவின் வெற்றி என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டத்தின் பூர்வகுடிமக்களான நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் 9&ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இடம் பெற்றிருந்த பாடத்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. காலம் தாழ்த்தப்பட்ட நடவடிக்கை என்றாலும் இது வரவேற்கத்தக்கது.

9&ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் 168 ஆவது பக்கத்தில் காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருந்தது. அதில் சாதி மற்றும் மோதலும், ஆடை மாற்றமும் என்ற குறுந்தலைப்பில் இடம்பெற்றுள்ள பத்தியில் ஆங்கிலேயர் ஆட்சியில் தெற்கு திருவிதாங்கூர் என்றழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தின் பூர்வக்குடி மக்கள் நாயர்கள் தான் என்றும், நாடார் சமுதாயம் அங்கு பிழைப்பு தேடி இடம் பெயர்ந்து வந்தது என்றும் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, நாடார்கள் சாணார் எனப்படும் கீழ்சாதியை சேர்ந்தவர்கள் என்றும், நாடார் சமுதாய பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் மேலாடை அணிவதற்காக கிறித்தவ மதத்திற்கு மாறியதாகவும் திரித்து எழுதப்பட்டிருந்தது. இந்திய விடுதலைக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட ஒரு சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலான இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 25.10.2012 அன்று நான் தான் முதன்முதலில் அறிக்கை வெளியிட்டேன். அதைத்தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தினார்கள்.

நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலான பாடத்தை நீக்கும்படி அறிக்கை வெளியிட்டதுடன் பா.ம.க. ஓய்ந்துவிடவில்லை. இதை அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜு கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தேன். அவரும் இச்சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து நாடார்கள் குறித்த அவதூறு தகவல்களை நீக்குவது பற்றி பரிந்துரை அளிக்கும்படி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (ழிசிணிஸிஜி) பாடநூல் தயாரிப்புக் குழு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, நாடார்கள் குறித்த தகவல்கள் ஆய்வு செய்த அக்குழு நாடார்கள் குறித்து பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை என்றும் அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் 2012ஆம் ஆண்டு திசம்பர் இறுதி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையின் அடிப்படையில், நாடார்கள் குறித்த அவதூறு தகவல்களை நீக்குவது குறித்து கல்வியாளர்கள் மிரினாள் மிரி, ஜி.பி. தேஷ்பாண்டே ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய கண்காணிப்புக்குழு முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அதன்பின் பல்வேறு காரணங்களால் இத்திருத்தம் கிடப்பில் போடப்பட்டது.
பாடநூல் தயாரிப்புக் குழுவின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 24.08.2016 அன்று மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டேன். இதுகுறித்து நாடார் சமுதாயங்களின் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும் பா.ம.க. தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி, 9&ஆம் வகுப்பு பாடநூலில் இருந்து நாடார்களை அவதூறு செய்யும் பாடத்தை நீக்க ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் 4 வாரங்களில் முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கும் (சி.பி.எஸ்.இ) 16.11.2016 அன்று ஆணை பிறப்பித்திருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளின் பயனாக நாடார் சமுதாயம் குறித்த அவதூறு கருத்துக்கள் அடங்கிய காலணி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ற தலைப்பிலான பாடத்தை 9&ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் இருந்து நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆணையிட்டிருக்கிறது. இந்த பாடத்திலிருந்து வினாக்கள் எழுப்பப்படக் கூடாது என்றும் ஆணையிட்டிருக்கிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். இந்நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதை ஏற்று, தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய அய்யா வைகுந்தரின் வாழ்க்கை வரலாற்றை மத்திய மற்றும் மாநில பாடத்திட்ட நூல்களில் ஒரு பாடமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.