யார் இந்த ராம் மோகன் ராவ் ?

தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத சம்பவமாக, தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டிலேயே வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.
ராம் மோகன் ராவ் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த, 1985 பேட்ஜை சேர்ந்தவர். 2017 ம் ஆண்டு செப்டம்பரில் பணி ஓய்வு பெற உள்ளார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போதே, அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தால் இவர் தான் தலைமை செயலாளராக வரப்போகிறார் என்ற பேச்சு அடிப்பட்டது. அப்போது அவர், கூடுதல் தலைமை செயலாளர் என்ற அந்தஸ்தில், முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். ஜூன், 8 ம் தேதி, தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர், எம்.ஏ., பொருளியல், எம்.காம்., விலை மதிப்பீடு கணக்குபதிவியல் (காஸ்ட் அக்கவுண்டன்சி) படித்தவர். தமிழக அரசில், சமூக நலம், வீடு மற்றும் நகர மேம்பாடு, தொழில் துறைகளில் பணியாற்றியவர்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை செயல்அதிகாரி ஆகிய பொறுப்புக்களை வகித்தவர். இவர் இதுவரை, அயல் பணி என்ற வகையில் மத்திய அரசு பணிக்கு சென்றதில்லை. எனினும், 2001 முதல், 2003 வரை குஜராத் கடல்சார் வாரிய துணை தலைவராக இருந்துள்ளார். ராம்மோகன் ராவின் தாய் மொழி தெலுங்கு என்றாலும், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாக பேசும் திறன் படைத்தவர்.

சேகர் ரெட்டி – ராம மோகன ராவ் தொடர்பு

சேகர் ரெட்டியிடம் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் மோகனராவ் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான சேகர் ரெட்டிக்கும், தலைமை செயலர் ராம மோகனராவுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சேகர் ரெட்டிக்கு மணல் ஒப்பந்தம் கிடைக்க காரணமாக இருந்தவர் ராம மோகன ராவ். ராம மோக ராவ் தொடர்பால் தான் ரெட்டி உச்சத்துக்கு வர முடிந்ததாக தெரிகிறது.