அயோத்தி: வாதங்கள் நிறைவு! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ayodhya sriram mandir

அயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்ததால், தீர்ப்பு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப் பட்டது.

அயோத்தி வழக்கில் சுப்பிரமணியன் சாமி தரப்பில் வாதங்களை வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வாதத்திற்கு அனுமதி என்றும், உங்களுடையது இடைக் கால மனு எனவே இறுதி வாதம் வைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர். இதே போல், இந்து மகாசபா சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவையும் இன்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற இரண்டாவது வழக்கு அயோத்தி வழக்குதான்.

supreme court of india

அயோத்தி ராமஜென்ம பூமி பகுதியில் சர்ச்சைக்குரியதாக உள்ள 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்த வழக்கில் கடந்த 2010ல் தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பங்கிட்டு பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட14 மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல், நீதிமன்றத்தின் அனைத்து பணி நாட்களிலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணை, இன்றுடன் 40 நாட்களை எட்டி, நிறைவு பெற்றுள்ளது.

இறுதி விசாரணை நடைபெற்றபோது சமரசக் குழுவின் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை தொடர்ந்த நிலையில், இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், திடீரென இந்து அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவண புத்தகத்தை கிழித்து எறிந்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் கோபமான சூழலில் உரத்த குரலில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதம் செய்ததால், நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர். இந்தப் போக்கு தொடர்ந்தால் அனைவரும் எழுந்து சென்று விடுவோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

ayodhya disputed building demolished

இதை அடுத்து அயோத்தி நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் மூன்று தரப்பினரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தங்கள் இறுதி வாதங்களை முன்வைத்தனர்.

இறுதி விசாரணை முடிவுற்ற நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அதற்குள் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :