Home கட்டுரைகள் சசிகலா யார் ஆள்?: வலம்புரி ஜானின் தீர்க்க தரிசனம்!

சசிகலா யார் ஆள்?: வலம்புரி ஜானின் தீர்க்க தரிசனம்!

சசிகலா யாரின் ஆள்? அவர் எம்.ஜி.ஆரின் ஆளுமல்ல, ஜெ.,யின் ஆளுமல்ல; சசிகலாவின் ஆள் தான் சசிகலா என அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., வலம்புரி ஜான் எழுதியுள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு முன்பேயே அவர் இவ்வாறு எழுதியுள்ளார். தமிழக மக்கள் உணர்ந்தாலும், ஜெயலலிதா இந்த உண்மையை உணர மாட்டார் என்று அவர் எழுதியுள்ளது ஒரு விரக்தியின் எல்லை என்றுதான் தெரிகிறது.

ஜெயலலிதா மறைந்த பின்னர், அதிமுக.,வில் பொதுச் செயலர் பதவிக்கு போட்டா போட்டி நடக்கிறது. ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் உடன் இருதவர் என்ற முறையில் சசிகலா, வாரிசு அடிப்படையில் தீபா, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்ற முறையில், முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, தனித்தனியே பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

‘ஜெயலலிதாவுடன் இருந்த நெருங்கிய தோழி என்ற அந்தஸ்தால், கட்சி நிர்வாகிகளை பணிய வைத்து, தலைமைப் பொறுப்புக்கு வர நினைக்கிறார் சசிகலா’ என்ற கருத்து, அ.தி.மு.க., வினர் மத்தியிலும், சமூக வலை தளங்களிலும் பரவி வருகிறது.

ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், உறவினர்கள் தினகரன், மகாதேவன், வெங்கடேஷ், ராவணன் என, ஒரு பட்டாளமே சசிகலாவை பொதுச் செயலராக்குவது எனக் களமிறங்கியுள்ளது.

அ.தி.மு.க.,வில் பதவிகளையும் அதிகாரத்தையும் பிடிக்க ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறிக் கொண்டவர்கள், தற்போது சசிகலாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில், கடந்த 2005ல் இறந்த பிரபல எழுத்தாளரும், அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., யுமான, வலம்புரி ஜான் எழுதிய, ‘வணக்கம்’ என்ற புத்தகத்தின் பல வரிகள் உண்மைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் புத்தகத்தில், சசிகலாவும், நடராஜனும் எப்படியெல்லாம் ஜெ.,யை கைப்பாவையாக வைத்து இருந்தனர், அவரது உறவினர்களை திட்டமிட்டு, எப்படி பிரித்தனர் என, அப்போதே எழுதியுள்ளார்.’

அந்த புத்தகத்தில் இருந்து, சில வரிகள்:

ஜெயலலிதா, சீவகசிந்தாமணி காப்பியத்தில் வரும் சச்சந்தனைப் போல், தான் வீழ்வது தெரியாமலே வீழ்ந்து வருகிறார். படோபகரமான முதல்வராக இருந்தாலும், சசிகலா, நடராஜன் என்கிற கடற்கொள்ளையர்களின் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண்ணாகத் தான் இருக்கிறார்.ஜெ.,யின் விசுவாசமிக்க ஊழியர்களை, ஒவ்வொருவராக பழிவாங்கி, உடன் பிறந்த சகோதரன் ஜெயக்குமாரை கூட, ஜெ.,யோடு சேர விடாமல் செய்து, உண்மைகளை அறிய விடாமல் செய்தனர்.தங்களுக்கு சகாயம் செய்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சவுந்தர்ராஜன் போன்றவர்கள் கூட, தாங்கள் இல்லாமல், ஜெ.,யை பார்க்க கூடாது என்ற நிலைக்கு மாற்றினர். எல்லா பாதகங்களையும் செய்து, தங்களை அதிகார இயந்திரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள சசிகலாவும், நடராஜனும் இதை செய்தனர்.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை, சசிகலாவால் பழிவாங்கினார்; சசிகலாவோ, ஜெ., விசுவாசிகளையே பழிவாங்கினார். நடராஜனும், சசிகலாவும் தமிழகத்தை கொள்ளை அடிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தவர்களை, ஜெ.,யின் பார்வையில் படாமல் துரத்தினர். ஜெ.,யை துாக்கி வளர்த்த மாதவன் நாயர், அவரின் அன்பை பெற்றார் என்பதற்காக, 35 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, ’36 ஆயிரம் ரூபாய் வங்கியில் வைத்துள்ளார்’ என்று காரணம் காட்டி, ஓரம் கட்டியது சசிகலாவும், நடராஜனும் தான்.

இதெல்லாம் ஒரு காலத்தில் கோடி, கோடியாக கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும், தன் சொந்த, பந்தங்களை மாத்திரமே வாழ வைக்கலாம் என்பதற்கான சசிகலா, நடராஜனின் கூட்டுத் திட்டமே காரணம். தங்களது சொந்தங்களுக்காக, தமிழகத்தில் ஆட்சி இயந்திரத்தை சசிகலாவும், நடராஜனும் உருக்குலைத்து விட்டனர். இந்த சசிகலா, எம்.ஜி.ஆர்., ஆளுமல்ல, ஜெயலலிதாவின் ஆளுமல்ல; சசிகலா சசிகலாவின் ஆள். இதை தமிழ்நாடு முழுவதுமாக உணரும்; அப்போது கூட ஜெயலலிதா உணரமாட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version