ஜெயலலிதாவா சசிகலாவா?: நிர்வாகிகள் தவிப்பு! காலண்டர் தவிர்ப்பு!

சென்னை:
2017 காலண்டரில் ஜெயலலிதா படத்தை அச்சிடுவதா, சசிகலா படத்தை அச்சிடுவதா என்ற குழப்பத்தில், புத்தாண்டுக்கு காலண்டரே யாருக்கும் வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், காலண்டர் வழங்குவதைத் தவிர்த்து விட்டனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவியை கைப்பற்ற, சசிகலா தரப்பு கடும் முயற்சியில் உள்ளது. ஜெயலலிதா இறுதிச் சடங்கின் போது, அவரது உடலைச் சுற்றிலும், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு, மற்ற எவரையும் கிட்ட நெருங்க விடாமல் செய்தனர். மேலும், ஜெயலலிதாவுக்கு இறுதிச் சடங்கினை மரபுகளை மீறிச் செய்தார் சசிகலா. இதனால், சசிகலா மீது தொண்டர்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், பொதுச் செயலர் பதவிக்கு சசிகலாவை முன்னிறுத்தியுள்ளனர் அதிமுக., வில் பதவிக்காக ஆலாய்ப் பறப்பவர்கள். இதனால் அதிமுகவில் கோஷ்டிப் பூசல் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு பிறக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், காலண்டர் குழப்பத்தில் சிக்கி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க., நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், புத்தாண்டை வரவேற்று, ஜெயலலிதா  படத்துடன் காலண்டர்களை அச்சிட்டு தொண்டர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் வழங்குவது வழக்கம். ஜெயலலிதா மறைவுக்கு பின், அம்மா படத்தை போடுவதா… சின்னம்மா படத்தை போடுவதா என்று நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இவர்களை நம்பி, காலண்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் வருமானத்தை இழந்து உள்ளனர்.

இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில், காலண்டர் மற்றும் டைரிகள் விற்பனை மந்தம் அடைந்து உள்ளது. இதனால், தொண்டர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றம்; மற்றொரு பக்கம் மகிழ்ச்சி யாக உள்ளதுஇது குறித்து, நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்., துவங்கியபோது, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., படங்களுடன் காலண்டர் அச்சிட்டு வழங்கினோம். பின், ஜெயலலிதா படம் மட்டுமே பிரதானமாக இடம் பெற்றது. அவர் மறைவைத் தொடர்ந்து, சசிகலாவை பொதுச் செயலராக முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், யார் படத்திற்கு முக்கியத்துவம் தருவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யார் படத்தை அச்சிட்டாலும், கோஷ்டி பூசலில் சிக்கி, எங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால், தவிர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டர் ஒருவர் கூறுகையில், ‘இப்போதுள்ள நிர்வாகிகள், பதவிக்காக, மாறியுள்ளனர். இவர்களால் தப்பியது காலண்டர் என்பதில் மகிழ்ச்சி’ என்றார்.