பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்திய நிதிஷ்குமாருக்கு மோடி பாராட்டு

பாட்னா:

மதுவிலக்கை அமல்படுத்திய பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். பதிலுக்கு நிதிஷும் மோடியைப் பாராட்டிப் பேசினார். இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் சீக்கிய மத குருவான குருகோவிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள பிரதமர் நரேந்திரமோடியும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி பேசியபோது…

பீகார் மாநிலத்தில் முன்னோ டியான முழு மதுவிலக்கை அமல்படுத்திய முதல்-மந்திரி நிதிஷ்குமாரை மனம் திறந்து பாராட்டுகிறேன். அவரது துணிச்சலான முடிவு இது. மதுவில் இருந்து எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்க நிதிஷ்குமார் எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சமூக மாற்றத்துக்காக ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்வது கடினமானது. இதனை நிதிஷ்குமார் செய்துள்ளார். இது நிதிஷ்குமார் அல்லது அரசியல் கட்சியினரின் பணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இதனை அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். பீகாரில் மதுவிலக்கு வெற்றி பெற்றால், நாடு முழுவதற்கும் முன்மாதிரியாக இருக்கும் என்றார். பதிலுக்கு குஜராத்தின் மதுவிலக்கு குறித்துப் பேசிய நிதிஷ், மோடியைப் பாராட்டிப் பேசினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியை முறித்துக்கொண்டு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. அதில் இருந்து அரசியலில் நரேந்திரமோடியும், நிதிஷ்குமாரும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த நவம்பர் 8-ந் தேதி கருப்பு பணம், கள்ளநோட்டை ஒழிப்பதற்காக உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை நரேந்திரமோடி செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே நிதிஷ்குமாரின் மதுவிலக்கு திட்டத்துக்கு மோடி பாராட்டியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.