ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகம் கூடாது: ராம.கோபாலன்

சென்னை:

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு பலப்பிரயோகம் செய்வதை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் திமுக கூட்டாட்சியில் காளையை உள்நோக்கத்துடன் காட்சிப் பொருள் பட்டியலில் சேர்ந்ததன் விளைவாக பீட்டா அமைப்பு உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்து தடை வாங்கியது. சென்ற ஆண்டு காட்சிப் பட்டியலில் இருந்து மத்திய அரசு காளையை விலக்கிவிட்ட நிலையில், அரசாணையை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நீதியரசர்களின் கேள்விகள் சாதாரண மக்களை எரிச்சலூட்டின. இதனை அடுத்து திரு. சுப்ரமணிய சுவாமி அவர்கள் ஒரு மனுவை தாக்கள் செய்தார்.அதனை ஏற்ற விசாரணையை அத்துடன் முடித்துக்கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளி வைத்தனர். மத்திய அரசு சார்பில் மகரசங்கராந்திக்கு முன் தீர்ப்பை வழங்கக் கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

எந்த வழக்கும் எதற்காக நடைபெறுகிறது என்பதை பற்றி கவலையில்லை என எந்த நீதிமன்றமாவது கூறினால், நீதிமன்றம் மாண்பை இழக்கும் அபாயம் இருக்கிறது. காலதாமத்தப்படுத்தும் தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பாககக் கருதப்படும் என்பதை மறக்க வேண்டாம். அதுபோலத்தான் பொங்கலுக்கு முன் தீர்ப்பை எதிர்ப்பார்த்த மக்களுக்கு அளித்த பதிலும் நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது என இந்து முன்னணியின் கருத்துகிறது.

மாநில அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான ஆதரவை ஜனநாயக வழியில் போராட்டங்கள் வாயிலாக தெரிவிக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுகிறது. பலப்பிரயோகம் செய்வது, கைது நடவடிக்கை, வழக்குப் பதிவு செய்வது போன்றவற்றை தமிழக தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணியும் இணைந்து நிற்கிறது. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்து முன்னணி சார்பிலும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

தமிழக மக்களின் உணர்வுகளை இந்த நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறோம். நீதிமன்றத்திலும் நமது தரப்பு வாதங்களை முன்னிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்ற பெயரில் மக்களை திசைத்திருப்ப, தேச விரோத சக்திகள் முனைகின்றன. திராவிட இயக்கங்களும், பிரிவினைவாத தீய சக்திகளும், இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போராட தூண்டுகின்றன. பிரிவினை கருத்துக்களை வெளிப்படுத்தியும் வருகின்றன. தேச விரோதிகளை அடையாளம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டும். தேசிய கொடியை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. சில சினிமா பிரபலங்கள் இந்தப் பிரச்னையில் தேவையற்ற கருத்துகளை கூறி வன்முறையைத் தூண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படவும், பதட்டத்தை தணிக்கவும் முன் வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.