மதுரமான அனுபவம்!

திடீரெனத் தோன்றியது. ஜல்லிக்கட்டு என்றாலே நம் தென்னகம்தான்! அதுவும் மதுரை! நாம் ஏன் சென்னையில் இருந்து கொண்டு பார்த்த மக்களையே பார்த்து பேசி, பார்த்த காட்சிகளையே பார்த்துக் கொண்டு என்று தோன்றியது.
ஒரு நாள் பயணமாகவாவது இருக்கட்டுமே என்று…. சொந்தக் கருத்தில் விடுப்பு எடுத்து மதுரைக்குக் கிளம்பினேன்.
அருகருகே இருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு இரு பகுதிகளையும் பார்த்துவிட்டு, அங்குள்ள மக்களிடம் பேசிவிட்டு வருவது;
அடுத்தது, வழக்கம்போல் அங்குள்ள குலதெய்வம் பெருமாளையும் சேவித்து விட்டு வருவது… – இந்த இரண்டு குறிக்கோளுடன் மதுரைக்குச் சென்றேன்.
மதுரையில் சுற்றியதில்…
கல்லூரி மாணவர்கள், கல்லூரியை விட்டு வெளியேறியிருந்தார்கள்! சாலைகளில் அங்கங்கே கூடியிருந்தார்கள்.
தமுக்கம் மைதானம் நிரம்பியிருந்தது.
அலங்காநல்லூர் நகரப் பேருந்துகள் மறிக்கப்பட்டன. பேருந்து வழித்தடம் மாற்றப்பட்டு, பேருந்துகள் சுற்றி விடப் பட்டன.
தேனி- உசிலம்பட்டி சாலையில் மதுரை காமராஜர் பல்கலை மாணவர்கள் காலையிலேயே சாலை ஓரத்தில் வளைவை ஒட்டி அமர்ந்துவிட்டார்கள். கைகளில் பதாகைகள். வழக்கமான முழக்கங்கள்!
கடந்து செக்கானூரணி சென்றபோது, பஸ் ஸ்டாண்ட் ஒட்டி நாற்சாலை சந்திப்பில் தேவர் சிலை அடியில் நான்கு சாலைகளையும் மறித்துக் கொண்டு அருளாணந்தர் கல்லூரி மாணவர்கள் அமர்ந்துவிட்டார்கள்.
சிலர் கறுப்புச் சட்டைகளுடன்! மாணவர்களுடன் வேறு சிலரும் தொடர்பேயில்லாமல் ஊடுருவியிருந்தனர்.
கொளுத்தும் வெயில்! தண்ணீர் பாக்கெட்டுகள் மேலே தூக்கி வீசப்பட்டு, மாணவர்கள் கேட்ச் பிடித்து, பாக்கெட்டை வாயில் கடித்து பிய்த்து, பிதுக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, ஹோ வென்ற இரைச்சலிட்டு…
பகுதி எஸ்.ஐ., வந்தார். பார்த்துவிட்டு ஓரத்தில் நின்றார். போய்க் கேட்டேன். சார் எப்ப சார் அவங்களோட பேசி, ரோட்டை க்ளியர் பண்ணுவீங்க? என்று!
சார்.. எல்லாம் ஸ்டூடண்ட்ஸ். ஒன்னும் செய்ய முடியாது. எப்படியும் 2 மணி நேரம் ஆகும். பேசாம அப்படியே இருக்க வேண்டியதுதான் என்றார்.
ஓரிரண்டு ஆம்புலன்ஸுகளுக்கு வழிவிட்டார்கள். நேரம் கடந்தது. சாலை மறியல் நின்றபாடில்லை. மதியம் 1ஐத் தொட்டது.
திடீரென மாணவர்கள் பக்கத்தில் இருந்து ஏதோ சலசலப்பு. ஓரிருவர் கைகலக்க… கூட்டத்துக்குள் போலீஸார் சமாதானத்துக்கு வர…
பக்கத்தில் நின்றிருந்த தேனி, குமுளி அரசு பஸ் 4, இரு கார்களின் கண்ணாடிகள் கண்ணிமைக்கும் நொடியில் தூள் தூளாக…
போலீஸார் விரட்டியடிக்க… கும்பல் கலைந்தது!
ஒன்று மட்டும் உறுதி! மாணவர்கள் வன்முறையைக் கையிலெடுக்கவில்லை! ஆனால், அரசியல், சாதீய நோக்கில் பிரச்னையைக் கொண்டு செல்லும் சிலர் மாணவர்களிடம் ஊடுருவியிருப்பது உண்மை!
இதன் மூலம் மாணவர்களுக்கு அனுசரணையாக இருப்பது போல் விஷக் கருத்துகளை பரப்புவதும் உண்மை.
தமிழ் தேசியம், தமிழுணர்வு என்ற போதனைகளைப் புகுத்தி, அரசுக்கும் தேசியத்துக்கும் தேசத்துக்கும் எதிரான மனோ பாவத்தை அவர்களிடம் புகுத்துவதும் கண்கூடு!
மாணவர்கள் போராட்டம் என்று அரசு வாளாவிருப்பதை விட, நச்சுக் கருத்து, அந்தக் குருத்துகளிடம் பரப்பிவிடப்படுகிறது என்ற மிக மிக சீரியஸான விஷயத்தை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொண்டு, இந்தப் போராட்டத்துக்கு உடனே முடிவு கட்ட வேண்டும்.