தமிழர் கலாசார விருப்பங்களை நிறைவேற்றுவேன்: மோடி உறுதி

தமிழர்கள் மீதும், தமிழர் கலாசாரத்தின் மீதும் பெருமிதம் கொள்வதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

புது தில்லி:

தமிழர்களின் கலாசார அடையாளங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் தாம் உறுதியுடன் நடவடிக்கள் எடுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக, சென்ற 2016ல் காட்சிப் படுத்தப் பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்தார் பிரதமர் மோடி. ஆனால், அந்தத் திருத்தத்துக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது பீட்டா அமைப்பு. இதனால், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்த தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி மத்திய அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டும், பொங்கல் நடைபெறும் ஜன. 14க்குப் பிறகே தீர்ப்பு வழங்க முடியும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால், இந்த வருடமும் பொங்கல் நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இயலாமல் போனது. ஜல்லிக்கட்டுக்காக தில்லியில் இருந்துகொண்டு முழுமூச்சாக செயல்பட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தாம் உறுதியளித்தபடி, இந்த முறை தம்மால் இயலவில்லை என்பதற்காக தாம் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.

இந்நிலையில் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைத் தடை செய்யும்படியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தில், திரை உலகைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு, தடியடி நடத்தப்படும் அளவுக்குக் கொண்டு சென்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், அவர்கள் கைதைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றுக் கோரி, இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நிலைமை மோசமாகவே, கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும், தமிழகமெங்கும் தாங்களாகவே சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு பேர் கலந்து கொண்ட கூட்டம், பின்னர் ஆயிரக்கணக்கில் பெருகியது. அது பின்னர் தொடர் போராட்டமாக மாறியது.

தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த இந்தப் போராட்டங்களில் பிரதமர் மோடியை வசை பாடியும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஏசியும் பதாகைகளும் முழக்கங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசினால் சென்ற வருடம் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தம்மால் உடனடியாக ஏதும் செய்ய முடியாது என்றும், மாநில அரசு இதே போன்ற வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் மோடி கூறினார். இதனை ஆமோதித்த முதல்வர் பன்னீர்செல்வம், அவ்வாறே தில்லியில் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டார். இதை அடுத்து, மத்திய அமைச்சகங்கள் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தன.

இந்நிலையில், தாம் தமிழர்கள் மீதும், தமிழர் கலாசாரத்தின் மீதும் பெருமிதம் கொள்வதாகவும், தமிழரின் கலாசார விருப்பங்களை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தம்மால் ஆன அனைத்தையும் மேற்கொள்ளும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் டிவீட்கள்: