ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் பிறப்பிப்பு: நிரந்தரச் சட்டம் கோரும் போராட்டக்காரர்கள்

குடியரசுத் தலைவர் ஒப்புதல்தான் அளித்துள்ளார், அவர் கையெழுத்திட்டு பிறப்பிக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் இது எப்போது வேண்டுமானாலும் கேள்விக்கு உள்ளாகலாம்...

சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், தங்களுக்கு நிரந்தரச் சட்டம் தேவை என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரால் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, மிருக வதைத் தடுப்புச் சட்டத்தில், மாநில அளவில் திருத்தம் செய்யும் வகையில், தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், சட்டத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு பிறகு இந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதில் ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று கையெழுத்திட்டார்.

இதை அடுத்து, இன்று மாலை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஞாயிறு நாளை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் துவக்கி வைப்பார்கள் என தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளார். நாளை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் துள்ளிக் கொண்டு செல்லும் என்று அவர் கூறினார். முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும், இது ஒரு அவசரச் சட்டம்தான் என்றும், குடியரசுத் தலைவர் ஒப்புதல்தான் அளித்துள்ளார், அவர் கையெழுத்திட்டு பிறப்பிக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் இது எப்போது வேண்டுமானாலும் கேள்விக்கு உள்ளாகலாம் என்று கூறி, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.
இதை அடுத்து, மதுரை அலங்கால்லூரில் போராட்டக்காரர்களுடன், ஆட்சியர் வீரராகவராவ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு, இடத்தை தயார் செய்ய கிரேன்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அவற்றை உள்ளே அனுமதிக்க மறுத்தனர் போராட்டக் குழுவினர். மேலும், அவசர கதியில் போட்டி நடத்துவதற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், ஆட்சியரின் பேச்சை ஏற்க மறுத்ததையடுத்து பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் அவர் தோல்வியுடன் திரும்பினார். இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.