உலகின் மிகப் பெரும் கட்சியானது பாஜக : உறுப்பினர் எண்ணிக்கை 8.80 கோடியை தாண்டியது

புது தில்லி: பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை 8.80 கோடியை தாண்டியது. இதை அடுத்து பாஜக., உலகிலேயே மிகப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக.,வை உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று அதன் தேசியத் தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். இதைத் தொடர்ந்து நாடெங்கும் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியது. உறுப்பினர் சேர்க்கையை எளிமைப்படுத்த செல்போன்களில் மிஸ்டு கால் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் பா.ஜ.க. உறுப்பினர்களாக சேர்ந்தனர். மேலும், இணைய தளம் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது. மோடியின் செல்வாக்கால் லட்சக்கணக்கானோர் பா.ஜ.க.வில் உறுப்பினர்களாக இணைந்தனர். இதன் காரணமாக பா.ஜ.க.வில் தற்போது 8 கோடியே 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் அக்கட்சி உலகிலேயே மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய கட்சியாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. அக்கட்சியில் 8 கோடியே 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதை பின்னுக்குத் தள்ளி பா.ஜ.க. முதல் இடத்துக்கு வந்துள்ளது. உ.பி.யில் அதிகபட்சமாக ஒரு கோடியே 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். குஜராத், மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 80 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் அது  எதிர்பார்த்த அளவுக்கு உறுப்பினர்களை சேர்க்க இயலவில்லை.