நிலம் கையகப்படுத்தும் சட்ட நிலைப்பாடு குறித்து பொது வாக்கெடுப்புக்கு அதிமுக தயாரா?: ராமதாஸ் சவால்

சென்னை: நிலம் எடுப்பு சட்ட நிலைப்பாடு: அதிமுக பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை – நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து நீண்ட சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். பாரதிய ஜனதாக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் போல மாறி அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், தமிழக விவசாயிகளுக்கு எதிரான அதிமுக அரசின் துரோகம் தொடரும் என்பதையே காட்டுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன் வைத்த 9 திருத்தங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாலும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சலுகை தரக் கூடாது என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதாலும் அந்த மசோதா புனிதமடைந்து விட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். அதேநேரத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டம் மிக மோசமானது என்றும் முதல்வர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். முந்தைய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் சில அம்சங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் அச்சட்டத்தின் பல பிரிவுகள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என்பதும் உண்மை. அந்த சட்டத்தின்படி விவசாயிகள் நினைத்தால் தங்களுடைய நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்க முடியும். ஆனால், இப்போதுள்ள சட்டத்தின்படி உச்ச நீதிமன்றமே நினைத்தாலும் நிலம் கையகப்படுத்தப்படுவதை தடுக்கமுடியாது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு விதிவிலக்குகளை எல்லாம் விதிகளாகவும், விதிகளை எல்லாம் விதிவிலக்குகளாகவும் காட்டி நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்தை நியாயப்படுத்த முதலமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது. முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தில் கட்டாய நிலம் எடுப்பிலிருந்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினாலும், சட்டத்தின் நான்காவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 13 மத்திய அரசு சட்டங்களின் கீழ் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இந்த சட்ட விதிகள் பொருந்தாது என்று முதலமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். ரயில் பாதை, மின்பாதை, நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டோரை மறு குடியமர்த்துதல் உள்ளிட்டவை தொடர்பான அந்த சட்டங்களின் கீழ் எடுக்கப்படும் நிலங்களின் மதிப்பு அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களின் மொத்த மதிப்பில் 5 விழுக்காட்டைத் தாண்டாது. ஆனால், மத்திய அரசு இப்போது கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி 5 வகையான பயன்பாடுகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இந்த சட்ட விதிகள் பொருந்தாது. இந்த வகையில் கையகப்படுத்தப்படும் நிலங்களின் மதிப்பு 95 விழுக்காட்டிற்கும் மேல் இருக்கும். 5 விழுக்காடு பாதிப்பை எதிர்க்கும் முதலமைச்சர், 95% பாதிப்பை ஆதரிப்பதைப் பார்க்கும் போது உழவர்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த 5 வகையான பயன்பாடுகளுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அவற்றுக்கு நிலம் எடுப்புச் சட்டத்தின் சமூகத் தாக்க ஆய்வு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறப்புக் கூறுகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் இன்னொரு வாதம் ஆகும். விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பிரிவை உருவாக்கிவிட்டு, அதை செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசிடம் கொடுத்துவிட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது,‘‘கொலை செய்யவும் தயங்காதவரிடம் கத்தியை கொடுத்திருக்கிறோம்… ஆனால், அவர் குத்த மாட்டார்’’ என்று கூறுவதைப் போல் உள்ளது. உண்மையிலேயே விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் கிராம அவைகளிடம் தான் ஒப்படைத்திருக்க வேண்டும். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் குறைகள் இருப்பதாகக் கவலைப்படும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அந்த சட்டத்தில் உள்ள குறைகளை களையும்படி போராடினால் அது நியாயமானதாக இருக்கும். அதை விடுத்து அதைவிட அதிக குறைகள் உள்ள சட்டத்தை ஆதரிக்கத் துடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மத்திய அரசின் நிலம் எடுப்புச் சட்டத் திருத்தத்தை தில்லியில் ஆதரிக்காவிட்டால், பெங்களூரில் அதன் விளைவுகள் தெரியும் என்ற அச்சத்தின் காரணமாகத் தான் இச்சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என்பது தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். இந்த உண்மையை மறைப்பதற்காக ‘விவசாயிகள் ஆதரவு’ என்ற பொருந்தாதப் போர்வையை போர்த்திக் கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. இது நல்லதல்ல. நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை ஏற்கனவே மக்களவையில் ஆதரித்த அதிமுக, அடுத்தக் கட்டமாக மாநிலங்களவையிலும் ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவை நியாயப் படுத்துவதற்காகத் தான் அச்சட்டத்தை, பாரதிய ஜனதாக் கட்சியை விட ஒருபடி கூடுதலாக ஆதரித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை & நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரிப்பது உழவர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரிய துரோகம் ஆகும். இப்படி ஒரு துரோகத்தை செய்தவர்களை தமிழக விவசாயிகள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் தொடர்பான நிலைப்பாட்டை தமிழக அரசும், அ.தி.மு.க.வும் மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வளவுக்குப் பிறகும் மத்திய அரசின் நிலம் கையகப் படுத்துதல் சட்டத் திருத்தம் விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடியது என்று முதல்வர் பன்னீர்செல்வம் கருதினால், அது குறித்து தமிழ்நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். – என்று கேட்டுள்ளார்.