ஜெயலலிதா கால் அகற்றப்படவில்லை; உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை!: மருத்துவர்கள் விளக்கம்

மருத்துவர்களைக் கொண்டு விளக்கம் அளிக்க வைப்பது, தாம் செய்த செயலை மக்களிடம் நியாயப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று சசிகலாவை குறை கூறும் மக்கள், இவற்றாலெல்லாம் அவர் மீது படிந்துள்ள கறையை எளிதில் அகற்றிவிட முடியாது

சென்னை:

அதிமுக., பொதுச் செயலராக சசிகலா பதவியேற்கவுள்ள நிலையில், சசிகலா குறித்து பொதுமக்களிடம் பரவியுள்ள சந்தேகத்தைப் போக்க வேண்டும் என்ற ரீதியில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரை வைத்து செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜெயலலிதாவை மெல்லக் கொல்லும் விஷம் வைத்து சசிகலா கொன்றுவிட்டார் என்றும், அவரது மரணம் இயற்கையானது அல்ல என்றும், ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டன என்றும், ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று கூட வெளியாகாமல் தடுக்கப்பட்டது; அவரை யாரையும் சந்திக்கவே விடவில்லை; அவரது உடல் முன்பே பதப்படுத்தப் பட்டது என்றெல்லாம் செய்திகள் உலவிக் கொண்டிருப்பதால், இவற்றை தெளிவாக்க வேண்டும் என்ற ரீதியில் இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே சென்னை ஓட்டலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், ஜெயலலிதாவுக்கு மருத்துவ முறைகளுக்கு உட்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய்த் தொற்றால் ஜெயலலிதா கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு விடுவதில் சிரப்பட்டு வந்தார்.

நுரையீரல் தொற்று இருந்தது. நோய்த் தொற்றுக்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்தோம். ரத்தத்தில் பாக்ட்ரீயா கலந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ரத்தத்தில் இருந்த பாக்ட்ரீயா மற்ற உறுப்புகளுக்கும் பரவியது. செப்சிஸ் உறுப்புகளை செயலிழக்க செய்தது. இதனால் பாதிப்பு அதிகமானது. சிகிச்சைக்குக் கொண்டு வரும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார்.

ரத்த அழுத்தம் சர்க்கரை பாதிப்பு அதிக அளவு இருந்தது. தேர்தலுக்காக கை ரேகை பதிவு செய்தோம். அப்போது அவர் சுய நினைவுடன் இருந்தார். கையில் டிரிப் ஏறியதால் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா எங்களிடம் சைகை செய்தார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஜெயலலிதா அறிந்து இருந்தார்.

டிரிக்கியோஸ்டோமி செய்தபின் அவருக்கு சுயநினைவு திரும்பியது. சுய நினைவு திரும்பியதால்தான் பிசியோதெரபிக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் கால் உள்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை. அவருக்கு எந்த உறுப்புமாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை. எங்களிடம் ஜெயலலிதா சைகை செய்தார். சிகிச்சை அறையில் ஜெயலலிதா சில அடி தூரம் நடந்தார். நோயாளிக்கு பிரச்னை என்றால் முதலில் மருத்துவர்தான் கவலைப்படுவார். கையில் வீக்கம் இருந்ததால் அவர் கைரேகை வைத்தார். எதிர்பாராதபோது திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதால் உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கான சிகிச்சை அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனது குடும்பத்தைப் பற்றி ஜெயலலிதா விசாரித்தார். ஜெயலலிதாவிடம் நான் நேரடியாகப் பேசினேன். உணவை பற்றியும், எனது குழந்தைகளை பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசினேன். சிகிச்சை முறை பற்றி சசிகலாவிடம் தினமும் விளக்கினோம். பிசியோதெரபி சிகிச்சைக்கு ஜெயலலிதா ஒத்துழைத்தார்.

சசிகலாவை தவிர ஜெயலலிதாவின் உறவினர்களும் அவரிடம் பேசினர்.  அருகில் இருந்தவர்கள் பற்றி ஜெயலலிதா அதிகம் அறியவில்லை. உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு கொண்டு செல்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் உலகத்தரமான சிகிச்சை அப்போலோவில் இருந்ததால் லண்டன் செல்லவில்லை. சிறந்த மருத்துவக்குழுவினர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அதிநவீன சோதனைகள் மூலம் பிரச்னைகள் கண்டறிந்து சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது டாக்டர்கள் இருந்தனர். ஜெயலலிதாவால் பேச முடிந்தது. ஆனால், தெளிவாக அவரால் பேசமுடியவில்லை.

இந்த நேரத்தில், நோயாளியின் புகைப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளியை புகைப்படம் எடுப்பது வழக்கமில்லை என்று கூறினார் ரிச்சர்ட் பீலே.

தொடர்ந்து, டாக்டர் பாலாஜி கூறும் போது:- தேர்தல் தொடர்பான ஆவணத்தை ஜெயலலிதா படித்துப் பார்த்தார். 22 ஆம் தேதி கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தார். ஆரம்பத்தில் அவர் காய்ச்சலுக்காகத்தான் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்தான் மற்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்தது. மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது லேசான மயக்கத்துடன்தான் வந்தார். பின்னர் மருத்துவமனையில் ஒரு வார காலத்தில் எழுந்து பேசினார். வழக்கமாக உணவு உட்கொண்டார். முதன் முறை ஆளுநர் மருத்துவமனைக்கு வந்த போது, அவரிடம் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக ஆளுநர் வந்த போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக ஆளுநர் பார்த்தார் – என்றார்.

பின்னர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறியபோது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது என்பது உண்மைதான். டிசம்பர் 6ம் தேதி அதிகாலைதான் பதப்படுத்தப்பட்டது. 15 முதல் 20 நிமிடம் வரை பதப்படுத்தும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டி இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர். உடலும் இதேபோல் தான் பதப்படுத்தப்பட்டது என்று கூறினார்

மேலும், சசிகலா, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு சிகிச்சை குறித்து தினமும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5.5 கோடி செலவானது என்றும், ஜெயலலிதா டிவி பார்த்தது, தயிர் சாதம் சாப்பிட்டது எல்லாம் உண்மைதான் என்றும் டாக்டர் பாபு கூறினார்.

ஜெயலலிதா டிச. 5ஆம் தேதி தான் மரணம் அடைந்தார் ஜெயலலிதாவுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இவ்வாறெல்லாம் மருத்துவர்களைக் கொண்டு விளக்கம் அளிக்க வைப்பது, தாம் செய்த செயலை மக்களிடம் நியாயப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று சசிகலாவை குறை கூறும் மக்கள், இவற்றாலெல்லாம் அவர் மீது படிந்துள்ள கறையை எளிதில் அகற்றிவிட முடியாது என்றும் கூறியுள்ளனர்.