தேனிக்காரரை துரத்திவிட்டு ஆண்டிப்பட்டியில் அடியெடுத்து வைக்கவா?

தேனி மாவட்டத்துக்காரரான ஓ,பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து துரத்தி விட்டு, சசிகலா அங்கே போட்டியிட்டால் மாவட்டத்துக்காரர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.

சென்னை:
முதல்வராக வேண்டும் என்ற தீர்மானத்துடன் காய் நகர்த்தி வெற்றி கண்டுள்ள சசிகலாவுக்கு, எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என்று மாநில உளவுப்பிரிவு போலீஸார் களஆய்வு செய்து அறிக்கை தயாரித்தனர்.

சசிகலா போட்டியிடுவதற்கு வசதியான தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மூத்த தலைவர்களும் தயாரித்து வருகிறார்கள். அதில் உசிலம்பட்டி தொகுதி முதலிடத்தில் உள்ளது. ஆண்டிப்பட்டி, திருமங்கலம் தொகுதிகளும் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய இரு தொகுதிகளும் தேனி மாவட்டத்தில் உள்ளது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கொடுத்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஆண்டிப்பட்டி தொகுதி. இந்தத் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதே காரணம் என்றும் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால் சசிகலாவுக்கும் இந்தத் தொகுதியே சிறந்தது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. விரைவில் ராஜினாமா செய்வார் என தெரிகிறது. இருப்பினும்,, தேனி மாவட்டத்துக்காரரான ஓ,பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து துரத்தி விட்டு, சசிகலா அங்கே போட்டியிட்டால் மாவட்டத்துக்காரர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.