விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் என அஞ்சினார் ஜெயலலிதா: மனோஜ் பாண்டியன் பகீர்

மக்கள் அனைவரின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கே கொண்டு செல்வார்கள்.

சென்னை:

தன்னை விஷம் வைத்து கொன்று விடுவார்கல் என்ற அச்சம் தனக்கு உள்ளதாக ஜெயலலிதா தன்னிடம் தெரிவித்தார் என்று, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் கூறினார்.

தமிழக முன்னாள் சபாநாயகர் பிஎச்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் இருவரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். தமிழகத்தின் தற்போது நடைபெற்று வரும் அசாதாரண சம்பவங்களின் பின்னணி குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
அப்போது, மனோஜ் பாண்டியன் கூறியதாவது:

2011 டிச.19க்கு ஒரு வாரத்திற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் 45 நிமிடம் என்னிடம் பேசினார். அப்போது, நான் முதல்வராக இருக்கிறேன். ஒரு பெருங் கூட்டம் முதல்வர் பதவியில் இருந்து என்னை நீக்க சதி செய்கிறது. அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றப் போகிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து சில நாட்களில் அந்தக் கும்பலை கட்சியிலிருந்தும் வீட்டிலிருந்தும் நீக்கினார். அதன் பின்னர், கட்சியின் சட்டப்பிரிவுச் செயலாளர் என்ற முறையில், கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை நான் வழங்கினேன்.

மார்ச் 30க்குப் பிறகு, சசிகலா மன்னிப்புக் கடிதம் ஒன்று கொடுத்து விட்டு, மீண்டும் உள்ளே வந்தார். அவர் ஜெயலலிதா ஆசி பெற்று உள்ளே சென்றார். அப்போது 5 பேரை மாடிக்கு ஜெ., அழைத்தார். அதில் நானும் ஒருவன். அப்போது என்னிடம், அவர்களை அரசியலில் ஈடுபடுத்த மாட்டேன். பெங்களூருவில் அவர்கள் செய்த சதியை மறக்கவில்லை. ஆனால், எனக்கு ஒரு உதவியாளர் தேவை. அதனால் அவர்களை நான் அனுமதித்தேன்.

பிறகு, துக்ளக் ஆசிரியர் சோவையும் என்னையும் அழைத்த ஜெயலலிதா, எனக்கு பயமாக உள்ளது. இந்தக் கும்பல் என்னை விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயமாக உள்ளது என்றார். அதற்கு 1.5 கோடி தொண்டர்களும் உங்களுக்குச் சொந்தமானவர்கள். மக்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். உங்களுக்கு அச்சுறுத்தல் வராது எனக் கூறினேன்.

தற்போது அதிமுக., சட்டவிதி 19 – 8 என்ற விதியின் கீழ் சசிகலாவை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்ததாகக் கூறுகின்றனர். அதிமுகவின் கொள்கைகளை வகுப்பதுதான் பொதுக்குழு. அது தொண்டர்களைக் கட்டுபடுத்தும் எனக் கூறப் பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி தற்போது அவர்கள் பொதுச் செயலாளராகத் தேர்வானதாகக் கூறுகின்றனர். 20 – 2 என்ற விதியில் பொதுச் செயலாளர் என்பவர், தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட முடியும்.

தற்காலிகப் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யக்கூடிய எந்த அதிகாரமும் இதில் வழங்கப்படவில்லை. சட்ட விதிகள் 205 என்ற விதிப்படி, பொதுச் செயலர் காலியாக இருந்தாலும், தாற்காலிகமாகத் தேர்வானவர் நிரந்தரமாகத் தேர்வு செய்யப்படுவார் என்பது விதி. ஜெயலலிதா, சசிகலாவை கவுன்சிலர் ஆக்கியதுகூடக் கிடையாது.

போயஸ் கார்டன் அதிமுக தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். போயஸ் கார்டன் வீடு, விருது, கார் ஆகியவற்றை ஜெயலலிதாவின் நினைவாக, தமிழக மக்கள், தொண்டர்கள் வணங்க வேண்டும் என்பதற்காக அங்கே நினைவகம் அமைக்கப்பட வேண்டும்.

25 நாளில் பொதுச் செயலாளர், 60 நாளில் முதல்வர் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஜெயலலிதாவிடம் எப்படி அன்பாக இருந்திருக்க முடியும்? ஆசையில்லாதவர்களாக இருக்க முடியும்? ஜெயலலிதாவுடன் ராஜம் என்பவர்தான் நீண்ட வருடங்கள் உடன் இருந்தார். அவர் ஜெயலலிதாவின் 13 வயதில் இருந்து மரணமடையும் வரை ஜெ.,வுடன் தான் உள்ளார். அவர் தான் தாயாக உள்ளார்

மக்கள் அனைவரின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கே கொண்டு செல்வார்கள். மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக பொதுச் செயலாளருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கக்கூட அதிகாரம் கிடையாது. நிர்வாகிகள் யாரையும் நீக்கவும் முடியாது. நியமிக்கவும் முடியாது. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு என்பதுகூட தேர்தல் ஆணையம் முன்பு கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.