சசிகலாவால் ராஜினாமா; மனம் திறந்தார் பன்னீர்செல்வம்: தனியாகப் போராட சூளுரை

ஒட்டு மொத்த நாடும் அ.தி.மு.க., மீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும் என எண்ணி, என்னால் எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. சசிகலாவை முதல்வராக்க கட்டாயப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியதால் நான் ராஜினாமா செய்தேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியே போராடுவேன்

சென்னை:

சசிகலாவால் தான் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும், தான் எவர் எதிர்த்தாலும் தனியாகப் போராடுவேன் எனவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்., திடீரென தியான மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரையில் அமர்ந்து 30 நிமிடங்களுக்கும் மேலாக தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து திடீர் தியானம் செய்தார். அவர் திடீர் தியானத்தில் ஈடுபட்டதால்,  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  நாளை அல்லது நாளை மறுநாள் சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் பன்னீர்செல்வம் மவுன புரட்சியில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகத்தினர், கட்சியினர் பெருமளவில் அங்கே கூடியிருந்தனர்.

முன்னதாக, எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம், அதிமுகவை விட்டு விலகுகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது.

சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், குறிப்பாக எதிர்க்கட்சிகளும் போற்றும் வகையில் முதல்வர் பதவியை சரியாக நிர்வகித்து வந்த நிலையில்,  ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென முதல்வர் பதவியை தியாகம் செய்ய சசிகலா வற்புறுத்தினார். இதனால் அதிருப்தியில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், சசிகலாவுக்கு ஓபிஎஸ் இன்று திடீர் கடிதம் அனுப்பினாராம். அதில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தாராம். இதைப் பார்த்ததும் போயஸ் கார்டன் அதிர்ச்சியில் உறைந்ததாக அதிமுக வட்டாரங்கள் கிசுகிசுத்தன.

இன்று இரவு 9 மணி அளவில்  ஜெயலலிதா சமாதிக்கு வந்த பன்னீர்செல்வம், தானும் சமாதி நிலையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். கண்களை இறுக மூடி, உடலில் எந்த வித அசைவும் அற்று, தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர் அரை மணி நேரம் கழித்து, கண்களைத் திறந்து, நீர் வழிய இருந்த கண்களைத் துடைத்துக் கொண்டு, மெல்ல எழுந்தவர், சமாதியை ஒரு முறை சுற்றி வந்து அப்படியே வெளியில் வந்தார். அவரிடம் கேள்வி கேட்பதற்கும், தியானம் செய்ய வந்ததன் நோக்கம் என்ன என்று கேட்பதற்கும் செய்தியாளர்கள் வற்புறுத்தி மொய்த்தனர்.

சிறிது நேர தயக்கத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் முன்னர் வந்த பன்னீர்செல்வம், பின் மனம் திறந்து, தன் மனத்தில் உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்தார். அவரது பேட்டியின் மூலம், அவர் சசிகலா குடும்பத்துடன் நேரடி மோதலுக்குத் தயாராகி விட்டார் என்பதையே வெளிப்படுத்தியது.

சசிகலா குடும்பத்தினர் மீது சரமாரியாக புகார்களை சுமத்திய அவர்,  சசிகலாவின் ஆதிக்கத்திற்கு இதுவரை பணிந்து போய்க் கொண்டிருந்ததையும் வெளிப்படுத்தி, தனது ஸ்டைலில் அமைதியான முறையில் ஒரு புரட்சியை மெரீனாவில் நடத்திவிட்டார்.

இதன் மூலம், சசிகலா கும்பலால் அவர் தொடர்ந்து மறைமுகமாக மிரட்டப்பட்டு வந்தார் என்பதை நாட்டுக்கு சொல்லிவிட்டார்.  அவரை பதவியிலிருந்து தூக்கி விட்டு முதல்வர் பதவியில் சசிகலாவை அமர வைக்க சசிகலா குடும்பத்தினர் தீவிரமாக முயன்று வந்தனர். படிப்படியாக காய்களை நகர்த்தி வந்தனர். ஆனால் அதை தனது பாணியில் அமைதியாக எதிர்கொண்டு வந்தார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில்தான் அவருக்கு மத்திய பாஜகவின் முழுமையான ஆசியும், ஆதரவும் கிடைத்தது. அது கொடுத்த தெம்பில் தொடர்ந்து சசிகலாவை முடிந்தவரை சமாளித்துப் பார்த்தார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆனால் அண்மையில் அவரிடமிருந்து முதல்வர் பதவியை சசிகலா கும்பல் பிடுங்கியது. சசிகலாவை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள்  தேர்வு செய்தனர். அப்போதும் கூட புன்னகையுடன்தான் இருந்தார் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் இன்று அளித்த பேட்டி அவரது மனதை உலுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா இறந்தது குறித்து சசிகலா தரப்பு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அழவில்லை,. சோகமடையவில்லை என்று கூறியிருந்தார் பி.எச்.பாண்டியன்.

ஓ.பி.எஸ்ஸின் பேட்டி மூலம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக உடையும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பாஜகவின் முழுமையான ஆதரவுடன் அவர் சசிகலாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கலாம். மீண்டும் முதல்வர் பதவியை அவர் கைப்பற்றி சசிகலா கும்பலை அடியோடு விரட்டவும் முயற்சிக்கலாம். அதிமுகவையும், தமிழக அரசையும் மத்திய அரசு மற்றும் பாஜகவின் துணையுடன் ஓ.பன்னீர் செல்வம் கைப்பற்றலாம். முதல்வர் ஒருவர் இதுபோல கடற்கரையில் போராட்டம் நடத்துவது மிகவும் அசாதாரணமானதுதான்…

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியவை:

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி, அம்மா நினைவிடத்திற்கு வந்து, அம்மா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளேன். என் மனசாட்சி உந்தப்பட்டதால் இங்கு வந்து சேர்ந்தேன்.

அம்மாவின் ஆன்மா என்னை உந்துதல் படுத்தியது. எனவே உங்களிடம் நான் நின்று கொண்டுள்ளேன். புரட்சித் தலைவி அம்மா அவர்கள், நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, அவருடைய உடல்நிலை, 70 தினங்கள் கழித்த பிறகு மோசமான நிலையை எட்டியபோது, என்னிடம் வந்து மிகவும் மோசமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.

கட்சியும், ஆட்சியும், காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்ற நிலையில், என்னை வந்து சந்தித்து கேட்டபோது, மாண்புமிகு அம்மா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாற்று ஏற்பாட்டுக்கு என்ன தேவை என்று கேள்வி எழுப்பினேன். அசாதாரண சூழ்நிலை எழுந்தால் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னதை நான் கேட்டு, அரை மணி நேரம், அம்மா நிலையைக் கண்டு அழுது புலம்பினேன்.

என்ன சொல்ல வருகிறீர்கள் என மீண்டும் கேட்டபோது, அம்மா இல்லாவிட்டால், கழக பொதுச்செயலாளர் முதல்வர் ஆகிய பொறுப்பை ஏற்று நடக்க உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். என்ன சொல்கிறீர்கள் என கேட்டேன். கழக பொதுச்செயலாளராக கழக அவைத்தலைவர் மதுசூதனன் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். முதல்வராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். நான் அதை மறுத்தேன். வற்புறுத்தலுக்கு பிறகே ஏற்றேன்.

ஜெயலலிதா இறந்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் வந்து திவாகர் சார் உங்களிடம் ஒன்று சொல்லச் சொன்னார் என்று கூறினார். நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்டீர்கள். மற்றவர்கள் அமைச்சர்கள் ஆகிவிட்டனர். என் அக்காவை நான் அழைத்துக் கொண்டு ஊருக்கே போகிறேன் என்று கூறினாராம். சரி என்ன செய்ய வேண்டும் நாம் என்று கேட்ட போது, உங்களை முதல்வர் பதவியை விட்டுத்தரச் சொன்னார் என்று சொன்னார். எனக்கு வருத்தமாக இருந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது நற்பெயரை காப்பாற்றும வகையில் செயல்பட்டேன். வார்தா புயல் வந்தபோது, சிறப்பாக செயல்பட்டு, நான்கு நாட்களில் மீண்டு வந்தோம். ஜல்லிக்கட்டு பிரச்னை வந்தபோது, மத்திய அரசின் உதவியுடன் மிக விரைவில் சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆந்திராவுடன் நீர்ப் பிரசனையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இப்படி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரின் பெயரை காப்பாற்றும் வகையில் செயல்பட்டது சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும எரிச்சலை ஏற்படுத்தியது

மற்றவர்கள் முன்னிலையில் சசிகலா தரப்பினர் இகழ்ச்சியாக பேசினர். அவமானப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியே ராஜினாமா செய்ய வைத்தார்கள். ஒட்டு மொத்த நாடும் அ.தி.மு.க., மீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும் என எண்ணி, என்னால் எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. சசிகலாவை முதலவராக்க கட்டாயப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியதால் நான் ராஜினாமா செய்தேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியே போராடுவேன்… என்று தெளிவாக அமைதியாகக் கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.

முதல்வரின் இந்த மௌனக் கலைப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.