சசிகலா குற்றவாளி; 4 வருட சிறை; தேர்தலில் நிற்க 10 ஆண்டு தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது. இனி அவர்கள் மேல் முறையீடு செய்ய வா ய்ப்பு இல்லை

புதுதில்லி:

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கியது. மேலும் ரூ.10 கோடி அபராதமும் விதித்தது. இதனால், சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து, அவரை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்குமே பொருந்தும். ஆனால் அவர் இறந்ததால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலையே சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம், இன்று உறுதி செய்தது. பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம், சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 1996ல் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27 ல் தீர்ப்பு அளித்தார். ஜெ.,க்கு 4 ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்; மற்ற மூன்று பேருக்கு, 4 ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே நான்கு பேரும், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 21 நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கில் ஜெ., உள்ளிட்ட நான்கு பேர் மூலம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நான்கு பேரையும் விடுவித்து, 2015 மே, 11ம் தேதி தீர்ப்பு அளித்தார்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு அளிப்பதை, 2016 ஜூன், 7 ம் தேதி ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் இன்று, இரண்டு நீதிபதிகளும் தீர்ப்பு அளித்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது. இனி அவர்கள் மேல் முறையீடு செய்ய வா ய்ப்பு இல்லை என கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்தார்.

சசிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாபோது, 21 வருடங்களுக்கு பின் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும் என்றார்.

இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் சொகுசு விடுதிக்குள் போலீசார் நுழைந்தனர். அந்த ரிசார்ட்டிற்குள் 200க்கம் மேற்பட்ட அதிவிரைவுப்படை போலீசார் உள்ளே சென்று தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிதறி ஓடினர்.