மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தல் : நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலை வரும் மே 14க்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டது. பிறகு, 2016 டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும் படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மனு, நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது, ‘உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘எப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போகிறீர்கள்?’ என நீதிபதிகள் கேட்டனர்.

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது; மே, 15ல் நடத்த உத்தேசிக்கிறோம்” என்றார். இதையடுத்து, உறுதியான தேர்தல் தேதியை தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு, டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது.

இன்று விசாரணைக்கு வந்த போது, மே 15க்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தேர்தல் நடவடிக்கைகளை ஏப்ரல் 15ம் தேதிக்குள் துவங்கி, மே 14க்குள் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை மே14ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.