கிரிஜா வைத்யநாதன் மாற்றப்படுவார்?

இவ்வாறு சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளியிடம் தமிழக அரசின் முக்கியமான முடிவுகள், அரசாங்க ரகசியங்கள் காண்பிக்கப்பட்டு, அவர் ஒப்புதலுடன் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலை

சென்னை:
தலைமைச் செயலராக இருக்கும் கிரிஜா வைத்யநாதன் விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா அதிமுக., பொதுச் செயலர் ஆனார், முதல்வர் பதவிக்கு முயன்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால், நான்கு வருட சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.

அதற்கு முன்னதாக அவர் தன் சகோதரர் தினகரனை அதிமுக.,வின் துணைப் பொதுச் செயலராக நியமித்தார்.

இந்நிலையில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் இன்று பொறுப்பெற்றார்.

இதனிடையே பெங்களூர் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்த தினகரன், பெரிய பட்டியலுடன் அவரை சந்தித்தார். அதில், ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்ற பட்டியலும் அடங்கும். இவ்வாறு சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளியிடம் தமிழக அரசின் முக்கியமான முடிவுகள், அரசாங்க ரகசியங்கள் காண்பிக்கப்பட்டு, அவர் ஒப்புதலுடன் தமிழகத்தில் ஆட்சி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பட்டியலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தார் தினகரன்.

அந்தப் பட்டியலில், முதல் பெயரே கிரிஜா வைத்யநாதனின் பணியிட மாற்றம்தான் இருந்ததாம். ஆனால், தற்போது, கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதால், இதனைச் சரிசெய்ய பெரும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், உடனே இதைச் செய்தால் மேலும் அவப் பெயர் ஏற்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயங்கினாராம்.

இருப்பினும், மன்னார்குடி குடும்ப உறவுகளின் நெருக்கடிக்கும் சசிகலாவின் கட்டளைக்கும் அடிபணிந்து போக வேண்டிய நிலையில் முதல்வர் இருப்பதால், விரைவில் அடுத்த அதிரடியாக

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மாற்றப்படுவார் என்றும், நிதித்துறை செயலர் சண்முகத்துக்கு அந்த வாய்ப்பு வரும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.