வெள்ளைத் தோல் இல்லாவிடில் சோனியாவை தலைவராக ஏற்பரா? – கருத்துக் கூறிய அமைச்சரை பதவிநீக்க காங்கிரஸ் கோரிக்கை

giriraj-singh-bjpஹாஜிபூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த பாஜகவின் அமைச்சர் கிரிராஜ் சிங்கை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. சோனியா காந்தி மட்டும் வெள்ளைத் தோல் கொண்டிருக்கவில்லை எனில், அவரை காங்கிரஸ்காரர்கள் கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்று, கிரிராஜ் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இவ்வாறு அநாகரிகமாகக் கருத்து தெரிவித்திருக்கும் கிரிராஜ் சிங்கை அமைச்சரவையில் இருந்து மோடி நீக்க வேண்டும்; இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங்… “ராஜீவ் காந்தி ஒரு நைஜீரியா நாட்டு பெண்ணை திருமணம் செய்திருந்தால்… அவர் வெள்ளைத் தோல் கொண்டிருக்கமாட்டார். அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்றுக் கொள்ளுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்குள்ளார் என்பதற்கு, மாயமான மலேசிய விமானத்துடன் ஒப்பிட்டு கேலி செய்தார் கிரிராஜ். சோனியா காந்தி தொடர்பாக, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கிரிராஜ் சிங்குக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கிரிராஜ் சிங்கிடம் அவருடைய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, என் கருத்தினால் சோனியா காந்தி மற்றும் ராகுல்ஜீ காயம் அடைந்திருந்தால், நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஊடகங்களே இதனைப் பெரிது படுத்துகின்றனர் என்றார் அவர். இந்நிலையில் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. “பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதற்காகவே அவரை அமைச்சரவையில் சிலரை வைத்துள்ளார், ஒருவேளை பீகார் மாநிலத்துக்கு பாஜகவுக்கு நல்ல தலைவர் இல்லை என்றும் நான் நினைக்கிறேன்,” என காங்கிரஸ் கட்சித் தலைவர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கிரிராஜ் சிங்கின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்ட அறிக்கையில், பைத்தியத்தின் எல்லை, வரம்பு மீறிய கருத்து. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது என்றார்.