விடுமுறை நாளில்கூட மணல் கொள்ளை: கரூர் அதிகாரியின் பொறுப்பற்ற பதில்களால் விவசாயிகள் கொந்தளிப்பு

SAND-karur1 கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 8 இடங்களில் மணல் அள்ளி வருகின்றனர். இதில் செகண்ட் சேல்ஸ் எனப்படும் மணல்தான் தற்போது விற்கப்படுகிறது. பொதுப் பணித் துறையிடம் வங்கியின் டி.டி எடுத்துக் கொடுத்தால்கூட செகண்ட் சேல்ஸ்ஸில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தான் விற்கப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் மணல் கரூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உள்ளூர் ஏற்றுமதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்யப்படும் இந்த பல கோடி ரூபாய் மணல் விற்பனையில் அரசியல்வாதிகள், உள்ளாட்சிப் பிரமுகர்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கடத்தல் மணல் லாரிகளைத் தொடர்ந்து பிடித்த வண்ணமாக உள்ளனர். மதுவிற்கு எப்படி ஒரு தனிப்பட்ட போலீஸ் பிரிவு உள்ளதோ, அதே போன்று நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் கனிம வள மணல் கொள்ளை போவதைத் தடுக்கவும் ஒரு தனிப் பிரிவு போலீஸாரை நியமித்தால் தினமும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை தமிழக அரசு காப்பாற்றலாம். SAND-karur4 அந்த அளவுக்கு தினமும் பல கோடி ரூபாய் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்பது பரவலாகப் பேசப்படும் செய்தி. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே பல ஆயிரம் டி.எம்.சி குடிநீரை சேமித்து வைக்கும் கிடங்காக இயற்கையால் செய்யப்பட்ட ஆற்று மணலை காப்பாற்ற எந்த ஒரு யோசனையையும் முன்வைத்ததில்லை. இதை செயல்படுத்த எந்த ஒரு அரசும் தொடர்ந்து தயங்கியே வருகிறது. இந்த நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் ஆற்றில் நீரோட்டத்துக்கு மணல் இருக்காது. நாமே பல ஆறுகளை இழக்கும் நிலை நிச்சயம் ஏற்படும். விவசாயிகள் கடந்த 28 ஆம் தேதி காவிரி ஆற்றை காப்பாற்ற தமிழகம் முழுவதும் பந்த் அறிவித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதே விவசாயிகள் இந்த காவிரி ஆற்றை காப்பாற்ற ஒரு சட்டி மணல்கூட அள்ளாமல் பார்த்துக்கொண்டால் நம் எதிர்கால சந்ததியையும், நம் பல ஆறுகளையும் காப்பாற்றிவிட முடியும். SAND-karur3 கேரள அரசு மாநிலத்தில் மணல் அள்ளினால் குண்டர் சட்டம் பாயும் என்ற விதியை கடந்த 1988 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அங்கு இன்றும் அந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஆளும் அ.தி.மு.க.வோ, எதிர்க்கட்சியான தே.மு.தி.க, தி.மு.க வோ இதன் பேரில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். இதில் தெரிவது மணல் கொள்ளைக்கு அனைவருமே ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுவதுதான்! இது ஒருபுறம் இருக்க அகிம்சையை போதித்த மஹாவீரர் ஜெயந்தியான இன்று மாநில அரசு மற்றும் மத்திய அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மதுபானக் கடை, இறைச்சிக் கடை என அனைத்துக்கும் விடுமுறை அளித்துள்ளது. ஆனால், அரசு மணலை எடுக்கும் மணல் கொள்ளைக்கு மட்டும் விடுமுறை அளிக்கவில்லை. SAND-karur2 எப்போதும் போலவே இன்றும் கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மணல் லாரிகளில் மணல் கொள்ளையடிக்கபட்டு வருகிறது. இது குறித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சட்டநாதனிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது, எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்ளுங்கள் என செய்தியாளர்களிடம் பொறுப்பற்ற வகையில் பதிலளித்தார். விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவது எப்போது நிறுத்தப்படும்? கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவேயில்லை!