Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்!

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்!

ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர். திருவிளக்கு முன்பு சிவ பக்தர்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடி

தில்லை சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வே திருமஞ்சனம். ஆனியில், உத்திர நட்சத்திரத்தில் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு செய்விக்கப் பெறும் அபிஷேக நிகழ்வே, ஆனித் திருமஞ்சன விழாவென சிறப்பிக்கப் படுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு பெருமானுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.

சிதம்பரம், திருவாவடுதுறை உள்ளிட்ட நடராஜப் பெருமான் சிறப்புற விளங்கும் சிவத் தலங்களில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனி திருமஞ்சன விழா மிகப் புகழ்பெற்றது. நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான இரண்டு விழாக்களில் ஒன்று மார்கழி திருவாதிரை. மற்றது ஆனி உத்திர திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். ஆனி – மார்கழி மாதங்களில் மட்டுமே நடராஜர் வீதி உலா வருவார். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் நடைபெறுகிறது. இங்கே ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம். பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். ஆனி திருமஞ்சன நாளுக்கு முந்தைய நாள் நடராஜர் தேரில் எழுந்தருள்கிறார்.

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித் திருமஞ்சன உத்ஸவத்தை முன்னிட்டு, பக்தர்களின் கரகோஷத்தோடு தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை (ஜூன் 26) மகாபிஷேகம் நடைபெறுகிறது.

ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் துவங்கியது. ஜூன் 25ம்தேதி 9-ம் நாளான இன்று(ஜூன் 25) கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு 5 தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இன்று மாலை கீழவீதி தேர்நிலையை அடைகின்றன.

தேர்களுக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர். திருவிளக்கு முன்பு சிவ பக்தர்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடிச் சென்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version