spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாசுதந்திர தினத்தில் புதுக்கட்சி: 'என் வழி தனி வழி’ எனும் ரஜினியின் கணக்கு எடுபடுமா?

சுதந்திர தினத்தில் புதுக்கட்சி: ‘என் வழி தனி வழி’ எனும் ரஜினியின் கணக்கு எடுபடுமா?

- Advertisement -

சென்னை:

தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு ரஜினி காந்த். ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு தலைவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் களம் தற்போது வெற்றிடம் கண்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பலரும் முயன்றாலும், ரஜினி என்ற இமேஜ்தான் இதற்கு சரியாக வரும் என்று ரசிகர்களும் இன்னும் அரசியல் வட்டாரத்தில் பலரும் கருதுவதால், இந்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், சுதந்திர தினத்தன்று, புதுக் கட்சி அறிவிப்பை வெளியிட ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும், கட்சிக் கொடியை இரு தினங்களுக்கு முன் வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி அண்மையில் தன் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, ‘அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் போருக்கு ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும்’ என அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் தொழிலதிபர் ஒருவர் ரஜினியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது ரஜினி தன் கட்சிக் கொடியையும், அதில் இடம்பெறும் ‘லோகோ’வையும் தெரிவித்துள்ளார். எனவே, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று, புதிய கட்சியின் அறிவிப்பை ரஜினி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதனிடையே நடிகர், நடிகையரும் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனாவும், நமீதாவும் ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாகத் தெரிவித்தனராம். ரஜினி கட்சி துவங்கினால், அதில் இணைவதற்கு, அ.தி.மு.க., வின் முக்கியப் புள்ளிகளும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.,வைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும் ரஜினியின் கட்சிக்குத் தாவலாம் எனக் கூறப்படுகிறது.

ஊழல் புரையோடிப் போயுள்ளது, தமிழகத்தில் சிஸ்டமே சரியில்லை என்றெல்லாம் ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினி காந்த், ஊழல்கறை படிந்து மீண்டும் மீண்டும் அரசியல் ஒன்றையே தொழிலாகக் கொண்டிருக்கும் இத்தகைய கட்சியினரையே தமது கட்சியில் சேர்த்து, அதையும் ஊழல் கட்சியாகவா நடத்தப் போகிறார் என்று கேட்பவர் பலர்.

இந்நிலையில், ரஜினியை பாஜக.,வில் சேர வருமாறு மாநிலத் தலைமையும் கட்சியினர் சிலரும் ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், ரஜினி தனிக் கட்சி தொடங்கினால் தாக்குப்பிடிப்பாரா என்பதே அரசியல் நோக்கர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

ரஜினிக்கு ஆலோசனை சொல்ல தற்போது துக்ளக் ஆசிரியர் சோ போன்ற தீர்க்கதரிசன நபர்கள் இல்லாததாலும், ஊழல் புரையோடிய சில பத்திரிகை ஆசிரியர்களிடமே ரஜினி ஆலோசனை கேட்பதாலும், அவரது முயற்சி வெற்றி பெறாமல் போவதோடு, அது அவருக்கு மட்டும் தோல்வியாக முடியாது, தமிழகத்தின் மாற்றத்துக்கே ஒரு தோல்வியாக முடியக் கூடும் என்றும் சிலர் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துக்ளக் இதழில் அரசியல் கட்டுரைகள் எழுதி வருபவரும், தி ஹிந்து இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவருமான பத்திரிகையாளர் ஆர்.நடராஜன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்துகளை எழுதி வருகிறார். அவர் கூறும் அரசியல் அரசியல் அறிவுரை, ரஜினி புதுக் கட்சி தொடங்குவதை விட வேறு கட்சியில் இணைந்து செயலாற்றுவதே சிறந்தது என்பதுதான்…

பத்திரிகையாளர் ஆர்.நடராஜன் இது குறித்துக் கூறுபவை…

சினிமாகாரர்களுக்கு பணமும் புகழும் அலுத்து விட்டால் அதிகாரம் செலுத்தும் அரசியல் களத்தின் மீது ஆசை வருகிறது. நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வருவார் என்று 1992ல் எழுதினேன் (நாழிகை லண்டன்) அதற்குப் பல வருஷங்களுக்குப் பிறகு நுழைந்தார். காரணம் அரசியல் ஆசை அல்ல. ஒரு குடும்பப் பிரச்சினையைத் தீர்க்க அவரது சினிமா செல்வாக்கோ பணமோ கொஞ்சமும் உதவவில்லை. எனவே அரசியல்வாதிகளை நாடினார், அப்போதுதான் சினிமா புகழை பணத்தை விட வலிமையானது என்பதைப் புரிந்து கொண்டார். மிகவும் பிரமாதமாக சினிமாடிக்காக ப்ரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்தார். சில நாள் மந்திரியானார். அப்புறம் சினிமாவும் போச்சு, அரசியலும் போச்சு. இதெல்லாம் ரஜனிக்குத் தெரியாதா?

எதிர்பாருங்கள். ஆகஸ்ட் வரை தமிழ் நாட்டின் மொட்டை நிர்வாகம் தொடரும். அதன் பிறகு கவர்னர் ஆட்சி. இடையில் ரஜினியின் புதுக் கட்சி. அத்துடன் ஒபி எஸ் அணி பாஜக கூட்டு. சசிகலா கும்பல் ஒரங்கட்டப்படும். திமுக இப்போது உள்ள பலத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். உதிரிக் கட்சிகள் பெரிய கட்சி களுடன் ஒட்டிக் கொண்டாலும் தேறாது. மக்களுக்கு அதே கஷ்டம் தொடரும். நாற்காலிகளில் புதியவர்கள் அமர்வார்கள். நாளை முதல் சில நாற்காலிகள் பேசும் .

இப்போது எங்கும் ரஜினி என்பதே பேச்சு. தொலைக்காட்சி விவாதங்களும் அவரைப் பற்றியே. அரசியல் ஆசை அவரை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. களமெங்கும் திருடர்கள் என்பதும் தலைமை வெற்றிடமும் அவருக்கு சாதகமானது. தனிக் கட்சியோ, பாஜக தலைமையோ அவர் முதல்வர் பொறுப்பு ஏற்காமல் நடுநிலை அறிவாளி ஒருவரை முதல்வராக்கி வெளிவட்ட நபராக நிர்வாகத்தைக் கண்காணிக்கலாம். சில சமயம் அவர் வெளிக்காட்டும் துறவு மனப் பான்மையை அரசியலில் மேற்கொள்வது அவருக்கும் நல்லது. மாநிலத்திற்கும் நல்லது.

சினிமா ஹீரோ ஹீரோயின்களையே ஆட்சி யாளர்களாக்குவது என்பது நமது 40 வருஷ கால சரித்திரம். ரஜினி காந்தின் பேச்சும் நடவடிக்கையும் இதே மாயை தொடருமோ என்று மருள வைக்கிறது. அரசியலுக்கு வரும் முன்பு எம்ஜியார் தன் வருமானத்தில் தான தர்மங்கள் செய்தார். முதல்வராகிக் கொஞ்ச காலம் யோக்கியமானவராக இருந்தார். லஞ்சம் வாங்குவது தெரியாமல் வாங்கினார்.

ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையிலேயே பணப் பிரச்சினைகள் உண்டு. அவர் தனிக் கட்சி ஆரம்பித்தால் இன்றைய சூழலில் ஜெயிக்கலாம். ஆனால் நல்லாட்சி தருவதற்கு அவர் நல்லவர்களைத் துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும். நான் லஞ்சம் வாங்க மாட்டேன் யாரும் ஊழல் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்படியே செயல்பட வேண்டும்.

தனிக் கட்சி ஆரம்பிப்பதை விட ரஜனிகாந்த் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு மாநிலத் தலைவராகலாம். இது பாஜகவுக்கும் நல்லது. Image உள்ள தலைவருடன் கட்சிக்கு தொண்டர் பலமும் கிடைக்கும் .பாஜக ஆட்சி வருவதும் சாத்தியம். வேறு வழியில்லை.

தமிழ்நாட்டு அரசியல் கடந்த ஐம்பது வருஷங்களுக்கும் மேலாக சினிமாவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தொடக்கத்தில் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், ரஜினி ஆகியோர் வெறும் பாத்திரங்களாக நடித்தார்கள். பிறகு இவர்களை உயர்த்தவே கதை எழுதப்பட்டது. இலட்சியத் தலைமைப் பாத்திரங்கள் அநீதியைக் கண்டித்து நீதியைத் தூக்கிப் பிடிப்பவர்களாக இவர்களுக்கென்றே கதை எழுதப்பட்டது. அதனால் Image building அறிமுகமாகியது.

எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த போது சில தான தர்மங்களைச் செய்ததால் பிரபலமானார். சினிமாவில் அவர் கதாநாயகன், சினிமா துறையில் சர்வாதிகாரி. கருணாநிதியிடம் ஏற்பட்ட பகை காரணமாகத் தனிக்கட்சி தொடங்கினார். அவருடைய சினிமா பாடல்கள், வசனங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் அவர் கட்சியைத் தொடங்கியதும் அமைப்பு ரீதியான பலத்தைக் கொடுத்தன.

கருணாநிதியை நான் விமர்சனம் செய்தாலும் அவரை மதிப்பவன். அவ்வப்போது சந்திப்பவன். முக்கிய விஷயங்களைப் பேசுவதுண்டு. ஒருமுறை எம்.ஜி.ஆரை ஏன் விலக்கினீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை இப்போது வெளிப்படுத்த முடியாது. அது தனிப்பட்ட உரையாடல். வை.கோ.வை நீக்கியது, நாஞ்சில் மனோகரன் வெளியேறியபோது தடுக்காதது பற்றியும் கருணாநிதியிடம் பேசியிருக்கிறேன்.

இளைஞர் நலம், விளையாட்டு என்று ஏதாவது ஒரு துறையில் கருணாநிதி எம்.ஜி.ஆரை மந்திரியாக்கி இருக்கலாம். மந்திரி சபையில் அவர் தன்னை மீறி செல்வாக்கு பெற்றுவிடுவாரோ என்று கருணாநிதி என்ற அரசியல்வாதி யோசித்திருந்தால் அவரளவில் அது தவறல்ல.

தனக்கு வேண்டிய வெண்ணிற ஆடை நிர்மலா இடம்பெற முடியாத மேலவையைக் கலைத்தவர் எம்.ஜி.ஆர். அவரும் தன் தகுதிக்கு மீறிய புகழைப் பெற்றார். தவறுகளையும் தகிடுதத்தங்களையும் சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டார். ரஜினியும் விஜயகாந்தும் தீமையை எதிர்க்கும் ஹீரோக்களாகப் பிற்காலப் படங்களில் நடித்தார்கள். சினிமாவே நிஜம் என்று நம்பி ஓட்டுப் போடும் மக்களின் சதவிகிதம் தேர்தல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கிறது.

சினிமா ஒரு மாயை என்பதும் இலவசங்களை இந்த முதல்வர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்திலிருந்து கொடுக்கவில்லை, அது சகோதர மக்களின் வரிப்பணம் என்பதை வாக்காளர்கள் புரிந்து கொள்ள இதுவரை தமிழ்நாட்டு பா.ஜ.க. என்ன செய்தது? சினிமா கவர்ச்சியால் இன்று பா.ஜ.க. தேசியத் தலைமையே ரஜினியை அழைக்க வேண்டியிருக்கிறது. மற்ற நடிகர்கள் அரசியலில் நுழைந்து செய்யாத கெடுதலை இவர் செய்யப் போவதில்லை. கவர்ச்சி தேவைப்படுகிறது. இருக்கட்டும் என்ற மூத்த பா.ஜ.க. தலைவர்களின் நினைப்பு தவறுதான். ஆனாலும் வேறு வழியில்லை.

– ஆர்.நடராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe