உங்களின் மாயமானவரைத் தேடுங்கள்: எங்களின் இல்லாத குறைகளைத் தேடாதீர்கள்: அமித் ஷா

பெங்களுரு: மாயமான உங்கள் கட்சித் தலைவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள், எங்களிடம் இல்லாத குறைகளைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள் என்று காங்கிரஸாருக்கு அறிவுரை கூறினார் பாஜக தலைவர் அமித் ஷா. மேலும், மத்தியில் மோடியின் ஆட்சி இன்னும் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இன்று காலை பெங்களூருவில் உள்ள லலித் அசோக் ஓட்டலில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜக‌ மாநிலத் தலைவர்கள் என 111 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானதல்ல. பாஜக., விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. எதிர்க் கட்சியினர், திட்டமிட்டே நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிராக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். எனவே, விவசாயிகளிடம் உண்மையை எடுத்துரைக்க நாங்கள் விரிவான பிரசாரத்தைக் கையாள்வோம். பாஜக., விவசாயிகளின் நண்பன். விவசாயிகள்தான் எங்களுக்கு பெருமளவில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். எனவே, விவசாயிகள் மத்தியில் பாஜக குறித்த தவறான பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டாம். காங்கிரஸ் கட்சி உண்மையில் தன்னம்பிக்கை இழந்து திக்கு திசை தெரியாமல் தவித்து வருகிறது. அதனால்தான் இவ்வாறு காணமுடியாத குற்றங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறது. ஏதாவது தேடியே ஆக வேண்டும் என விரும்பினால், அவர்கள் அவர்களின் தலைவரைத் தேடலாமே” என்றார் அமித் ஷா. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மைக் காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் காங்கிரஸாரே உள்ள நிலையில், அவர் பெயரை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் அமித் ஷா இவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், மோடியின் அரசு இன்னும் பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறினார். “மோடி அரசு வந்து விட்டது. இனி அடுத்த 10-20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருப்பது உறுதி. பிரதமர் நரேந்திர மோடி புதிய அரசியல் கலாச்சாரத்தையும் புதிய சூழலையும் உருவாக்கியுள்ளார். முன்பு நிலவிய கொள்கை முடக்கம் முடிந்து விட்டது. ஐ.மு. கூட்டணியின் 10 ஆண்டு கால ஊழல் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. இப்போது ஊழல் என்றே பேச்சுக்கே இடமில்லை” என்று குறிப்பிட்டார் அமித் ஷா. தில்லி தோல்வி குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், அடுத்த வெற்றியை நோக்கி கட்சியினர் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “கடந்த முறை பிஹார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால் மக்களின் முடிவை தூக்கி எறிந்து கூட்டணியிலிருந்து அவர்கள் தற்போது பிரிந்து சென்றுள்ளனர். எனவே மக்களை ஏமாற்றியது நாங்கள் அல்ல அவர்கள்தான். தற்போது பிஹாரில் நடைபெறுவது ‘இரண்டாம் காட்டு தர்பார்’. இதனால்தான் பிஹார் மக்கள் கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்” என்று பிகார் மாநில நிலை குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டார் அமித் ஷா. இந்தக் கூட்டத்தில், அருண் ஜேட்லி, எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் அமித் ஷா பேசும்போது கேட்டுக் கொண்டிருந்தனர்.