தாலி – அவரவர் தனிப்பட்ட உரிமை: கருணாநிதி

karunanidhi சென்னை: தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். தி.க.வின் தாலியறுப்புப் போராட்டம், தனியார் டி.வி. ஒன்றில் தாலி குறித்த சர்ச்சை என தாலியை மையப் படுத்தி எழுந்துள்ள அரசியல் சூழலில் அவரது கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் கருணாநிதி. கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில்…

  • தாலி குறித்த சர்ச்சை பற்றி?.

** “பிள்ளையாரை வணங்கவும் மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கவும் மாட்டேன்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல, தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாம் என்று கழற்றி வைத்து விடுவதும் என்பது அவரவர் விருப்பத்தையும், நம்பிக்கையையும், தனிப்பட்ட உரிமையையும் சார்ந்தது.

  • நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லாமல் நிறைவேற்ற முடியாத நிலையில், மீண்டும் ஒரு அவசரச் சட்டமாகவே கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு முடிவெடுத்திருக்கிறதே?.

** இந்தச் சட்டத்திற்கு இந்திய அளவில் விவசாயிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நிலையில் பா.ஜ.க. அரசு எதற்காக நில எடுப்பு மசோதாவில் பிடிவாதம் காட்டுகிறது என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சினையில் பிரதமர், பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது சரியான முடிவில்லை என்பதே என் கருத்து. சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையைப் பாதுகாத்திடத் தவறினால், விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நாடெங்கிலும் உள்ள எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் எதிர்க்கும் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொள்ளாமல் இருப்பதுதான் பா.ஜ.க. அரசுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தித் தரும் என்பதை மனதிலே கொண்டு, பிரதமர் மோடியே முன்வந்து அதற்கான அறிவிப்பினைச் செய்து பிரச்சினையை முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

  • உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து திரும்ப முடியாமல் தமிழக நர்சுகள் தவிப்பது பற்றி?.

** ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இன்றுகூட சுமார் 40 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் அங்கிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். ஆனாலும் மேலும் சிலர் அங்கே தவித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தமிழக அரசினர் உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு ஏமன் நாட்டில் எஞ்சியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப முயற்சி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

  • சூரியசக்தி மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம், 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பதாகவும், அதனால் மின் வாரியத்திற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் வந்துள்ளது என்றும் செய்தி வந்திருக்கிறதே?.

** தமிழ்நாடு மின் வாரியம், சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான கட்டண ஆணையை 12-9-2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 12-9-2015-க்குள் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து, மின் உற்பத்தியைத் துவக்குவோரிடம், மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை 7.01 ரூபாய் விலையில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று நேற்றிரவு சூரிய சக்தி மின் கட்டண ஆணையை 1-4-2016 வரை, அதாவது 6 மாத காலத்திற்கு நீட்டித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு யூனிட் 7.01 ரூபாயாக இருந்த சூரியசக்தி மின் விலை, தற்போது 5.84 ரூபாயாகக் குறைந்துள்ள போது, அதிக விலை கொடுத்து வாங்க என்ன அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது?. இவ்வாறு அதிக விலை கொடுத்து ஒப்பந்தக்காலமான 25 ஆண்டுகளுக்கு மின் வாரியம், மின்சாரம் வாங்கினால் 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களுக்கு நல்லது செய்யத்தானே உள்ளது? பெருமளவு கடன்களில் தள்ளாடும்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முறைகேடுகள் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றனவே; எங்கே போய் முடியுமோ? என்று கூறியுள்ளார்.