spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவாரிசுரிமைப் போர்..!பயாலஜிக்கல் வாரிசா? ஐடியாலஜிக்கல் வாரிசா?

வாரிசுரிமைப் போர்..!பயாலஜிக்கல் வாரிசா? ஐடியாலஜிக்கல் வாரிசா?

- Advertisement -
dmk nalvar
dmk nalvar

வர்ணாஸ்ரம தர்மம் உயர்ந்ததா இல்லையா?

இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கவேண்டுமென்றால் வர்ணாஸ்ரம தர்மம் என்றால் என்ன என்பது முதலில் தெரிந்திருக்கவேண்டும்.

பிராமணர் (கற்றல், கற்பித்தல்), க்ஷத்ரியர் (அரசாட்சி), வைஸ்யர் (வியாபாரம், உழவு), சூத்திரர் – சாராம்சர் (எளிய மக்கள்) என நான்கு அடுக்குகளாக மனிதர்களைப் பிரிக்கிறது.

இந்த நால்வருக்கும் அவரவருக்கான இடங்களில் முழு மரியாதை, அதிகாரம், உரிமை தரப்படுகிறது. கோவிலில் பிராமணருக்கு, அரச சபையில் மன்னருக்கு, வணிக வளாகத்தில் வைஸ்யருக்கு, நாலாம் வருணத்தினருக்கு அவருடைய பணி இடத்தில் என அவரவர் கோட்டையில் அவரவர் மேல் நிலையில் இருக்கிறார்கள்.

கோவில் கருவறைக்குள் பூஜை செய்யும் பிராமணருக்கு மட்டுமே அனுமதி. சிலை செய்த சிற்பிக்குக் கூட அனுமதி கிடையாது. அதே போல் சிற்பியின் உளியை எடுத்து செதுக்கும் உரிமை கருவறைக்குள் செல்ல முடிந்த பிராமணருக்கும் கிடையாது.
இங்கே சமத்துவ மறுப்பு அல்ல; நிபுணர்களிடம் பொறுப்பை விட்டுவிடு என்பதுதான் இருக்கிறது.

இதில் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருக்க முடியாது. ஏனென்றால் இன்றும் உலகம் முழுவதிலும் இருக்கும் நிறுவனங்களில் இப்படியான படிநிலையையும் அணுகுமுறையையும் பார்க்க முடியும்.

பேட்டிங் கோச் ஒருவரை பெளலர்களுக்கு கோச்சிங் செய்ய அனுமதிக்கவில்லையென்றால் உடனே அவர் ஒடுக்குமுறை என்று சொல்லமாட்டார். சொல்லக்கூடாது.

நால் வர்ண முறையின் முக்கியமான வேறு சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் அது பிராமணர், வைஸியர் மற்றும் எளிய மக்கள் எனப் பெரும்பாலான மக்களைப் போர்களில் இருந்து பிரித்துவைத்தது. க்ஷத்ரியர்கள் என ஒரு பிரிவை உருவாக்கி அவர்களை மட்டுமே போரில் ஈடுபட வைத்தது.

ஐரோப்பிய தேசமானது கடைநிலைப் பணியாளர்களையே போர்களில் முதலில் அனுப்பி பலியிட்டது. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களையே போரில் ஈடுபடவைத்துத் தன்னைத் தற்காத்துக் கொண்டது. அந்த மகத்தான தியாகத்தை காலில் போட்டு நசுக்கவும் செய்தது. வர்ணாஸ்ரமம் அப்படி ஒருபோதும் செய்யவில்லை.

அடுத்ததாக இந்த வர்ணாஸ்ரமமானது தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு இலக்குகளை மையமாகக் கொண்டது. மன்னர்களை போர்களைவிட கோவில்களைக் கட்டுவதில் அதிக அக்கறைகொள்ளச் செய்தது. வைஸ்யர்களை குளங்கள், அன்னதானங்கள், ஆதுர சாலைகள் அமைப்பதில் ஈடுபடுத்தியது. நாலாம் வருணத்தினரின் நல் வாழ்க்கையை மன்னரையும் வைஸ்யரையும் நல்வழிப்படுத்தியதன் மூலம் மேம்படுத்தியது.

கிருஷ்ணா குடிநீர் திட்டத்தில் கமிஷன் அடிக்க நினைத்திருந்த கருணாநிதி சாய்பாபாவைச் சந்தித்ததும் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார் என்றால் அதுவே ஒரு துறவி க்ஷத்ரியனுக்கு காட்டும் நல் வழி. இதைத்தான் வர்ணாஸ்ரமம் முன்வைக்கிறது.

கிரேக்கம் முன்வைக்கும் ஃபிலாசஃபர் கிங் என்பவர் முழு சர்வாதிகாரி. இந்து தர்மம் சொல்லும் வரணாஸ்ரமத்தில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதில்லை. அந்த மையம் அழிந்த அமைப்பே அதன் பலம். அதுவே அதை ஆண்டாண்டு காலமான உள் மற்றும் புறத் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.

இந்த வர்ணாஸ்ரம வழிமுறையை மிக அழகாகக் கடைப்பிடிக்கும் அமைப்பு எது தெரியுமா? திக. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். அவை அழிவு சதிகள் என்பது வேறு விஷயம். ஆனால் அவர்கள் கடைப்பிடிப்பது நல்ல நயமான வர்ணாஸ்ரம தர்மத்தைத்தான்.

வர்ண அணுகுமுறையை மறுதலிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அந்தக் கட்சிகளில் குல மூப்பர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு முழு மரியாதை. எம்.எல்.ஏ. எம்பிகளுக்கு அடுத்தகட்ட மரியாதை, 200 உபிஸ்களுக்கு ஒரு மரியாதை (கம்யூனிஸ்ட் கட்சியில் சூட்கேஸ் வாங்கும் தோழர்களுக்கு ஒரு மரியாதை, நடுத்தெருவில் நின்று உண்டியல் குலுக்கும் அப்பாவித் தோழர்களுக்கு அவர்களுக்கு உண்டான மரியாதை) என அடுக்குகள் மிக மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டே உள்ளன.

நிஜ வர்ணாஸ்ரமத்தில் நாலாம் வருணத்தினருக்கு இன்றைய பல அமைப்புகளைவிட மேலான மரியாதை இருந்ததென்பது வேறு விஷயம். இன்னும் சொல்லப்போனால், பிரிட்டிஷார் காலத்தில் கூட 500 சொச்ச இந்து சமஸ்தானங்களில் இருந்த மன்னர்களில் 72% பேர் இன்று சூத்திரர்கள் என்று சொல்லப்படும் பிரிவைச் சேர்ந்தவர்களே என்று மிகத் தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
எனவே, இந்து வர்ணாஸ்ரமம் என்பது பிற எந்த அமைப்பையும்விட மேலானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்து வர்ணாஸ்ரம தர்மத்தின் மிகப் பெரிய குறையாகச் சொல்லப்படுவது என்னவென்றால் அது வர்ணத்தைப் பிறப்புடன் பிணைத்துவிட்டது என்பார்கள்.

வர்ணம் பிறப்பால் வருவதல்ல; குணத்தாலும் செயலாலும் வருவது என்று கீதையிலும் வள்ளுவத்திலும் ஒரே போல் சொல்லப்பட்டிருக்கிறது. அதே நேரம் இரண்டுமே பிறப்புக்கு மிகுந்த முக்கியத்துவத்தைத் தரும் வரிகளையும் கொண்டிருக்கின்றன.

’’ஆரம்பகட்டத்தில் அனைவருக்கும் கல்வி தரப்பட்டு அதன் பின் திறமை விருப்பத்துக்கு ஏற்ப வர்ணம் தீர்மானிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அனைவரும் கூடிக் கலந்து பேசி வர்ணங்களை விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ப மாற்றிக்கொள்ள முடிந்தது. இது வர்ணாஸ்ரமத்தின் முதல் கட்டம். அதன் பின் நான்கு வருடங்கள் என்பது வாழ் நாள் முழுவதும் என்று ஆனது. இது வர்ணாஸ்ரமத்தின் இரண்டாம் கட்டம். அதன் பின் தந்தையிடமிருந்து மகனுக்கு என்று ஆனது. இது வர்ணாஸ்ரமத்தின் மூன்றாம் காலகட்டம். இந்த மூன்றாம் கட்டத்தில் இருந்தே ஜாதிகள் உருவாகி வலுப்பெற்றன’’.
– இது டாக்டர் அம்பேத்கர், வர்ணாஸ்ரமத்தின் வரலாறாகச் சொல்வது.

அநேகமாக வர்ணாஸ்ரமத்தின் முதல் இரண்டு கட்டங்கள் மீது அவரைப் போலவே யாருக்கும் எந்த விமர்சனமும் இருக்கமுடியாது. ஏனென்றால் அதுதான் இன்று நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.

பிறப்பின் அடிப்படையில் வர்ணம் தீர்மானமாகவேண்டும் என்று சொன்னால் கடைநிலைப் பணியில் இருப்பவர் அதை மட்டுமே செய்யவேண்டிவந்துவிடும். மேலான வேலையைச் செய்ய முடியாமல் போய்விடும் என்று சொல்லித்தான் அதை ஒடுக்குமுறை அமைப்பாகச் சொல்கிறார்கள்.

இத்தனைக்கும் தொழில் புரட்சியும் மன்னராட்சி ஒழிப்பும் நடப்பதற்கு முன்புவரை உலகம் முழுவதுமே அப்பா வேலையைத்தான் மகன் பார்த்து வந்திருக்கிறார். என்றாலும் அது பாரதத்தில் இந்து மதத்தில் மட்டுமே இருந்ததாகச் சொல்லி நிலை நிறுத்திவிட்டார்கள். உலகம் முழுவதுமே செய்த ஒரு செயலுக்கு நாம் மட்டுமே பதில்சொல்லியாக வேண்டிவந்திருக்கிறது.

செய்வனத் திருந்தச் செய்… செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லும் தமிழ் ஆதி பொன்மொழிகள் எல்லாம் தொழில்களில் மேல் கீழ் கிடையாது என்ற அடிப்படையில் சொல்லப்பட்டவையே.
அதோடு இதில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் தொழில்கள் மற்றும் தொழில் பிரிவுகள் குறித்த இப்படியான பொன்மொழிகளை உருவாக்கிய காலத்தில் சாக்கடையை அள்ளுதல், மலம் அள்ளுதல் போன்ற இழிவான கடைநிலைப் பணிகள் இருந்திருக்கவே இல்லை.

சிந்து சரஸ்வதி நாகரிக காலகட்டத்தில் காணப்படும் கழிப்பறை – கழிவு நீர் அகற்ற கால்வாய் அமைப்பானது இன்றைய சாக்கடை அள்ளும் தொழிலைவிட பல மடங்கு மேலானது. மனித மலத்தை மனிதர் அள்ளும் சமீபத்திய கால வழிமுறையைவிடப் பல மடங்கு மேலானது. ஒருவேளை அன்று அந்த வேலைகள் இருந்திருந்தால் நிச்சயம் அன்றைய ஞானிகள் அந்த வேலைகள் செய்பவர்களுக்கு மேலேறி வர வேறு வழிகள் செய்துகொடுத்திருப்பார்கள்.

ஐரோப்பிய நாடுகளிலும் ஆசிய நாடுகளிலும் ஃபிளெஷ் அவுட் டாய்லெட் கண்டுபிடிக்கப்படுவதுவரை மனிதர்களே அள்ளும் நிலையை வர்ணாஸ்ரம கால ஞானிகள் அனுமதித்திருக்கமாட்டார்கள். அவர்கள் காலத்தில் இருந்திராத ஒரு கொடுமைக்கு அவர்களைப் பொறுப்பாக்குவது மிகப் பெரிய தவறு.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் காந்தியின் மற்றும் பிரிட்டிஷாரின் காலடியில் அமர்ந்ததால் நேரு, நேருவின் மகள் என்பதால் இந்திரா, இந்திராவின் மகன் என்பதால் ராஜீவ், ராஜீவின் மனைவி என்பதால் அண்டொனியொ மெய்னோ, ராஜீவின் மகன் என்பதால் ராகுல் என தலைமைப் பதவியைப் பெற்றிருக்கிறார்கள்.
கருணாநிதியின் மகன் என்பதால் ஸ்டாலின், கருணாவின் குடும்பத்தினர் என்பதால் மாறன், கனிமொழி, ஸ்டாலினின் மகன் என்பதால் உதயநிதி என குலத் தொழிலாக அரசியல் தலைமையில் இருந்துவருகிறார்கள்.

இந்தக் கேடு கெட்ட க்ஷத்ரிய குலத்தினர், பிறப்பின் அடிப்படையில் தலைமை தீர்மானமாகாத மடாலயங்கள், ஆர்.எஸ்.எஸ்., பாஜக போன்ற அமைப்புகளை வர்ணத்தைக் காப்பாற்றும் அமைப்பு என்று விமர்சிக்கிறார்கள். பொலிட் பீரோவில் பட்டியல் ஜாதியினரைச் சேர்க்காத மேல் ஜாதி கம்யூனிஸ்ட் கட்சி கூடச் சேர்ந்து ஜால்ரா தட்டுகிறது.

ஒரு பதவிக்கு ஒருவரை அவருடைய திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கவேண்டும். பிறப்பின் அடிப்படையில் அல்ல என்று சொல்வதன் பின்னால் இருக்கும் நல்ல நோக்கம் என்னவென்றால், தந்தையைப் போலவே மகன் புத்திசாலியாக இருப்பார் என்று சொல்லமுடியாது. மகனைவிட புத்திசாலியாக வேறொருவர் இருந்தால் அவருக்கு வாரிசு உரிமை இல்லை என்று சொல்லி தலைமைப் பதவியை மறுத்துவிடக்கூடாது என்ற காரணங்களினால்தான்.

அதோடு கலப்பு என்பதுதான் வீரியமான புதிய தலைமுறையை உருவாக்கும். எனவே பிறப்புக்கு அதாவது ஒருவகையில் இனத்தூய்மைக்குத் தரும் முக்கியத்துவம் சரியல்ல என்பதுதான் இவற்றின் பின்னால் இருக்கும் முக்கிய காரணம்.
ஆனால், இந்த இடத்தில் வேறொன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பயலாஜிக்கல் வாரிசு என்பதைத்தான் வேண்டாம் என்கிறார்களே தவிர ஐடியலாஜிக்கல் வாரிசுதான் தலைமை ஏற்க வேண்டும் என்பதில் எந்த சமரசமும் செய்வதில்லை.

நேற்றைய காலத்தில் பயலாஜிக்கல் வாரிசுதான் ஐடியலாஜிக்கலாகவும் பொருத்தமாக இருப்பார் என்று கருதினார்கள். இன்று அப்படி அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், இரண்டிலுமே நடைமுறை அளவில் ஒரே ஐடியாலஜிதான் முன்னெடுக்கப்படும். எனவே இதில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இதுவும் ஒருவகையான இனத்தூய்மையே. இங்கும் கலப்பு எதுவும் இல்லை.

யார் வேண்டுமானாலும் தலைமையை ஏற்கலாம் என்றால் மாறுபட்ட ஐடியாலஜி உள்ளவரும் தலைமைக்கு வரலாம் என்று இருந்தால்தான் அது சுதந்தரமான அமைப்பு என்று பொருள்.

இந்து விரோதம் தான் திகவின் நாத்திகக் கொள்கை. அதே அசட்டுக் கொள்கை கொண்டவரே அடுத்த தலைவராக வரவேண்டும் என்று சொல்வதைவிட நாத்திகம் என்றால் எல்லா மதங்களையும் விமர்சிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் ஒருவர் தலைமைக்கு வரவேண்டும். அதுதான் சரியான மாற்று. அப்படி இல்லையென்றால் வெறுமனே பயலாஜிக்கல் வாரிசை மாற்றுவதல் மட்டும் எந்தப் பலனும் இல்லை (திகவில் பயலாஜிக்கல் வாரிசுதான் அடுத்த தலைமை என்பது வேறு விஷயம்).

பிற கலாசாரங்களை அழித்து கிறிஸ்தவத்தை உலகில் நிலையை நாட்டவேண்டும் என்பது கிறிஸ்தவத்தின் ஐடியலஜி. போப்பின் மகனுக்குப் பதிலாக வேறொரு புதிய போப்பை முறைப்படித் தேர்ந்தெடுத்து அதே கொள்கையை முன்னெடுப்பதால் அது குல வழி சிந்தனையில் இருந்து மீறிச் செல்வதாக அர்த்தமில்லை.

பயாலஜிக்கல் வாரிசுக்குப் பதிலாக ஐடியலாஜிக்கல் வாரிசு வருகிறார். அவ்வளவுதான் (வெளியில் தெரிந்தவரையில். ஒருவேளை முந்தைய ஏதோ போப்பின் மகனாகக்கூட இருக்கலாம்).
எனவே இங்கே வர்ண – குல சிந்தனையைத் தாண்டி எதுவும் நடைமுறையில் இல்லை. வெறுமனே வர்ணத்தின் பலவீனமான வடிவத்தைப் பழிப்பதைவிட்டு விட்டு அதன் உண்மையான நிலையை அடையப் பாடுபடுவோமாக.

போப்பாண்டவனின் உதாரணத்தை வைத்தே சொல்வதென்றால் உலகில் உள்ள பல மதங்களைப் போலவேதான் கிறிஸ்தவமும். எனவே மத மாற்றத்தையும் அதன் மூலமான கலாசார அழிப்பையும் நிறுத்திவிட்டு, வாழு… வாழ விடு என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் போப்பே தலைமைக்கு வரவேண்டும். அப்போதுதான் அது உண்மையான வர்ணாஸ்ரமத்தைப் பின்பற்றுவதாக ஆகும். இல்லையென்றால் பலவீனமான வர்ணாஸ்ரமத்தை பலவீனமான குலத் தொழிலைப் பின்பற்றுவதாகவே ஆகும்.

சுருக்கமாகச் சொல்வதானால் நாம் தற்போது தூய சக்திகளின் இனத் தூய்மையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மோசமான சக்திகளின் இனத் தூய்மையை முன்னெடுத்துவருகிறோம். தூய சக்திகளின் இனக் கலப்பு என்பது லட்சியம் என்றால் தூய சக்திகளின் இனத் தூய்மையினூடாகத்தான் அதை அடைய முடியும்.

  • கட்டுரை: பி.ஆர்.மகாதேவன் (எழுத்தாளர்)

1 COMMENT

  1. அவரவருக்கு சாதகமாக.கருத்து சொல்லலாம் உண்மை அதுவல்ல.எல்லோரருக்கும் அறிவு இருக்கிறது.உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனபது நாம் ஏற்படேத்தி கொண்டது. போப் எனபவர். திருமணம் ஆகாதவர் அதுவே தெரியாமல் கட்டுரை.எழுதுவது கேவலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe