21/10/2019 11:10 PM
அரசியல் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?

-

- Advertisment -
- Advertisement -

பத்திரிகைத் துறைக்கு வந்த புதிதில்… நேரம் கிடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வயதானவர்கள், மூத்தவர்கள், சுதந்திரப் போர் வீரர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என… அவர்களின் இல்லங்களுக்குச் சென்று சற்று நேரம் அமர்ந்து பேசி விட்டு வருவது ஒரு வழக்கமாயிருந்தது. அவர்களின் அனுபவங்கள், கதைகள், இலக்கிய உலகு, அந்நாளைய அரசியல் சூழல் என்று பலவும் அசை போடப்படும்! இவ்வாறு எத்தனையோ பேர் வீடுகளுக்குச் சென்று கதைத்திருந்தாலும், சிலர் இன்னும் என் மனசில் தங்கியிருக்கிறார்கள். அவர்களில் கு.ராஜவேலு, தேவநாராயணன், பி.சி.கணேசன் என சிலர் மிக முக்கியமானவர்கள்!

2003 என்று நினைக்கிறேன். ஒரு ஞாயிறு!

அன்றும் அப்படித்தான்! விருகம்பாக்கம் பக்கம் போவோம் வா… என்றார் நண்பர். வழக்கம்போல் என் வண்டியில் அவரின் வீட்டுக்குச் சென்றோம்.

விருகம்பாக்கம் ரெட்டி தெருவில் இருந்த அவரின் வீட்டுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தபோது, நண்பர்தான் அறிமுகப் படுத்தி வைத்தார். சீராம்.. இவர்தான் பி.சி.கணேசன். நெறய்ய புத்தகங்கள் எழுதியிருக்கார். திமுக., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்னு அந்தக் கால வரலாறுலேர்ந்து எல்லாம் அத்துபடி. நிறைய எழுதுவார். சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதியிருக்கார் என்று அவரைப் பற்றிச் சொல்லிவிட்டு, என்னைப் பற்றியும் அவரிடம் அறிமுகப் படுத்தினார்.

அப்போது எனக்கு வயது 27. மஞ்சரி டைஜஸ்ட் இதழாசிரியப் பணியில் இருந்தேன். துறுதுறு வயது. துடுக்குத்தனமுள்ள பேச்சு. வயதுக்கு மரியாதை கொடுப்பேன் என்றாலும், தயக்கமற்ற கலகல பேர்வழி! அப்போதுதான் உலகத்தை உற்று நோக்க ஆரம்பித்திருந்தேன். எனவே கேள்விகள் நிறைய கேட்பேன்.

என் துடுக்குத்தனத்தை ரசித்தவர், உள்ளே வாங்க பேசுவோம் என்று உள்ளறையில் அமர்ந்து பேசத் தொடங்கினார். ஒரு புத்தகத்தை எடுத்து எனக்குப் பரிசளித்தார். அது அவர் எழுதிய ‘பேசும் கலை’ என்ற புத்தகம். உடனிருந்த நண்பரிடம் ரகசியங்கள் போல் சில பேசினார். அது எனக்குப் புரியவில்லை என்றாலும் ஏதோ கேட்டுக் கொண்டேன். அப்படியே பேச்சு, திமுக.,வின் தொடக்கம், அதற்கும் முன் திக.,வின் தொடக்கம் என, ஊழல், லஞ்சம், முறைகேடுகளின் தோற்றுவாய் குறித்த சங்கதிகளாகச் சென்றது…

அப்போது அவர் தெரிவித்த ஒரு செய்தி… ஆழமாகவே பதிந்து விட்டது.

பெரியார் ஏன் காங்கிரஸில் இருந்து வெளியில் வந்தார் தெரியுமா? – கேட்டார்.

ம்.. சொல்லுங்க – என்றேன்.

அவருடனான பேச்சில், அவர் சொன்ன சுதந்திரப் போராட்ட வரலாற்றுத் தகவல்களை சற்றே கோ(ர்)வையாக்கி இங்கே தருகிறேன்.

எல்லாம் 1925ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவங்கள்தான்! இந்திய வரலாற்றில் அந்த வருடம் பல நிகழ்வுகளுக்குச் சாட்சியாய் அமைந்துவிட்ட வருடம்தான்!

1915ல் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்திறங்கினார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் காந்தியின் போராட்டச் செய்திகள் இந்தியாவில் முன்னரே பரவியிருந்தது. இந்தியா வந்த அவருக்கு கோகலே போன்றோருடன் தொடர்பு ஏற்பட்டு, காங்கிரஸ் பேரியக்கத்தில் காந்தி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வந்த குறுகிய காலத்தில் அவரின் புகழ் நாடு முழுதும் பரவியது. அவர் வந்து சேர்ந்து தீவிரம் காட்டிய அந்த 1919ம் வருடத்தில்தான் ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் சம்பவம் என அடுத்தடுத்து நிகழ்வுகள். எனவே அப்போது போராட்டம் காந்தி தலைமையில் மாறியது.

இந்த நேரத்தில்தான், ஈவேரா., (1919 – 20) தானும் காந்தி, காங்கிரஸ் கொள்கை என ஈடுபாடு காட்டி காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். தாமும் பெரிய பொறுப்புகளுக்கு வருவோம் என்ற ஆசையுடன் காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களில் பங்கெடுத்தார்.

1921ல் ஒரு போராட்டம் வந்தது. அன்னிய நாட்டு துணி பகிஷ்கரிப்பு போராட்டம். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டம். அதில் ஈவேரா., நாயக்கர் பங்கேற்றார். அடுத்த சில நாட்களில், கள்ளுக்கடை மூடல் போராட்டம் வந்தது. தொடர்ந்து 1921-22ல் ஒத்துழையாமை இயக்கம், அடுத்து மது அருந்துதல் சட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராட்டங்கள். இவற்றில் எல்லாம் அவர் கைதாகி சிறை சென்று மீண்டார். அந்த நேரத்தில்தான் அவர் (1922ல்) சென்னை மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நேரம்… 1924ல் டி.கே.மாதவன் தலைமையில் வைக்கம் பகுதியில் ஆலய நுழைவுப் போராட்டம் ஏற்பாடானது. அங்கே ஹரிஜன மக்கள் (தலித், ஈழவர்) கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும், கோயிலுக்குள் நுழையவும் தடை இருந்தது. இப்போராட்டத்தில் நாடு முழுதுமிருந்து காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில், இயக்கப் பொறுப்பில் இருந்த ஈவேரா., நாயக்கரும் கலந்து கொண்டார். அவர் உடனே கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தபோதிலும், அவருடன் வந்த தொண்டர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நேரம், அப் போராட்டத்துக்கு வெற்றியும் கிடைத்தது. இதை வைத்து, தமிழகத்தில் அவருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பெயரை அங்கங்கே கூட்டங்களில் இட்டு அழைத்து, பரப்பினார்கள்! எல்லாம் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்ததால் சாத்தியமானது.

சிறை சென்று, காங்கிரஸ் இயக்கத் தொண்டர்கள் ஆதரவுடன், பெரிதாக வளர்ந்து வந்த ஈவேரா., நாயக்கருக்கு இந்த நிலையில்தான் ஒரு சிக்கல் எழுந்தது. ஒரு விதத்தில் மன சலிப்பும் ஏற்பட்டது. சில முறை சிறை சென்று வந்ததில், அந்த அனுபவம், அவருக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நேரத்தில், காங்கிரஸ் இயக்கத்தை மீறி வேறு சில நட்புகளும், வேறு விதமான மன விகார எண்ணங்களும் அவருக்குள் தலைதூக்கின. ஈவேரா நாயக்கருக்கும், வரதராஜுலு நாயுடு போன்றோருக்கும் தொடர்புகள் வலுப்பெற்றன. ஏற்கெனவே, சிறு வயதில் ஒரு முறை தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், துறவறம் பூண்டுவிடலாம் என்ற எண்ணத்துடன் காசி சென்றவருக்கு சில கசப்பான சம்பவங்கள்! (அந்தணரல்லாத) ஒரு தென்னிந்தியக் குழு மடத்தில் பசியோடு சென்ற போது உணவு கொடுக்காமல் விரட்டப்பட்டதில், விரக்தி; வெறுப்பு! அது ஏற்படுத்திய அடி மன ஆழ நினைவு, சாதியக் கண்ணோட்டம் என்ற பார்வையிலேயே காங்கிரஸ் இயக்கத்தின் நிகழ்வுகளையும் பார்க்கத் தூண்டியது.

இந்த நேரத்தில், அங்கே இன்னொரு நிகழ்வு பலமாகக் குறுக்கிட்டது. அது… வ.வே.சு. ஐயருக்கு விளைவித்த கொடூர நெருக்கடிகள்! அது என்ன?

அந்தணராகப் பிறந்திருந்த போதும், தீவிர ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருந்தார்கள் பாரதமாதா சங்கத்தினர். வ.வேசு. ஐயர், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், பாரதி என ஒரு கூட்டம்! ஆங்கிலேயர்களால் துரத்தல்களுக்கும் கொடுமைச் சித்ரவதைகளுக்கும் ஆளான வ.வே.சு. ஐயர், 1922ல் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். வருடங்கள் பல ஓடி ஓடிக் களைத்து, வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில், வ.வே.சு. ஐயர் திருநெல்வேலி ஜில்லா சேரன்மகாதேவியில் தாமிரபரணிக் கரையில் ஆசிரமம் ஒன்றை நிறுவினார். அதற்கு ‘பாரத்வாஜ ஆசிரமம்’ என்று பெயர் வைத்து, அடுத்த தலைமுறையைத் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு அப்போதைய ஈவேரா., குழுவின் அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது.

ஆசிரமத்தில் அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும் கொடுக்கப்பட்டது. என்றாலும், புதிதாகச் சேர்ந்த சில பிராமணக் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டும் என்றனர். வேறு வழியின்றி, அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார். இருப்பினும், ஐயரும், அவர் பெண், மற்ற பிராமணக் குழந்தைகளும், மற்ற எல்லாக் குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், சில பிராமணப் பிள்ளைகளுக்கு தனியாக உணவு அளித்தது ஜாதிப் பிரச்னையாக உருவெடுத்து பிரமாண்டமாக வளர்ந்தது. வ.வே.சு., ஐயர் மீது ஜாதி வெறியன் என்ற முலாம் பூசப்பட்டது. பூசியவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றவர்கள். இந்தப் பிரச்னை மகாத்மா காந்தி வரையில் எடுத்துச் செல்லப்பட்டது. இவற்றைக் கேட்டதும், வ.வே.சு., பெரிதும் மனம் உடைந்து, நொந்தே போனார்.

இப்படியான சூழலில், அன்னியத் துணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்து, அந்த நேரம் கதர் விற்பனை, கைத்தறி துணிகள் விற்பனைக்கு ஏற்பாடானது. தலைவர் என்பதால், சுதேசி பண்டார் பொறுப்பு ஈவேரா., நாயக்கரிடம் இருந்தது. சென்னை மாகாணம் முழுதும் அப்போது எவ்வளவு விற்பனை, எவ்வளவு நன்கொடை வசூலானது, எவ்வளவு கைவசம் என்பனவற்றை எல்லாம் நாயக்கர்தான் சொல்ல வேண்டும். அனைத்தும் அவர் வசம் இருந்தது.

அந்த நேரத்தில், திருப்பூரில் சென்னை மாகாண காங்கிரஸ் இயக்கத்தின் கூட்டம் ஏற்பாடானது. கூட்டத்துக்கு சில நாட்களே இருந்தபோது, கமிட்டியிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டிய நிலையில், ஈவேரா.,வுக்கு பெரிய குழப்பம்! பெற்ற பணம், பொருள் எல்லாம் எப்படியோ, யாருக்கோ, எங்கேயோ சென்று விட, முறையான கணக்கு நாயக்கரிடம் இல்லை. அந்த நேரத்தில், சுய தேவைக்கு எடுத்துக் கொண்ட பணத்துக்கு ஈடாக, உடனே அங்கு இங்கு வாங்கியோ பெற்றோ சரிக்கட்ட வாய்ப்பும் அமையவில்லை. கையைப் பிசைந்தார் நாயக்கர். எப்போதும் கைகொடுக்கும் உயிர் நண்பர் ராஜாஜியிடம் ஓடினார்.

ராஜாஜி, பதற்றத்துடன் விவரங்களை விளக்கிக் கொண்டிருந்த ராமசாமி நாயக்கரை ஆசுவாசப் படுத்தினார். பதட்டப்படாமல் அமைதியாகச் சொல்லுமாறு கூறினார். ராமசாமி நாயக்கர், தன் தவறுகளைச் சொன்னார். எப்படி இந்த இக்கட்டில் இருந்து தப்புவது? என்று ராஜாஜியிடம் யோசனை கேட்டார்.

அப்போது ராஜாஜி சொன்னார்… நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்?
பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? – கேட்டார்.
ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? – என்றார்.

கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நாயக்கருக்கு, இயக்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்களை விளக்குவதற்கு அப்படி ஒன்றும் பஞ்சம் ஏற்படவில்லை! வ.வே.சு., வகையாய் மாட்டினார். அடுத்தது, இருக்கவே இருக்கிறது இட ஒதுக்கீடு!

திருப்பூரில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில், அரசுப் பணிகளிலும் கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வலியுறுத்தினார். ஆனால் இது இன வேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைகிறது என்று, காங்கிரஸ் அமைப்பில் இருந்தவர்கள் ஏற்க மறுத்தனர். வ.வே.சு உதாரணர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து, சாதீயத் தாக்குதல்கள், பிரிவினை அரசியல் அலசப் பட்டன. ராஜாஜி என்ன நினைத்தாரோ அது நடந்தது.

காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து அங்கிருந்து உடனடியாக அகன்றுவிட்டார் ஈ.வே.ரா. நாயக்கர்.

இவ்வாறு, காங்கிரஸில் இருந்த அந்த 1925 வரை தன் பெயரில் நாயக்கர் எனும் சாதிப் பெயரை வைத்திருந்தார். அந்த 46 வயது வரை அவர் கடவுள் பக்தி கொண்டவர்தான். அவரின் குடும்பமும் கடவுள் பக்தி கொண்ட குடும்பம்தான். அதனால்தான், தம் இரு மகன்களுக்கும் ராமசாமி, கிருஷ்ணசாமி என்று அவர் பெற்றோர் பெயர் சூட்டியிருந்தார்கள்.

தொடர்ந்து, 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இப்போது நாயக்கர் மறைந்து பெரியார் ஆகிவிட்டார். தன் கொள்கைகளைப் பரப்ப 1925 மே மாதம் குடியரசு நாளிதழைத் தொடங்கினார்.

இந்த நேரம் இங்கே நெல்லை மாவட்டத்தில்… 1925 ஜுன் மாதம் 4ம் நாள், குருகுலக் குழந்தைகளுடன் பாபநாசம் அருவிக்குச் சென்றிருந்த போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்கத் தாண்டியபோது, சிறுமி அணிந்திருந்த தாவணி நீரில் பட்டு அருவித் தண்ணீர் விழும் தடாகத்துக்குள் அவளை இழுத்துக் கொண்டது. மகளைக் காப்பதற்காக தடாகத்தில் பாய்ந்த வ.வே.சு.வும் தடாகத்துள் போய்விட்டார். இருவரின் உடலும் கிடைக்கவில்லை. இப்படியாக ஒரு சுதந்திரப் போர் வீரரின் இறுதி அவலச்சுவையுடன் முடிந்தது. ஜூன் 4… மகனைத் தனியே தவிக்க விட்டு அருவியில் கரைந்த ஐயரின் நினைவு நாள் இன்று!

ஆனால், குடியரசு இதழில் வ.வே.சு. ஐயர் மறைவு குறித்து எழுதிய பெரியார், ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதினார். (குடியரசு 07-06-1925)

பின் குறிப்பு:

பி.சி. கணேசன் சொன்ன தகவல்களில்… ராஜாஜி, ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பார்த்து, “கட்சியில் இருந்தால் கணக்கு கொடுத்துதானே ஆகணும்?!” என்று சொல்லியிருக்கலாம். அது, சொல்பவர்களின் பேச்சு வழியே, பின்னாளில், “கட்சியில் இருந்தால்தானே கணக்கு கொடுத்தாகணும்!” எனும் விதமாய் திரிந்து வந்திருக்கலாம்.  

இதில் சில விஷயங்களை நுணுகிப் பார்க்க வேண்டியுள்ளது

ராஜாஜி – தவறுகளுக்குத் துணை போகும் குணம் கொண்டவர் அல்லர். ஆனால் அவர் பெயரை நட்பு எனும் பலவீனத்தைப் பயன்படுத்தி, ஈவேரா கையாண்டார் என்று சில சூழல்கள் தெளிவாக்குகின்றன.

மேலும், ஒரு நண்பர் எனும் வகையில் ஈவேரா.,வுக்கு உடனடியான யோசனை சொல்லப் போகும்போது, அவர் மனதை நோகடிக்காத வகையில் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று யோசித்திருக்கலாம். அதனால், நாசூக்காக இப்படி ஒரு வழியைச் சொல்லி விட்டு, பின்னர் கணக்கு வழக்குகளைப் பார்த்து ஈவேரா.,விடம் இருந்து ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டு கட்சிக் கணக்கில் சேர்க்கப்பட்டது என்று கூறுவார்கள்…

அந்த வகையில், ராஜாஜி ஊழலை மறைப்பதற்காகச் செய்தார் என்று இந்த விஷயத்தைக் கொள்ள முடியாது. ஈவேரா.,வுக்கு புரியும் விதத்தில் அவர் பாணியில் சொல்லியிருக்கக் கூடும்…!
காரணம், ராஜாஜி சுய வாழ்க்கையில் ஒழுங்கைக் கடைப்பிடித்தவர். தன் விவகாரத்தில் ஒழுக்கமாக இருப்பவர் அடுத்தவருக்கு தவறான வழி காட்டியிருக்க மாட்டார்! என்பது என் கருத்து! 

 

– செங்கோட்டை ஸ்ரீராம்

Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: