நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எதையும் சந்திக்கத் தயார்: வெங்கய்ய நாயுடு

venkaiah-naidu ஹைதராபாத்: நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் எந்த வித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கான தடைகள் அகற்றப்பட்டு விட்டன. மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் நிலக்கரி மசோதா, சுரங்கம் மற்றும் கனிமங்கள் மசோதா ஆகியவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவில் மக்களவையில் 9 திருத்தங்கள் செய்துவிட்டோம். இதற்கு மேல் ஆட்சேபிக்க அதில் ஏதுமில்லை. எனவே, இந்த மசோதா விவகாரத்தில் நாங்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. விரிவாகவே ஆலோசனை மேற்கொண்டோம். காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் வளர்ச்சியை விரும்பவில்லை. அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை விரும்பவில்லை. அவர்கள் நாட்டின் வளர்ச்சி தடைப்பட்டு நீடிப்பதையே விரும்புகின்றனர். ஆனால், இதற்கு நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் விரைவாக செயல்பட விரும்புகிறோம். இந்த மசோதா விவகாரத்தில் எந்த வித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு ஆவலாக உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லாததால் எங்கள் பாதை தடைபட்டுள்ளது. சில நேரங்களில் சட்ட நடவடிக்கைகளும் நாட்டின் வளர்ச்சியும் நாடாளுமன்றத்தால் தடுக்கப்படுகிறது என்றார் அவர்.