உங்கள் மனக்குறைகளை தீர்ப்பேன்: முஸ்லிம் பிரமுகர்களிடம் மோடி உறுதி

modi-muslims-talk புது தில்லி: முஸ்லிம்களின் மனக்குறைகளை தீர்க்க தனது முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதிலும் இருந்து வந்த முஸ்லிம் மதத் தலைவர்களும், மதகுருக்களும் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தப் பிரதிநிதிகள் குழுவில், சென்னை தாஜ்புரா ஷரீப்பைச் சேர்ந்த சையது அலி அக்பரும் இடம்பெற்றிருந்தார். அந்தக் குழுவினர், முஸ்லிம்களின் பல்வேறு பிரச்னைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தனர். முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள், மசூதிகள், மதரசாக்கள் ஆகியவற்றின் சொத்துகள் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், முஸ்லிம் இளைஞர்களுக்கு கல்வித் துறையில் நல்ல வசதிகளை உருவாக்கித் தருமாறு வலியுறுத்தினர். தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவது பற்றி கவலை தெரிவித்த அவர்கள், ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இந்த சவாலை சமாளிக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். அவர்கள் கூறியதைக் கேட்ட மோடி முஸ்லிம் மதத்தின் பல்வேறு பிரிவினரின் மனக் குறைகளைக் களைய தனது முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தார். மேலும், முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களின் சொத்துப் பிரச்னைகளை கவனிப்பதாக உறுதி அளித்ததுடன், முஸ்லிம் இளைஞர்களுக்கு தேச கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகிக்க வாய்ப்பு அளிப்பதையும், முஸ்லிம்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதையும் தமது கடமையாகக் கொள்வதாகவும் கூறினார். அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த முஸ்லிம் மத தலைவர்கள் விரைவான பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், அமைதி, தேச பாதுகாப்பு ஆகிய பிரதமர் மோடியின் நோக்கங்கள் நிறைவேற அவருக்கு முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தனர்.