September 28, 2021, 1:25 pm
More

  ARTICLE - SECTIONS

  சுதந்திர தினத்தில் இரு சுதந்திர உரிமைச் சர்ச்சைகள்!

  mohan bhawat flag hoisting - 1

  நாட்டின் 71 ஆவது சுதந்திர தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தைக் குறித்தான இரு வேறு அமைப்பு ரீதியான சர்ச்சைகளையும் பேச்சுரிமை, சுதந்திர உரிமை ஆகியன குறித்தும் விவாதத்தைக் கிளப்பி விட்டது.

  ஆர்.எஸ்.எஸ்., மற்றும் கம்யூனிஸ இயக்கங்களைச் சேர்ந்த இருவருக்கு நேர்ந்த நெருக்கடிகள், சுதந்திர தினத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேசியத் தலைவர் மோகன் பாகவத் கேரள மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்தார். இங்கே பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட கரங்கி அம்மன் பள்ளியில் சுதந்திர தினத்தை ஒட்டி மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல் வெளியானதும் அரசு உதவிபெறும் அந்தப் பள்ளியில் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்ற பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மரிக்குட்டி தடை விதித்தார். சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட மரபுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சுதந்திர தின விழாக்களின்போது பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்ற முடியும் என்பதை மேற்கோள் காட்டி இந்தத் தடையை விதித்தார்.

  ஆனால், அந்தத் தடையை மீறி ஆக. 15 அன்று காலை கரங்கி அம்மன் பள்ளிக்கு வந்த மோகன் பாகவத் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவுக்கு ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்து விடவில்லை. நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த அன்னிய அரசும் அவ்வளவு எளிதாக சுதந்திரத்தைத் தந்து விடவில்லை. 1857 முதல் 1947 வரை பல தலைவர்கள் அனைத்தையும் தியாகம் செய்து, பல சித்ரவதைகளை அனுபவித்து இந்த சுதந்திரத்தை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்தனர். நாட்டில் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை நீத்தவர்களின் தியாகத்தை நாம் நினைவுகூர்ந்து, அதே வகையில் நமது வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டும். நமது சுதந்திரம் என்பது மிகவும் புனிதமானது, அதை நாம் அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.” என்று பேசினார்.

  இது குறித்த பின்னணியில், அரசு உதவி பெறும் பள்ளி என்பதால், இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் கொடியேற்ற ஆட்சியர் தடை உத்தரவை முந்திய நாள் இரவு 11.30க்குதான் அந்தப் பள்ளித் தாளாளருக்கு அனுப்பியுள்ளார். ஆனால், நாட்டில் எவர் வேண்டுமானாலும் கொடி ஏற்றலாம் என்பதால், மோகன் பாகவத் கொடி ஏற்ற பள்ளியின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் சர்ச்சைகளைத் தவிர்க்க, பள்ளியில் தேசியக் கொடி ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பத்தில் அல்லாமல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மோகன் பாகவத் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப் பட்டது.

  இந்தச் சர்ச்சை ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்க, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் சுதந்திர தின உரையை ஒளிபரப்ப தூர்தர்சன் மறுத்தது இன்னொரு புறத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

  சுதந்திர தினத்தன்று முதல்வரின் உரையை நிகழ்த்த அவருக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது. அதன்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷன் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்காரின் 6 நிமிட உரையை காலை 6.30 மணிக்கு ஒளிபரப்புவதாக இருந்தது. ஆனால், மாணிக் சர்க்கார், தமது உரையில் நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதாகவும், பசுப் பாதுகாவலர்கள் அடாவடி என்றும், அரசியல் மற்றும் பிரிவினை ரீதியான சில கருத்துகளை உரையில் குறிப்பிட்டிருந்ததால், முதல்வரின் உரையில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் அனுப்புமாறு மாநில அரசுக்கு தூர்தர்ஷன் கேட்டுக்கொண்டது.

  ஆனால், தூர்தர்ஷனின் கோரிக்கையை திரிபுரா அரசு செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து திரிபுரா முதல்வரின் பிரத்யேக உரையை தூர்தர்ஷன் ஒளிபரப்பவில்லை. இதற்கு மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் தூர்தர்ஷன் தரப்பில் அளிக்கப் பட்ட விளக்கத்தில், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், கொடியேற்று வைபவங்கள் உள்ளிட்ட அதிகாரப் பூர்வ நிகழ்ச்சிகளை அரை மணி நேர செய்திக் கோவையாக ஒளிபரப்பியதாகக் கூறியது.

  சுதந்திர தினத்தில் நிகழ்ந்த பேச்சுரிமை, சுதந்திர கொடியேற்று உரிமை தொடர்பான இருவேறு சம்பவங்கள், ஆட்சியிலும் அரசியல் புகுந்து ஆட்டிப் படைப்பதையே காட்டியது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-