Home அரசியல் அரியர் இல்லா படிப்பு அரை படிப்பும்பாங்க; அந்த அரைப் படிப்பும் இல்லாம ஆக்கினா? ஏன்...

அரியர் இல்லா படிப்பு அரை படிப்பும்பாங்க; அந்த அரைப் படிப்பும் இல்லாம ஆக்கினா? ஏன் எடப்பாடியாரே இப்படி?

என்ன சொன்னாலும், நிர்வாகத் திறமையற்ற மாநில அரசின் காதுகளுக்கு இதெல்லாம் ஏறவா போகிறது என்று அங்கலாய்க்கிறார்கள் கல்வியாளர்கள்!

ariyar-arasane-1
ariyar-arasane-1

கல்லூரி மாணவர்களிடையே ஒரு சொல்லாடல் உண்டு – பெரும்பாலானவர்களும் அரியர் வைத்துத்தான் பாஸ் செய்து அடுத்த வருடத்துக்கு முன்னேறுவார்கள்… ஆனால் அதையும் மிகவும் பெருமிதமாக மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு – அரியரில்லா படிப்பு அரை படிப்பு என்று !

அரியர் இல்லா படிப்பு அரைப் படிப்பு என்பதைப் பொய்யாக்கும் வகையில் அரியரே எழுதவேண்டாம் என்று முழு படிப்பையும் நாசமாக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறது மாநில அரசு! காரணம் காட்டப்படுவது கொரோனா. ஆனால் உண்மைக் காரணம் அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தல்!  

அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் இவ்வாறு உயர் கல்வி விவகாரங்களில் மாநில அரசு தலையிடுவது மாநிலத்தின் எதிர்காலத்தை பாழாக்கி விடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் மாநில அரசு செயல்பட்டு வருவதை கல்வியாளர்கள் பலரும் கண்ணீர் சிந்த விமர்சித்து வருகின்றனர். ஆனால் பின்னாளில் நிகழப் போகும் விபரீதம் தெரியாமல் மாணவர்களும் தாங்கள் தேர்வு எழுத தேவையில்லை; தேர்வு எழுதாமலே பாஸ் செய்து விடுவோம் என்ற மகிழ்ச்சிக்கடலில் முதலமைச்சரை பாராட்டி பேனர்கள் வேறு வைத்து வருகிறார்கள் !

எடப்பாடியரே என்று எழுத்துப் பிழையுடன் எழுதி வைத்திருப்பதில் இருந்தே அரியர் மாணவர்களின் திறமை வெளிப்படுகிறது என்று சிலர் கிண்டல் அடித்தாலும், இவை மாணவர்களே வைத்ததா? அல்லது மாணவர்கள் பெயரில் அரசியலுக்காக வாக்கு வங்கியை கணக்கில் கொண்டு வைக்கப்பட்டதா என்பது நமக்குத் தெரியவில்லை! ஆனால் பேனர்கள் வைக்கப்பட்டு அவை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கப் பட்டு வருகின்றன! எல்லாவற்றிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாணவர்கள் புகழ்வது போல் வாசகங்களும் திணிக்கப்படுகின்றன!

இளங்கலை, இளம்அறிவியல் முதுநிலை பட்டதாரி என்றெல்லாம் பட்டங்களை வைத்துக்கொண்டு வேலைவாய்ப்புக்காக எதிர்காலத்தில் நிறுவனங்களின் வாசல்களை தட்ட வேண்டிய இளைஞர்கள், வருங்காலத்தில் கொரோனா பாஸ் மாணவன் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு நிறுவனங்களின் வாயிலை மிதிக்கப் போகிறார்கள்! அவர்களின் கல்வித்தரத்தை நேர்காணலின் போது நிறுவனங்கள் என்னதான் போகின்றன.. அப்போது கூனிக்குறுகி நிற்கப் போவது மாணவர்கள்தான்! எடப்பாடி பழனிசாமி  அல்ல! 

காரணம், இப்போது… சென்னை:பல்கலை, கல்லூரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தவிர மற்ற அனைத்து அரியர் பாடத் தேர்வுகளிலும், ‘ஆல் பாஸ்’ என முதல்வர் பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து வைக்கப் பட்டுள்ள பேனர்கள்தான்!  எடப்பாடியாரின் அறிவிப்பு,  அரியர்கள் வைத்து சோர்ந்திருந்த மாணவர்களுக்கு காதில் தேனாக பாய்ந்திருக்கிறது. ஆனால், நன்றாகப் படித்து நியாயமாகவே பாஸ் செய்துள்ள மாணவர்களுக்கு முகச் சுழிப்பையும் தந்திருக்கிறது. 

அரியர் மாணவர்கள் உற்சாகம் ஊற்றெடுக்க தங்களை அரியரிலிருந்து காத்த முதல்வரை புகழ்ந்து ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’ என்ற திருக்குறளுடன் ‘அரியர் மாணவர்களின் அரசனே’ என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதே நேரம், படிக்காமல் பட்டம் வழங்க முடியாது. தேர்வைத் தள்ளி வைத்து நடத்த வேண்டும் என்பதுதான் சரியான முடிவாக இருக்கும். அதனால் மாணவர்களின் எதிர்காலப் படிப்பு, வேலை பற்றிய பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்… சாதாரணமாக ஓரிரு மாத இடைவெளியில் தேர்வை அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைத்தும் கூட நடத்தி விடலாம். கல்விச் சான்றிதழ்களை வழங்கும் நேரத்துக்கு ஏற்ப, அரசே மற்ற தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் முதலிய அனைத்தையும் சற்று ஒத்தி வைத்து திட்டமிடலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்

edappadi pazhanisami in madurai speech

படிப்பு எப்படியோ அப்படி.. கல்வியின்  ஆழம் அறியாதவர்கள் .. ஆனாலும் கல்வியைக் காக்கச் சரியாகத் திட்டமிட வேண்டும்.. கல்வி , நூலகம், ஆசிரியர் நியமனம், வியாபாரமாகி விட்டன. தனியாருக்குக் கல்வி நல்ல வியாபாரம்.. கொரொனாவில் மாட்டிக்கொண்டு, பிள்ளைகள் தவிக்கிறார்கள்.. என்ற கவலையை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர் 

அரியர் மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்தது தவறு என்று, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் கருத்து தெரிவித்துள்ளார்.

balagurusamy
balagurusamy

இது தொடர்பாக அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்துள்ள அரசின் நடவடிக்கை ஒரு தவறான முன்னுதாரணம். பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையான அதிகாரம் கொண்டவை! அதன் விவகாரங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அரியர் தேர்வு எழுத பணம் கட்டி இருந்தாலே தேர்ச்சி என்று அறிவித்திருப்பது ஒரு தவறான நடவடிக்கை என்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தேர்ச்சி அடைய செய்யப்படுபவர்கள் என்று அறிவிப்பது கல்வியின் தரத்தில் பாதிப்பை உண்டாக்கும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொன்னாலும், நிர்வாகத் திறமையற்ற மாநில அரசின் காதுகளுக்கு இதெல்லாம் ஏறவா போகிறது என்று அங்கலாய்க்கிறார்கள் கல்வியாளர்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »