புது தில்லி:

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து அக்டோபர் 5ஆம்தேதி விசாரணை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியான ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஓ.பன்னீர் செல்வம், சசிகலா அணிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. இதையடுத்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. மேலும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட ஆணையம், இரு தரப்புக்கும் அம்மா அணை என்றும் புரட்சித் தலைவி அணி என்றும் பெயரையும் கொடுத்தது.

பின்னர் நடந்த அரசியல் கலப்பு நடவடிக்கைகளில், சசிகலா அணியில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், முறையாக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெறும் அணிக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது குறித்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என அக்டோபர் 5ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது. இதுதொடர்பாக சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனில் 29ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளது.