Home அரசியல் தமிழக மக்களின் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் உந்து சக்தி! (பிரதமரின் முழு உரை)

தமிழக மக்களின் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் பெரும் உந்து சக்தி! (பிரதமரின் முழு உரை)

தமிழ்நாடு முழுவதும் சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுக்கான அடிக்கல்

பிரதமர் மோடி… கோவை நிகழ்ச்சியில்…

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கோவை கொடீசியா வளாகத்தில் இன்று நாட்டுக்கு சில நல்ல திட்டங்களை அர்ப்பணித்து வைத்தார். பின்னர் திட்டங்களின் பயன்கள் குறித்து அவர் பேசினார். அவரது ஆங்கிலப் பேச்சை, தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார் சென்னை அகில இந்திய வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பு அதிகாரி ராமஸ்வாமி சுதர்ஸன். பிரதமர் மோடி பேசியதன் முழு விவரம்…


தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களே,
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களே,
என் அமைச்சரவை சகாக்களான, பிரஹலாத் ஜோஷி அவர்களே,
கிஷன் ரெட்டி அவர்களே,
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களே,
தமிழக அமைச்சர் வேலுமணி அவர்களே,
பெரியோர்களே, சகோதர சகோதரிகளே, வணக்கம்.

இன்று, இங்கே, கோயம்புத்தூரில் நான் இருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. இது தொழில் நகரம், புதுமைகள் படைக்கும் நகரம். இன்று கோயம்புத்தூருக்கும், ஏன், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நன்மைபயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி இருக்கிறோம்.

நண்பர்களே, பவானிசாகர் அணையை நவீனப் படுத்துவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  இது, இரண்டு இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்துக்கு நீர்பாசனமளிக்க உதவும்.  குறிப்பாக, இத்திட்டத்தின் வாயிலாக ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்கள் நல்லபலனைப் பெறும்.  நமது விவசாயிகளுக்கு இத்திட்டம் பேருதவியை அளிக்கும்.  இத்தருணத்தில் வான்புகழ் வள்ளுவரின் குறள் ஒன்று என் நினைவுக்கு வருகின்றது. 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

இதன் பொருள் – உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே சிறப்பான வாழ்க்கை வாழ்கின்றவர்.  மற்றவர் எல்லோரும் அவரைத் தொழுது பின் செல்கின்றவரே.

பிரதமர் மோடி.. கோவையில் உரை

நண்பர்களே, இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது.  தொழில்துறை வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று தடையில்லா மின்சாரம் ஆகும்.

நாட்டுக்கு இரண்டு முக்கிய மின் திட்டங்களை அர்ப்பணித்ததிலும், ஒரு புதிய மின் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டியதிலும் நான் பேருவகை அடைகிறேன்.  திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 709 மெகாவாட் திறன்கொண்ட சூரிய மின் சக்தித் திட்டத்தை, சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தி உள்ளது.  மேலும், தமிழ்நாட்டுக்கு பெரும் நன்மை பயக்கும் வகையில், நெய்வேலியில் 1000 மெகாவாட் திறன்கொண்ட, ஒரு புதிய அனல்மின் திட்டம் சுமார் 7800 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் உற்பத்தியில் 65 சதவீதத்துக்கும் அதிகமான மின்சாரம் தமிழ்நாட்டுக்கே அளிக்கப்படும்.

நண்பர்களே, கடல் வணிகம் மற்றும் துறைமுகம்சார் வளர்ச்சி குறித்த மிகச் சிறந்த வரலாற்றைக் கொண்டது தமிழ்நாடு.  தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்பான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்ததில், நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.  மகத்தான சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் சீரிய முயற்சிகளை இத்தருணத்தில் நாம் நினைவில் கொள்வோம்.  துடிப்பு நிறைந்த இந்திய கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் மேம்பாடு குறித்த அவருடைய தொலைநோக்கு நமக்கெல்லாம் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது.  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டங்கள், இத்துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை மேலும் வலுப்படுத்துவதோடு  பசுமைத் துறைமுகம் சார்ந்த முன்முயற்சிக்கு உறுதி சேர்க்கும்.  இது மட்டுமல்லாது, இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களில் வஉசி துறைமுகத்தை பெரும் சரக்குக் கப்பல்களைக் கையாளும் திறன் கொண்ட துறைமுகமாக மேம்படுத்தவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நமது துறைமுகங்களின் திறமை கூடும் போது, தற்சார்பு பாரதத்திற்கான பங்களிப்பை அளிக்க முடிவதுடன், உலக அளவில் வர்த்தகம் மற்றும் சரக்கு கையாளும் மையமாக இந்தியா உருப்பெறுவதற்கும் உதவுகிறது.

துறைமுகம்சார் வளர்ச்சி குறித்த இந்திய அரசின் நிலைப்பாட்டை, சாகர்மாலா திட்டத்தின் மூலம் நம்மால் உணர முடியும்.  இத்திட்டத்தின் கீழ், 2015 ஆம் ஆண்டு முதல் 2035 ஆம் ஆண்டு வரையில், சுமார் ஆறு இலட்சம் கோடி ரூபாய் செலவில், 575 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இவற்றுள், துறைமுகங்களை நவீனமயமாக்கல், புதிய துறைமுகங்களை உருவாக்குதல், இணைப்புச்சாலைகள் விரிவாக்கம், துறைமுகத்தோடு தொடர்புடைய தொழில் வளர்ச்சி, கடற்கரைப்பகுதி மக்களின் மேம்பாடு ஆகியவை அடங்கும்.

இது மட்டுமல்லாமல், சென்னை, ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள ஊரான மாப்பேட்டில், பல்வகை சரக்குகளையும் கையாளும் ஒரு புதிய பூங்கா விரைவில் தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்தத் தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

சாகர்மாலா திட்டத்தின்படியே, வ.உ.சி. துறைமுகப் பகுதியில் உள்ள கோரம்பள்ளம் பாலம் 8-வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது, இரயில் மேம்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் பயனாக, துறைமுகத்திற்கு வந்துசெல்லும் வாகனங்களால் ஏற்படும் கடும் நெரிசல் தவிர்க்கப்பட்டு, தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படுகின்றது.   மேலும் இத்திட்டங்கள், சரக்கு வாகனங்கள் துறைமுகத்திற்கு வந்துசெல்லும் நேரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

நண்பர்களே, வளர்ச்சியும், சுற்றுச்சூழல் மீதான அக்கறையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.  வ.உ.சி துறைமுகத்தில் ஏற்கெனவே 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரியமின்சக்தித் திட்டம் நிறுவப்பட்டுள்ளது.  தற்பொழுது, 140 கிலோவாட் திறன்கொண்ட மேற்கூரை சூரியமின்சக்தித்திட்டம் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன.

இது மட்டுமல்லாமல், மின்வலைப்பின்னல் இணைப்புடன் கூடிய, 5 மெகாவாட் தரைதள சூரியமின்சக்தி ஆலைப் பணியை, சுமார் 20 கோடி ரூபாய் செலவில் வ.உ.சி துறைமுகம் மேற்கொண்டிருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.  இத்திட்டம், துறைமுகத்தின் மொத்த மின் தேவையில் 60 சதவீதத்தை நிறைவு செய்ய உதவும்.  இது, மின்னாற்றல் தற்சார்புக்கான சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

என் இனிய நண்பர்களே, தனிநபரின் கண்ணியத்தை உறுதி செய்வதே, வளர்ச்சியின் மையக்கருவாகும்.  இதனை உறுதி செய்யும் அடிப்படை வழிகளில் ஒன்று, அனைவருக்கும் குடியிருப்புகளை ஏற்படுத்தித் தருவதாகும்.  நம் மக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் நனவாக்கும் வண்ணம், பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, இதன் ஒரு பகுதியாக, திருப்பூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில், சுமார் 332 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,144 வீடுகளைத் திறந்து வைத்ததை நான் என் பெருமிதமாகவே கருதுகிறேன்.  சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுக்காலம் நிறைவடைந்த பின்னரும், குடியிருக்க வீடேயில்லாத மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

நேசம்நிறை நண்பர்களே, தமிழ்நாடு அதிக நகர்மயமான மாநிலனமாகும்.  நகரங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்து, மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் மிகுந்த முனைப்போடு இருக்கின்றன. 

தமிழ்நாடு முழுவதும் சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களுக்கான அடிக்கல் நாட்டியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்நகரங்களில் பல்வேறு சேவைகளை செவ்வனே செயல்படுத்த, சிறப்பான, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை இம்மையங்கள் வழங்கும்.

நண்பர்களே, இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அனைத்தும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்விற்கும், வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  இன்று தங்களுக்கான புதிய இல்லங்களைப் பெறும் அனைத்துக் குடும்பத்தினருக்கும் நான் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   மக்களின் கனவுகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்து பணியாற்றுவோம், சுயசார்பு பாரதத்தை உருவாக்குவோம்.

நன்றி.   இனிய நண்பர்களே, பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 14 =

Translate »