spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகட்டுரைகள்திமுகவின் ‘வெள்ளை அறிக்கை’க்கு சில கேள்விகள்! விடை எப்போது?: டாக்டர் கிருஷ்ணசாமி!

திமுகவின் ‘வெள்ளை அறிக்கை’க்கு சில கேள்விகள்! விடை எப்போது?: டாக்டர் கிருஷ்ணசாமி!

- Advertisement -
krishnasamy dr
krishnasamy dr

வரும் 13ம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நேற்றைய தினம் ஒரு வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு அரசு அல்லது நிறுவனத்தின் குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது உற்பத்தி பொருட்கள் மீதான உண்மைத் தன்மைகளையும், அதற்கான தீர்வுகளையும் வெளிப்படையாக எடுத்துச் சொல்வதே வெள்ளை அறிக்கை-White Paper ஆகும். 1996-2001-ல் நாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பட்டியலின பிரிவினருக்கான இட ஒதுக்கீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை போராடிப் பெற்றதுதான் வெள்ளை அறிக்கை குறித்த அண்மைக்கால நிகழ்வாகும்.

பொதுவாக எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளிடம் ஒரு திட்டம் அல்லது கொள்கை அல்லது சட்டம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டு வலியுறுத்துவார்கள். ஆனால், எதிர்கட்சி தரப்பிலிருந்து அதுபோன்ற ஒரு கோரிக்கை எழாத போதும் ஆளும்கட்சியான திமுக தாங்களாகவே முன்வந்து கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சி மற்றும் ஏழாண்டுக் கால மத்திய பாஜகவினுடைய ஆட்சியால் தமிழக நிதி நிலையில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்து இருக்கிறது.

எனவே, இந்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் இன்றைய நிதிநிலையை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்வதைக் காட்டிலும், அதிமுக-பாஜக ஆகிய ஆட்சிகளின் மீது குற்றப்பத்திரிக்கை வாசிப்பதற்கான முயற்சியாகவே கருத வேண்டும். இதுபோன்ற ஒரு வெள்ளை அறிக்கையை இந்த அரசு தமிழகச் சட்டமன்றத்தில் தான் சமர்ப்பித்து இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் சம்பந்தப்பட்ட கட்சிகள் அதற்கு முறையான பதில் கருத்துக்களைச் சொல்லியிருக்க முடியும். எனவே, விவாதத்திற்கு இடமில்லாத வகையில் அதிமுக-பாஜக அரசுகள் மீதே எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வெளியிடப்பட்ட இந்த வெள்ளை அறிக்கை மீது அவர்கள் எப்படி பதில் சொல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதில் சொல்லப்பட்ட பல புள்ளிவிவரங்கள் புதிதல்ல, கடந்த 5 வருடமாக தமிழகச் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும், ஊடகங்கள் வாயிலாகவும் கடந்த ஆட்சியின் மீது திமுகவால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியே ஆகும். எப்பொழுதுமே ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அடிப்படை காரணம், நோக்கம் இருக்க வேண்டும். ஒரு அரசு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கிறது என்று சொன்னால் அது வெறும் புள்ளி விபரங்களைக் கொண்ட வெள்ளையை கருப்பாக்கிய தாள்களாக இருக்கக் கூடாது. புள்ளி விபரங்களுக்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும் இருக்க வேண்டும்? இந்த அறிக்கையில் எண்ணற்ற புள்ளி விபரங்கள் இருக்கிறதே தவிர, அந்த புள்ளி விபரங்களுக்கான அடிப்படை காரணங்களும், அதைச் சரி செய்வதற்கான தீர்வுகளும் எங்கும் சொல்லப்படவில்லை.

2011-ஐ காட்டிலும் 2021-ல் தமிழகத்தினுடைய கடன் சுமை அதிகரித்து விட்டது. குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தின் வருமானங்கள் பெரிதளவு குறைந்துவிட்டது; ஊதாரித்தனமான செலவினங்கள் மிகவும் அதிகரித்து அ.தி.மு.க ஆட்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட மாதாந்திரச் செலவுகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை இருந்திருக்கிறது என இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக 2006-2011 வரையிலும் இருந்த திமுக ஆட்சியை குறியீடாக கொண்டு, 2011-லிருந்து மூன்றாண்டுகளைத் தவிர்த்து விட்டு, கடந்த 7 ஆண்டுக் காலத்திற்கான நிதி நிலை அறிக்கை குறித்தே அதிகம் பேசப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை வெளியிட்டதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று வெளியில் காட்டிக்கொள்ள முயற்சி செய்து இருப்பினும், உள்ளூர இந்த அறிக்கையில் அரசியல் உள்நோக்கம் இல்லாமல் இல்லை .
1989-க்கு பிறகு, தமிழகத்தில் திமுகவும், அதிமுகவுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்து உள்ளன.

அதுவும் குறிப்பாக 13 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு, 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் ஏற்பட்ட ஆட்சி கலைப்புக்குப் பிறகு, 1991-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். மீண்டும் 1996-ல் திமுக ஆட்சி, 2001-ல் அதிமுக ஆட்சி, 2006-ல் திமுக, 2011-ல் அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வந்தனர். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 2016-ல் தொடர்ச்சியாக அதிமுக ஆட்சிக்கு வந்தது.

1989-க்கு பிறகு, 2017-ல் ஜெயலலிதா அவர்கள் மறைவு வரையிலும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்த பின்பும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதே அவர்களது அரசியல் வாடிக்கையாக இருந்தது. இன்னும் சில காலகட்டங்களில் அவர்களது கடைசி சட்டமன்ற கூட்டத்தொடர் வரையும் கூட முந்தைய ஆட்சியைக் குறை சொல்லிக் கொண்டே இருந்ததும் உண்டு.

1996-ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அவர்கள் சட்ட-ஒழுங்கை குறிப்பிட்டு தமிழகத்தின் ஈரல் கெட்டுப் போய் விட்டது என்று சொன்னார். 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவர்கள் அப்பொழுது நிலவி வந்த கடுமையான மின் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு திமுக ஆட்சியால் தமிழகத்தின் இதயமே கெட்டுப் போய் விட்டது என்று கூறினார்.

கடந்த சில வருடங்களாக அதுபோன்ற பல்லவிகள் சட்டமன்றத்திலும், பொது வெளியிலும் இல்லாமல் இருந்தது. இப்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பழைய பல்லவியைப் பாடத் துவங்கி விட்டார்கள். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளும் திமுக மீது எவ்வித குறைபாடுகளையும் எந்த எதிர்க்கட்சியும் குறிப்பாக, அ.தி.மு.க சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவும், பெரும்பான்மையுடன் எதிர்க் கட்சியாக அமர்ந்துள்ள அதிமுகவின் வாயை அடைப்பதற்கான செயலாகவுமே இப்போது வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பல்வேறு அம்சங்களை நாம் அணுக வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2001-ல் தமிழகத்தின் கடன் சுமை 34,000 கோடி என்ற அளவிலேயே இருந்தது. இப்போது 20 வருடத்தில் 20 மடங்கு அதிகரித்து 6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய வெள்ளை அறிக்கையில் கடன் தொகையான 5.78 லட்சம் கோடியை 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வகுத்து ஒரு குடும்பத்திற்கு 2,63,000 ரூபாய் கடன் என்று ஒரு பெரிய கண்டுபிடிப்பு போல தியாகராஜன் கூறுகிறார்.

இது மக்களுக்குப் பழகிப்போன விஷயமே. 2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, இதே போன்ற ஒரு கணக்கைப் போட்டு ஜெயலலிதா அவர்கள் ”தமிழக மக்கள் ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ஒரு லட்சம் ரூபாயைக் கருணாநிதி கடன் சுமையாகச் சுமத்தி சென்றுள்ளார்” என மிகவும் பிரபல்யமாக பிரச்சாரம் செய்தார்.

எனவே திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் செய்யும் அரசியல் தவறுகளால் ஏற்படும் கடன் சுமைகளை மக்களின் மீதான தனிப்பட்ட கடன்களைப் போலச் சித்தரிக்கும் வேலைகளை எல்லாம் இனிமேலும் செய்யாதீர்கள்; அவை நல்லதல்ல.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா, ஹரியானா, குஜராத் போன்ற சில மாநிலங்கள் தான் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களாகும். ஏறக்குறைய 400 ஆண்டு காலமாக ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கல்கத்தா, சென்னை, பம்பாய் என மூன்று நகரங்களை மையமாக வைத்தே அவர்களுக்கு அனுகூலமாக பல்வேறு விதமான நவீன கட்டமைப்புகளை அன்றே உருவாக்கி வைத்து இருந்தார்கள்.

1947-லிருந்து ஏறக்குறைய 20 அண்டு காலத்திற்கு மேலாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட பெரிய அணைக்கட்டுகள், திருச்சி பெல், இராணிப்பேட்டை போன்ற தொழில் நிறுவனங்கள், ஆரம்பக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற தொழிற்கல்வி நிறுவனங்களின் பெருக்கம் போன்றவை தமிழ்நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு அடிகோலின. 300-400 ஆண்டுகளாக இது போன்று பல்வேறு கட்டமைப்பு வாய்ப்புகளைக் கொண்ட தமிழகம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்தும் கூட, அந்த அளவிற்கு தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை. மாறாக அண்மைக்காலமாக வறுமைக்கோட்டிற்கும் கீழ் தள்ளப்படுவோரின் எண்ணிக்கை தான் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த 50 வருடமாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே போட்டிப் போட்டுக்கொண்டு மிதமிஞ்சிய இலவசத் திட்டங்களை அறிவிப்பதும், அந்த இலவசத் திட்டங்களையும் முழுமையாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்காமல் எளிதாக ஏமாற்றப்படும் இலக்காகவும், அந்த இலவசத் திட்டங்களுக்கு மக்கள் என்றென்றும் ஏங்கக் கூடியவர்களாகவும் இருப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

எனினும், எளிதில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் இருகட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல.
ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை இரத்து செய்யச் சட்டம் கொண்டு வருவதாகச் சொன்னார்கள், அதற்கான சட்டம் வரவில்லை? பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ 5 குறைக்கப்படும் என்று சொன்னார்கள், குறைக்கப்படவில்லை? ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ 1,000 கொடுப்பதாக சொன்னார்கள். வந்து சேரவில்லை?

முதியோர்கள், விதவைகள், ஊனமுற்றோர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ 1500 ஆக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள், அதைப் பற்றி வாய் திறக்கவே மறுக்கிறார்கள்? நகைக் கடன் தள்ளுபடி என்று சொன்னார்கள், ஆனால் தள்ளுபடி செய்யவில்லை. கடன் பட்டவர்களின் நகைகள் ஏலத்திற்குப் போகும் நிலை உருவாகியுள்ளது? மாணவர்களுக்கான கல்விக்கடன் இரத்து என்று சொன்ன வாக்குறுதியும், மது விலக்கு அமலாகும் என்று சொன்ன வாக்குறுதிகளும் காற்றிலே போய்விடுமா?

இதுபோன்று 505 வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆசை வார்த்தைகளைக் கூறி, மக்களை இலவசங்களுக்காக ஏங்க வைத்து, அவர்களை ஏமாற்றி, வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பிறகு, மக்கள் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேட்டால் ”தேதி போட்டோமா” என்று ஏளனமாகப் பேசினீர்கள்.

இப்போது வெள்ளை அறிக்கை வெளியிடுகிறீர்கள். இந்த வெள்ளை அறிக்கையால் மக்களுக்கு என்ன லாபம்? அப்படியெனில் நீங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மாநில அரசுக்கு ஏற்பட்ட கடன் சுமையை சொல்லுவதன் மூலமும், வருவாயை கடந்த அரசு கூட்டவில்லை என்று சொல்லுவதன் மூலமும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதில்லை என்பது தானே, இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் கொடுத்த புள்ளி விபரங்களில் பல்வேறு விசயங்கள் அடங்கி இருக்கிறது. இதில் அதிமுகவை மட்டும் தனித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. அதற்கு திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். திமுகவும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட வேண்டியதே.

தமிழகத்தின் கடன் சுமை என்பது கடந்த ஆட்சியில் மட்டுமே அதிகரித்து விடவில்லை. 2001-ல் 38,000 கோடியாக இருந்தது, இன்று 5.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2001-ல் நிதிநிலை வெறும் 30,000 கோடி; இன்று 4 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. ஆனால் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் என்று விரும்பிய தியாகராஜன் குறிப்பாக வருவாய் குறைந்து போனது, வட்டி கட்டவே கடன் வாங்கியது, சம்பளத்திற்கு கடன் வாங்கியது போன்ற அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டியவர் மக்களுக்கு நிரந்த வருவாய்க்கு வழிவகுக்காத இலவசத் திட்டங்களைப் பற்றி வாய் திறக்காமல் முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மூடி மறைத்து விட்டார்.

ஏனென்றால் அதைத் தொட்டால் தியாகராஜனுக்கு சாக்கடிக்கும், திமுகவுக்கும் சாக்கடிக்கும் என்பது அவருக்கு தெரியும். ஒரு மாநிலத்தில் ஏறக்குறைய 6 லட்சம் கோடி கடன் இருப்பதும் மெல்ல மெல்ல வருமானம் குறைந்து அரசாங்கமே கடனில் நடத்தும் அளவிற்கு ஒரு நிதிநிலை சென்று இருக்கிறது என்றால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது; அதை நாமும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

எதனுடைய பின்னணியில் இது போன்ற தவறுகள் தொடர்ந்து ஏறக்குறைய 30 ஆண்டு காலமாக நடக்கிறது என்பதை ஆழமாகப் பார்க்க வேண்டும், உண்மையில் அதைத் தான் தியாகராஜன் முழுமையாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் திமுகவின் பங்கைத் திட்டமிட்டு மறைத்து, அதிமுகவை மட்டும் குற்றம் சுமத்தி வெள்ளையறிக்கைக்கு வெள்ளையடித்துக் கொடுத்திருக்கிறார்; அதில் சிறிதும் நேர்மையில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களின் உண்மை நிலைமை என்ன? அவைகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தாலே இந்த வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கடன் சுமை, ஊதாரித்தனமாக செலவுகள், வருவாய் குறைவு போன்றவற்றிற்கு பின்னால் உள்ள உண்மை இரகசியம் வெளியே வரும். அந்த இரகசியம் அதிமுகவை மட்டும் சுடும் எனக் கொள்ளக் கூடாது. அது திமுகவையும் சுடும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் பணம் கோடி கோடியாக வாரி இறைக்கப்படுகிறது. ஒரு சட்டமன்ற தேர்தலைச் சந்திப்பது என்றாலே 5,000 முதல் 10,000 கோடி ரூபாய் வரை சர்வ சாதாரணமாகச் செலவிடப்படுகிறது. சந்தைகளில் காய்கறிகளை வாங்குவது போல எவ்வித அச்சமும், கூச்சமும் இல்லாமல் வாக்காளர்களின் வாக்குகள் பட்டவர்த்தனமாக ரூ 200 முதல் 5000 வரையிலும் ஏலம் போட்டு விலைக்கு வாங்கப்படுகின்றன.

இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு தேர்தல் வந்து விடுகிறது. எனவே இரண்டு கட்சிகளும் இத்தனை கோடி ரூபாய்களை எங்கிருந்து கொண்டு வரமுடிகிறது? கொள்கை, திட்டங்கள்; செய்தது, செய்யப் போவது போன்றவற்றைக் கூறி வாக்கு கேட்கும் முறை முற்றாக மாறிவிட்டது. முழுக்க முழுக்க ’Vote Purchasing’ தமிழக அரசியலில் நிலை கொண்டுள்ளது. அரசியலில் வெற்றிக்காக எந்த தவற்றையும் எப்படி வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மோசமான சித்தாந்தத்தில் செயல்படும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள போட்டியே இந்த நிதி நிலை சீரழிவுக்குக் காரணமாகும்.

தமிழகத்தில் கடந்த 50 வருடத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் எந்த அணையும் கட்டப்படவில்லை. வேலைவாய்ப்பை அல்லது வருவாயை உருவாக்கும் எந்த அரசு நிறுவனமும் உருவாக்கப்படவில்லை. ஒரு கட்சி ’பல்பொடி’ இலவசம் என்றால் இன்னொரு கட்சி ’பிரஸ்’ இலவசம் என்று அறிவிக்கிறது. ஒரு கட்சி ’கையுறை’ இலவசம் என்றால், இன்னொரு கட்சி ’காலணி’ இலவசம் என அறிவிக்கிறது.

மக்களுக்குப் பயன்படும் திட்டங்கள் என்பதெல்லாம் மெல்ல மெல்ல மாறி மக்களுக்கு எத்தனை நாள் பயன்படுகிறது என்பதை பற்றியெல்லாம் கவலை இல்லாமல் எந்த இலவசங்களால் மக்கள் அதிகம் கவரப்படுகிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். மக்களுக்கு பயன்படாவிட்டாலும், தங்களுக்கு பயன்படும் இலவசத் திட்டங்களே அறிவிக்கப்டுள்ளன. என்றோ ரூ 100, 200-க்கு வாங்கிய ட்ரான்சிஸ்டர்களை கூட வீட்டிலே வைத்து அழகு பார்க்கிறோம்?

ஆனால், அரசுகளால் கொடுக்கப்பட்ட வண்ண தொலைக்காட்சி, பேன், மிக்சி, கிரைண்டர் எத்தனை வீட்டிலே இருக்கிறது? ஏன் லேப்டாப்கள் கூட எத்தனை பேரிடம் இருக்கிறது? எனத் தெரியவில்லை. ஏன் பெரும்பாலான திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதுமில்லை; அது தொடர் வருமானத்திற்கும் பயன்படுவதில்லை. அப்படி ஏதாவது ஒரு சில திட்டங்களான இலவச ஆடு, மாடுகள் போன்றவை அறிவிக்கப்பட்டாலும் ஒரு சில வருடம் தொடர்வதும் பின் அப்படியே விட்டு விடுவதும் தொடர்கிறது.

jayalalitha karunanidhi
jayalalitha karunanidhi

எனவே, பெரும்பாலான இலவசத் திட்டங்களுக்கு மட்டுமே அதிகமான நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதும், அதிலிருந்து எவ்வித வருமானமும் வராத போது மக்களுடைய வருவாய் எப்படி உயரும்? ஜி.டி.பி எப்படி உயரும்? வாழ்வாதாரம் எப்படி உயரும்? அரசுக்கு எங்கிருந்து வருமானம் வரும்? நாங்கள் வரியே இல்லாத நிதிநிலையை ஒரே இரவில் தயார் செய்வோம் என முழங்கினீர்கள்; இப்போது வரி இல்லாமல் எப்படி நிதிநிலை எனக் கேள்வி கேட்கிறீர்கள்.

வரி போடவில்லை என்று சொன்னால் அது பணக்காரர்களுக்கு உதவும் என புதிய சோசலிச தத்துவம் வேறு பேசுகிறீர்கள். தமிழகத்தில் எத்தனை பணக்காரர்களிடம் வரி போட்டு இந்த அரசை நடத்த முடியும் எனத் தெரிய வில்லை?
தமிழகத்தின் ஒரு பெரிய தொலைக்காட்சி குழுமத்திடம் வரி வசூல் செய்தால் மட்டுமே ஒரு நிதிநிலையையே ஓட்டி விடலாம். சாராய ஆலை அதிபர்கள் கொஞ்சம் கை கொடுக்கக் கூடும். மற்றபடி எந்த பணக்காரர்களை சொல்லுகிறீர்கள் அல்லது யாரிடம் வரி போட்டு தமிழக வருவாயைப் பெருக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் சொல்லி இருக்க வேண்டும், பரவாயில்லை இன்னும் 2-3 தினங்களில் அனைத்தும் தெரிந்து விடும்; பார்ப்போம்.

சொத்து வரி, வாகனப் பதிவு கட்டணம், பேருந்து கட்டணத்தைக் கூட்ட வேண்டும்; மின்சார கட்டணத்தை கூட்ட வேண்டும் என வருவாய் பெருக்கத்திற்கு அடுக்கடுக்காக பல காரணங்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். ஆனால் இவையெல்லாம் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்த விசயங்கள் ஆயிற்றே. இப்போது மட்டும் எப்படி அமலாக்க முடியும்? நான் மீண்டும் மீண்டும் ஒரு விசயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மின்சார வாரியத்தில் இலட்சக்கணக்கான ரூபாய் நட்டம் என்றால் மின்சார வாரியம் 2006-2011 வரை எப்படி இருந்தது என வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க முடியுமா? அன்று ஒரு நாளுக்கு எவ்வளவு மின் தடை இருந்தது என்பது குறித்து அதில் தெரிவிக்கப்படுமா? போக்குவரத்துத் துறையில் நட்டம் என்று சொன்னால், அன்று அதன் அமைச்சராக இருந்தவர் தானே, இப்போது இன்னொரு துறைக்கு அமைச்சராக இருக்கிறார். அவரிடம் கேட்டால் காரணம் சொல்லுவாரே?

போக்குவரத்து துறை, மின்சார துறை, இலவசத் திட்டங்கள், கனிம வளங்களைக் கையாள்வதில் நடைபெறக் கூடிய அபரிதமான ஊழல்களால் தான் தமிழக நிதி நிலை சீரழிந்து கிடக்கிறது. எனவே, அதில் அதிமுகவிற்கு மட்டும் பங்கில்லை. திமுகவிற்கும் பங்கு இருக்கிறது என்ற உண்மையை இந்த வெள்ளை அறிக்கையில் மூடி மறைத்தது ஏன்? வெள்ளை அறிக்கையில் உண்மை இருந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதுமே இது போன்ற விசயங்களில் நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும். நோக்கம் தெளிவில்லாமல் அது உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் செல்ல வேண்டிய இலக்கை அடைய முடியாது. திமுக அரசுக்கும், நிதியமைச்சருக்கும் சில முக்கிய கேள்விகளை மட்டும் முன் வைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சில முக்கிய குறிப்புகளிலிருந்தே சில கேள்விகள் இதற்கு மட்டும் பதில் கூறுங்கள்.

உங்களுடைய வெள்ளை அறிக்கையின் 124-வது பக்கத்தில் கடைசி பத்தியில் ”குறிப்பாக கடந்த 7 ஆண்டுகளில் சரியான ஆளுகை இல்லாததால், தற்போதைய பெரும்பாலான பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. அரசியல் உள்நோக்கத்தைத் தவிர்ப்பதற்காக, நிதி நிலையின் சரிவிற்கான காரணங்களை நாங்கள் தெரிந்தே, இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த உள்நோக்கத்தையும், நிதி நிலையின் சரிவிற்கான காரணங்களையும் எப்போது வெளியிடுவீர்கள்?

பக்கம் எண் 123-ல் ’’வெகு காலத்திற்கு முன்னதாகவே ஒரு பொறுப்புள்ள அரசு பல ஆண்டுகளில் ஒருமுறை செய்ய வேண்டிய, அடிப்படைச் சீர்திருத்தங்களைச் செய்திருக்க வேண்டும். அதை தற்போது செயல்படுத்துவதற்கான வாய்ப்பாகவே இதனைக் கருத வேண்டும்’’ எனச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். வெகு காலத்திற்கு முன்னதாகவே ஒரு பொறுப்புள்ள அரசு என்று குறிப்பிடுவது முந்தைய திமுக ஆட்சிக் காலத்திற்கும் பொருந்தும் அல்லவா?

பக்கம் எண் 123, பத்தி எண் 3-ல் ”நியாயமான முறையில் வருவாயைப் பெருக்க வேண்டும்” எனச் சொல்லியிருக்கிறீர்கள்? ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் மின்சார கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், சொத்து வரி, வாகன வரிகளை உயர்த்துவதற்காகத்தான் இந்த பீடிகை போடுகிறீர்களா?

நீங்கள் நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்னர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போகிறீர்களா? அல்லது இந்த வெள்ளை அறிக்கை மூலம் பாவ மன்னிப்பு கோரப்போகிறீர்களா?

பெரும்பாலான இலவசத் திட்டங்களே ஊழலின் ஊற்றுவாயாக இருப்பதால் மக்களுக்கு வருவாய் ஈட்டாத இலவசத் திட்டங்களுக்கு இடமில்லை’ என்ற ஒரு தீர்க்கமான முடிவை ஒரு பொறுப்புள்ள அரசாக இனிமேலாவது முடிவெடுப்பீர்களா?

போக்குவரத்துத் துறையில் சேஸிஸ் (chassis) வாங்குவதில் துவங்கி டயர் டியூப் வாங்குவது வரையிலும் நிலவும் பகல் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளிப்பீர்களா?

மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளிலிருந்து நிலக்கரி வாங்குவது; பயனீட்டாளர்களுக்கு மீட்டர்கள் வாங்குவது; தனியார் சோலார் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி விலையைக் காட்டிலும் அதிக விலை கொடுத்து வாங்குவது உள்ளிட்டவற்றில் நடைபெறும் உழல்களை அறவே ஒழிக்க உத்திரவாதம் செய்வீர்களா?

சாலைகள், பாலங்கள் கட்டுவதில் நிலவும் ’Package Tender’ முறை ஒழிக்கப்பட்டு 20-30% வரை கூடுதலாகத் திட்ட மதிப்பீடு (Estimate) செய்வது கைவிடப்படுமா?

மணல், செம்மண், கருங்கல் குவாரிகள் மற்றும் பிற கனிம வளங்களை ஒரு சிலர் கொள்ளையடிப்பது தடுத்து நிறுத்தப்பட்டு அரசுக்கு வருமானமாக்கப்படுமா?

மதுவால் சீரழியும் தமிழ் சமுதாயத்தைக் காப்பாற்ற மது விலக்கு உடனடியாக அமலுக்கு வருமா?

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பருப்பு போன்ற பொருட்களுக்கு பன்மடங்கு விலை கொடுத்து வாங்கி அரசுக்கு நட்டம் ஏற்படும் Tender முறைகள் அறவே ஒழிக்கப்படுமா?

சத்துணவுக் கூடங்களில் வழங்கப்படக் கூடிய முட்டைகள் முதல் தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளாலும் வாங்கப்படும் பொருட்களுக்கு ’package Tender’ முறைகளை ஒழித்து லஞ்ச லாவண்யங்களுக்கு இடமில்லாமல் செய்யப்படுமா?

வேளாண்துறை மற்றும் அரசின் இலவச வீடு திட்டங்களில் உள்ள லஞ்ச லாவண்யங்கள் ஒழிக்கப்பட்டு, கொடுக்கப்படும் மானியத் தொகைகள் அவரவருக்கே போய் சேரும் வகையில் நடவடிக்கைகள் வருமா?

தமிழ்நாட்டில் இளைஞர்களையும், இளம் பொறியாளர்களையும் அலைக்கழிக்காமல் ஆக்கமும், ஊக்கமும் அளித்து தொழில் முனைவோர்களாக்க ஏதாவது வழி உண்டா?

உள்ளாட்சிகள் ஊழல் ஆட்சிகளாக மாறிவிட்டதால் அதில் ஊழல்களை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் துவங்கி பல்கலைக் கழக ஆசிரியர் நியமனம், இடமாற்றம் வரை எவ்வித லஞ்ச லாவண்யங்களுக்கும் இடமில்லை என உத்திரவாதம் அளிக்கப்படுமா?

அனைத்து அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் எவ்வித லஞ்ச லாவண்யங்களுக்கும் இடமில்லாமல் அனைத்து சேவைகளும் மக்களுக்கு நிறைவேற்றப்படும் என உத்திரவாதம் அளிக்கப்படுமா?

இனிமேல் உள்ளாட்சிகள், சட்டமன்றம், நாடாளுமன்றம், இடைத் தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும் வாக்காளர்களை ஊழல் படுத்த மாட்டோம் என திமுக உறுதி அளிக்குமா?
நீங்கள் முன்வைத்த வெள்ளை அறிக்கையில் சில கேள்விகளை முன் வைத்துள்ளோம். விடை எப்போது கிடைக்கும்?

  • டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
    நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe