
தமிழக மக்கள் காதில் பூ சுற்ற வேண்டாம் என தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக., மாநில அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து திமுக., அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து விளக்கமளித்தார்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரிய மசோதாவை, ஆளுநர் ரவி, தமிழக சட்டமன்ற அவைத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விவாதிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீட் தேர்வு விகாரத்தில் திமுக., இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசில், மத்திய அமைச்சராக இருந்த திமுக.,வின் காந்திசெல்வன்தான் நீட் தேர்வு மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது திமுக., தலைவர் ஸ்டாலின் என்ன செய்தார்?
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது அர்த்தமற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் புதிதாக ஏதும் சொல்லுங்கள். தமிழக மக்களை ஏமாற்றி காதில் பூ சுற்ற வேண்டாம்.
நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்களின் டாக்டர் கனவு பாதிக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது எனப் பிரசாரம் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், முக்கியமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே நீட் விலக்கு மசோதா கடந்த அதிமுக., ஆட்சிக் காலத்தில், ஆளுநர் மூலம் சென்று குடியரசுத் தலைவர் அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார். இப்போது மீண்டும் ஒரு மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினீர்கள். ஆளுநர் தமிழக அரசுக்கு அதை திருப்பி அனுப்பியுள்ளார். அதில், அவர் எழுப்பியுள்ள கேள்விகள் என்ன என்பதை அரசு வெளியிட வேண்டும்.
நாங்கள் கேட்ட வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில அரசுக் கல்வியில் தனியார் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் என வரிசை பிரித்து பட்டியலை வெளியிட வேண்டும்… என்று கூறினார்.