ஜெயலலிதாவை நானும்தான் பார்க்கவில்லை: ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் பதில்!

ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவராகவும், ஜெயலலிதாவால் கூடவே இருந்து வளர்க்கப்பட்டவராகவும் அடையாளம் காணப்பட்ட விவேக்கூட ஜெயலலிதாவை தான் மருத்துவமனையில் நேரில் சென்று பார்க்கவில்லை

சென்னை:

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தானும் பார்க்கவில்லை என்று விவேக், ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, 75 நாள்கள் சிகிச்சையில் இருந்தார். பின்னர் கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டது. இதனால், அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதா தொடர்புடைய பலரிடமும் அவர் அப்பல்லோவில் இருந்த நாட்கள் உள்பட சில விவரங்களை விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக்கிற்கு கடந்த 9ஆம் தேதி ஆணையம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரி த்து வரும் ஆறுமுகசாமி கமிஷனில் இளவரசியின் மகன் விவேக் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப் பட்டது. அப்போது ஜெயலலிதா குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அடுத்து, வரும் 28 ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

இதனிடையே ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, தான் அவரை சந்திக்கவில்லை என விவேக் விசாரணை ஆணையத்தில் தெரிவித்தாராம்.

ஏற்கெனவே ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்கள் உள்பட பலரும் அவரை நேரில் பார்க்கவில்லை என தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர், அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவை பார்க்காமலேயே திரும்பினர்.

ஆனால், சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்துக் கொண்டதாகவும் வேறு யாரையும் அவர் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவராகவும், ஜெயலலிதாவால் கூடவே இருந்து வளர்க்கப்பட்டவராகவும் அடையாளம் காணப்பட்ட விவேக்கூட ஜெயலலிதாவை தான் மருத்துவமனையில் நேரில் சென்று பார்க்கவில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.