அதிமுக.,வில் இருந்து நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி விலகல்!

வேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டதால் அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை :

தமிழ் ரசிகர்களிடம் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி அதிமுக.,வில் இருந்து விலகியுள்ளார். நண்பர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் கேட்டுக் கொண்டதால், தாம் அதிமுக.,வில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் வேறு எந்த அணியிலும் சேரும் முடிவில் இல்லை என்றும் கூறினார்.

தமிழ் ரசிகர்களிடம் புகழும் செல்வாக்கும் பெற்றவர்கள் நாட்டுப் புறப் பாடகரும் ஆய்வாளருமான புஷ்பவனம்  குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர். இருவரும் இணைந்து நாட்டுப் புறப் பாடல்களைப் பாடி, தமிழ் கிராமியக் கலைகளை உலக அளவில் கொண்டு சென்றுள்ளனர். பிரபல நாட்டுப் புறக் கலைஞரும், ஆய்வாளரும், பாடகருமான குப்புசாமியை அனிதா, காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

அனிதா குப்புசாமி நாட்டுப்புறப் பாடகி, சமையல் கலை வல்லுநர், ஆய்வாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவராக இருந்தாலும் அவரது தமிழ் உச்சரிப்பும், தமிழ் மொழியில் கிராமியப் பாடல்களை அச்சுபிசகாமல் பாடுவதும் அவரை புகழடையச் செய்தது.

தமிழ் மேடைகளில் இருந்த செல்வாக்கை அரசியல் மட்டத்திலும் விரிவாக்கும் வகையில், கடந்த 2013ல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தார் அனிதா குப்புசாமி. அந்த நேரத்தில் அவர் ஜெயா டி.வி.யில் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இப்போது ஜெயா டி.வி. அதிமுக.,வின் கட்டுப் பாட்டில் இல்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து சிலர் ஒதுங்கியும், சிலர் வெளியேறியும் வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அனிதா குப்புசாமியும் அதிலிருந்து விலகியுள்ளார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் இனியும் அதிமுகவில் தொடரப்போவதில்லை என்றார். வேறு அணியில் சேரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்றும், ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டதால் அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அனிதா குப்புசாமி தெரிவித்துள்ளார்.