இந்த ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும்: ஆனால் செய்ய மாட்டோம்: மு.க.ஸ்டாலின்!

திமுக., நினைத்தால் தற்போதைய அதிமுக., ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும் என்று பேசிய திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை:

திமுக., நினைத்தால் தற்போதைய அதிமுக., ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும் என்று பேசிய திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நடைபெறும் அதிமுக., ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்தால் திமுக.,வுக்கு ஒரு நிமிடம் போதும்; ஆனால், கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரக்கூடாது என்பதாலேயே இந்த ஆட்சியை விட்டுவைத்துள்ளோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட திமுக.,வின் சார்பில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து செவ்வாய்க் கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ஒரே இரவில் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் பேருந்துக் கட்டணத்தை 60 முதல் 100 சதவீதம் வரை அதிமுக அரசு உயர்த்தியது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தபோது குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனை பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், தற்போதைய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ள பேருந்துக் கட்டணத்தால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தாங்களாகவே முன் வந்து பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் போராடி வருகின்றனர்.

பேருந்துக் கட்டண உயர்வுக்கு திமுக உள்பட எதிர்க் கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு கட்டங்களாகப் போராடினோம். இதையடுத்து ரூபாய் கணக்கில் கட்டணத்தை உயர்த்திவிட்டு, பைசா கணக்கில் குறைத்து இந்த அரசு கபட நாடகமாடுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்காமல் எக்காரணம் கொண்டும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

இது அரசின் நிர்வாகத்திறமை இன்மையைக் காட்டுகிறது. நிர்வாகத் திறமை இன்மையே பஸ் கட்டண உயர்வுக்குக் காரணம். அடுத்தது ஊழல்.

எனவே, பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் சமாளிப்பது எப்படி என்பது குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைத்தோம். அதன் அடிப்படையில் வெளி மாநிலங்களில் ஆய்வு செய்து அளித்துள்ள அறிக்கையில் 27 அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அளித்துள்ளேன்.

ஏற்கெனவே, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. இது ஜோசியம் கேட்டு சொல்ல வேண்டியது இல்லை. அப்போது, காட்சி மாறும்.

எதிர்க் கட்சியான எங்களைத்தான் பொதுமக்கள் திட்டுகிறார்கள். இதுபோன்ற நிலையில் நாங்கள் எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். ஆனால் தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென நினைத்தால் திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும். கொல்லைப்புறமாக வந்து ஆட்சியில் அமரக்கூடாது என்பதாலேயே இந்த ஆட்சியை விட்டுவைத்துள்ளோம் என்று பேசினார் ஸ்டாலின்.

ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் என்ற பேச்சை வெளியில் சொல்லிக் கொண்டுதான், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் திமுக., வழக்கு தொடுத்துள்ளதா என்ற கேள்வியை சமூக ஊடகங்களில் பலரும் எழுப்புகின்றனர்.