அடிமையாக இருந்து ஆதரவற்ற நிலைக்குப் போய்… அரசியல் வாழ்வு கொடுத்த மோடியை ‘பதம் பார்க்கும் பன்னீர்’!

புகார்கள் குறித்தும் இருவரிடமும் தெரிவித்ததாக உலா வந்த தகவல்களின் பின்னணி குறித்தும் வெளிப்படையாகப் பேசி, தனது தர்ம யுத்தத்தின் தர்மத்தை வலுப்படுத்தியிருக்கலாம்!

சின்னம்மாவின் சேவகனாக களத்தில் குதித்து, அம்மாவின் அடிமை ஆகி, தொடர்ந்து சின்னம்மாவின் அடிமை ஆகி, திடீரென தர்ம யுத்தம் தொடங்கி, அரசியலில் ஆதரவற்ற நிலைக்குப் போய், ஒருவாறு மோடியால் அரசியல் வாழ்வைத் தொடர்ந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இப்போது தனக்கு வாழ்வளித்த மோடியைப் பதம் பார்த்துள்ளார்.

ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொருளாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ்., தான் ஏதோ விருப்பப் பட்டு துணை முதல்வராகவோ, அமைச்சராகவோ இல்லை என்பதைச் சொல்வதற்காக பேச்சைத் தொடங்கியவர், மோடியின் வற்புறுத்தலால் இவ்வாறு அமைச்சர் பதவியில் இருப்பதாகவும் கூறினார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியுடன் நட்பு முறையில் இணக்கம் பேணியவர். குஜராத் கலவரத்தை காரணம் காட்டி, காங்கிரஸ் தூண்டுதலில் எதிர்க்கட்சிகள் பலவும் மோடியைப் புறக்கணித்த போது, மோடி முதல்வர் பொறுப்பேற்றபோது பதவி ஏற்பு விழாவில் தாமே நேரில் சென்று வாழ்த்தினார் ஜெயலலிதா. அதன் பின்னர் மோடி சென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது, ஜெயலலிதா இல்லத்துக்கே சென்று விருந்து உண்டார்.

பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர், ஒரு பிரதமர், உச்ச நீதிமன்றத்தில் குற்ற வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் நிலையில் உள்ளவரின் வீட்டுக்குச் செல்லலாமா என்று கேள்வி எழுந்தபோது, அதைப் புறந்தள்ளியவர் மோடி. நட்பு ரீதியில் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிந்து, ஜெயலலிதா வீட்டில் சிறை வைக்கப் பட்டிருப்பது போல் உணர்ந்த காரணத்தால் தன் மாநிலத்தில் இருந்து சிறப்பு நர்சுகளையும் மருத்துவர்களையும் உளவு அதிகாரிகளையும் அனுப்பி ஜெயலலிதாவைப் பாதுகாக்க முயன்றவர் மோடி என்பது அப்போது பரபரப்பாக வந்த தகவல்கள்.

இவ்வளவு இருந்தும், கட்சி ரீதியாக ஜெயலலிதாவுடன் கூட்டணி எதுவும் இல்லாமல் விலகியே இருந்தார் மோடி. அதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் சில இருக்கலாம், ஆனால், ஜெயலலிதாவுக்குப் பிறகான அவரது கட்சியை வேறு எவரும் கைப்பற்றி விடக் கூடாது என்பதில், தமிழக மக்களின் மனநிலையைப் போல், மோடியும் உணர்ந்திருந்தார். கட்சியைக் கைப்பற்றுவதற்காக, சசிகலா குடும்பத்தினர் மேற்கொண்ட முறைகேடான வழிகள் குறித்து மோடி அறிந்திருந்தார் என்பதுடன், அதைத் தடுக்கும் விதமாகவும் யோசித்திருக்கிறார் என்பது, ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது தெரிந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை அருகில் அழைத்து, அவரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்ன காட்சி மக்கள் மனங்களில் நின்று போன காட்சிதான். காரணம், தான் இரு முறை சிறைக்குச் செல்ல நேர்ந்த போது, தன் நம்பிக்கைக்கு உரியவராக ஜெயலலிதா கருதியது ஓ.பன்னீர்செல்வத்தை. அதனால்தான் அவர் இருமுறையும் ஓபிஎஸ்ஸை முதல்வர் பதவியில் அமரவைத்தார். ஜெயலலிதா வைத்த இந்த நம்பிக்கையே, மோடிக்கும் பன்னீர்செல்வத்தின் மீது இருந்தது.

அதனால்தான், எத்தனையோ பேர் தன்னை சந்திக்க நேரம் கேட்கும் போதெல்லாம் உடனே கொடுக்க இயலாத நிலையில் இருந்த பிரதமர் மோடி, தில்லிக்கு வரும் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் சந்தித்துவந்தார். அதற்கு தில்லியில் தொடர்பு பலமாக உள்ள வா.மைத்ரேயன் போன்றோர் காரணமாக இருந்தாலும், ஓபிஎஸ்ஸை சந்திப்பதிலும், அவருக்கு சில ஆலோசனைகளைச் சொல்வதையும் மோடி கைவிடவில்லை. அது, அவர் மீதான நம்பிக்கை என்பதைவிட, தான் நட்பு பேணிய ஜெயலலிதாவின் கனவுக் கட்சி கலைந்து போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் என்பதை, ஓபிஎஸ்ஸும் உணர்ந்தே இருந்தார்.

இதனையே ஓபிஎஸ்., நேற்று தேனியில் பேசிய கூட்டத்தில் வெளிப்படுத்தினார். ஆனால், அவர் வெளிப்படுத்திய விதம், மோடியைப் போட்டு வாங்குவதாய் அமைந்துவிட்டது.

தான் அமைச்சர் பதவியில் கனவு கண்டு கொண்டு அதை நோக்கி இல்லை என்று கூறி, பிரதமரின் வற்புறுத்தலாலேயே இந்த அமைச்சர் பதவியில் அமர்ந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஓபிஎஸ். மேலும், பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் தான் அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக., சசிகலா குடும்பத்தின் கைகளில் சென்று விடாமலும், கட்சி உடைந்து போய், ஆட்சி இழந்து விடக் கூடாது என்றும் கருதி மோடி காய் நகர்த்தியதாக பலமான கருத்துகள் வெளிவந்தன. இன்னொரு மட்டத்தில், எப்போது வாய்ப்பு என்று காத்திருக்கும் திமுக.,வுக்கு சாதகமாக அதிமுக.,வின் பிளவு ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தினால் மோடி, ஓபிஎஸ்ஸை இயக்குகிறார் என்று ஊடகங்கள் சில எழுதி வந்தன. வாய்ப்பு தட்டிப் போவதால், திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மோடியையே குற்றம்சாட்டி வந்தன. ஆனால், அவற்றை அப்போது மறுத்து வந்தார் பன்னீர்செல்வம். அவரின் சகாக்களும் ஆதரவாளர்களும் கூட, இதில் மோடியின் இயக்கம் எதுவும் இல்லை என்று கூறி வந்தனர்.

ஆனால், அவற்றை எல்லாம் உண்மையாக்கும் விதத்தில் இப்போது பன்னீர்செல்வம் அந்தக் குற்றச் சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். தர்மயுத்தம் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தில்லிக்கு எப்போது சென்றாலும் மோடியின் வீட்டுக் கதவுகள் திறந்தே இருந்தன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில், ஜல்லிக்கட்டுக்கான தடையை விலக்கிக் கொடுத்து, தான் பெயர் வாங்குவதை விட, தமிழக அரசியலில் ஒரு புதிய தலைவராக ஓபிஎஸ் பெயர் பெறட்டும் என்று கருதி மோடி எடுத்த நடவடிக்கைகளை அப்போது பாஜக.,வினர் கூட வெளிப்படையாகப் பேசவில்லை. தொடர்ந்து, தன்னைச் சந்தித்து, தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை அவர் கொடுக்க வைத்து, அவற்றை உரிய அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைத்து, ஓபிஎஸ்.,ஸை ஒரு தலைவராக உருவாக்குவதற்கான முயற்சிகளில் மோடி ஈடுபட்டதை, பன்னீர்செல்வமே உணரத் தவறிவிட்டார்.

அதனால்தான், இப்படிப் பிரிந்திருந்தால் அதிமுக., என்ற கட்சி வலிமை பெறாது என்று கருதி எடப்பாடி, ஓபிஎஸ்., இருவரையும் இணையச் சொல்லி, கருத்துவேற்றுமைகளைக் களைந்து, பலமான கட்சியாகக் கொண்டு செல்ல ஆலோசனை கூறியிருக்கிறார் மோடி. இதே நேரம் காங்கிரஸாக இருந்திருந்தால், தனது கட்சி நலன் கருதி மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி, ஆட்சி கலைக்கப் பட்டிருக்கும். இதற்கான முன்னுதாரணங்கள் பல உண்டு.

இந்நிலையில், அதிமுக.,வில் இணைவதற்கான அறிவுரையை மோடி கொடுத்தார், அவர் சொல்லித்தான் இப்படிச் செய்தேன் என்று கூறியிருக்கும் பன்னீர்செல்வம், தனது நண்பர் சேகர் ரெட்டி, வருமான வரித் துறையில் சிக்கி, மோசடிகளுக்கு தானும் உடந்தையாக இருந்தது வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பணிந்து போயிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் ஒரு பதிலைச் சொல்லியிருக்கலாம். அத்துடன், ராமேஸ்வரத்துக்கு அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத் திறப்பு விழாவுக்கு வந்திருந்த போது, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இருவரையும் வைத்துக் கொண்டு, ஊழல் அமைச்சர்கள் குறித்தும், மாநிலத்தில் பரவலாக நடைபெறும் ஊழல்களைக் கட்டுப் படுத்தவில்லை என்ற புகார்கள் குறித்தும் இருவரிடமும் தெரிவித்ததாக உலா வந்த தகவல்களின் பின்னணி குறித்தும் வெளிப்படையாகப் பேசி, தனது தர்ம யுத்தத்தின் தர்மத்தை வலுப்படுத்தியிருக்கலாம்!

இந்தக் கருத்தைத்தான் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படுத்தியிருப்பது கவனிக்கத் தக்கது. அதிமுக.,வின் நலன் விரும்பி யார் நல்லதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவரது கருத்து, ஓபிஎஸ்ஸுக்கான தர்மயுத்தத்துக்கான ஊக்கமூட்டும் கருத்து என்பதை அவர் உணரத் தலைப்படட்டும்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...