சாதி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். டெல்லி பயணத்தை முடித்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். அவர், முன்னாள் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இதனால், அதிமுக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மதுரை வரும் ஓபிஎஸ்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் சாதி ரீதியாக பிரிவினை ஏற்படுத்துவப்பவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் இடம்கொடுக்க கூடாது.
அதிமுக தொண்டர்கள் எப்போதும் சாதி, மதம், பார்ப்பதில்லை, மதச்சார்பற்றவர்களாகவே இருந்து வருகின்றனர். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடைபெறும். அதிமுக தொண்டர்களை பிரித்து தேசிய கட்சியில் சேர்த்துவிடலாம் என்று யாரவது நினைத்தால் அது நடக்காது. அதிமுக விழாது; புத்துணர்ச்சியோடு மீண்டு வரும். அதிமுக மக்கள் இயக்கமாகும்; அதிமுக தொண்டர்களின் இயக்கமாகும். அதிமுக லட்சியத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது. யார் நினைத்தாலும் அதிமுகவை பிரிக்கவும் முடியாது, வீழ்த்தவும் முடியாது எனவும் கூறினார்.
இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அணி வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
அ.தி.மு.க.வை வழிநடத்த ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் களேபரமாக நடந்து முடிந்தது. தற்போது இரு அணிகளாக கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு கிராமத்துக்கு வந்தார். இன்று அவர் தஞ்சையில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்து தஞ்சையில் உள்ள ஒரு ஓட்டலில் ஓய்வெடுக்க சென்றார். அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு செல்வாக்கு தமிழகம் முழுவதும் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத 600 பேரை பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள செய்தனர். அதனால்தான் கடும் கூச்சல் குழப்பத்துடன் கூட்டம் நடைபெற்றது. அடுத்த மாதம் 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். அந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறாது. எங்கள் அணியில் இருந்து திரும்பி சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் மீண்டும் திரும்பி வந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஏற்பட்ட களேபரத்திற்கு பிறகு, மக்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுகூடி அ.தி.மு.க.விற்கு மட்டும் அல்ல தமிழகத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தான் தலைமை ஏற்க வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். இது தன்னெழுச்சியாக ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழிநடத்த முடியாது. கட்சி தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும். மேலும் ஜூலை 11 -ந் தேதி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார். அ.தி.மு.க. எந்த மதத்திற்கும், ஜாதிக்கும் கட்டுப்பட்டதல்ல. அனைவருக்கும் பொதுவான ஜனரஞ்சகமான கட்சி தான் அ.தி.மு.க., பொதுக்குழு நடக்கலாமா? இல்லையா? என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை நடத்தலாம் . ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் செல்வது அவருடைய சொந்த விருப்பம். ஆனால் கட்சியின் தொண்டர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
