ஆண்டிப்பட்டியில் பாஜக தொண்டர் காவி சால்வை அணிவித்ததை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டது, மறைமுகமாக இருந்த பாஜக சாயம் வெளுத்து விட்டது என அர்த்தம் என காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 5 விளக்கு அருகே அக்னிபாத் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அவரிடம், ஆண்டிப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர் அவருக்கு காவி நிற சால்வை அணிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், மறைமுகமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் சாயம் வெளுத்துவிட்டதாக விமர்சித்தார்.
மேலும், சிறுபான்மையினரை தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னிபாத் திட்டத்தை மோடி கொண்டுவந்துள்ளார் என்றவர், அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேருபவர்கள் நான்கு ஆண்டுகளில் வெளிவந்து விடுவர். பின்பு ராணுவத்திற்கும், மாணவர்களுக்கும் தொடர்பே இருக்காது. அந்த மாணவர்களை மதக் கலவரத்தில் ஈடுபடுத்தத் தான் மோடி திட்டமிட்டுள்ளார் என்றும் கூறினார்.