சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாளை (ஜூலை 11) மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பொதுக்குழுவில் அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழுவின்போது பேனர்கள் கிழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.