அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலக சாவி யாருக்கு சொந்தமாகும்? பொதுக்குழு வில் சொன்னபடி 4 மாதங்களில் அக்கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு தேர்தல் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 4 மாதங்களில் பொதுச் செயலர் பதவிக்குத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச்செயலர் தேர்தலை பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11-இல் இருந்து 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளை அதிமுக அலுவலகத்தில் இருந்தே மேற்கொள்ள முடியும். பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க குறிப்பிட்ட தேதியை அறிவித்து, குறிப்பிட்ட இடத்தில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அதைப்போல அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கியமான ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் பட்டியல் விவரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. பொதுச் செயலர் பதவியை அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியல் முக்கியமானதாகும்.
இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் எப்போது மேற்கொண்டு, அதன் தீர்ப்பைக் கூறப்போகிறது எனத் தெரியவில்லை. இதுபோன்ற காரணங்களால் அதிமுக ராயப்பேட்டை தலைமை அலுவலகம் யாருக்கு வரும் அதிமுகவின் பொதுச் செயலர் பதவிக்கான தேர்தல் 4 மாதங்களில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.