01-04-2023 4:59 AM
More

    To Read it in other Indian languages…

    போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-இபிஎஸ்..

    நடனமாடத் தெரியாத ஒருவர், “கூடம் கோணல்” என்று சொல்லுவது போல் தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த கையாலாகாத அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும்.கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது போர்க்கால அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் போதைபொருள் தடுப்பு குறித்து மாவட்ட கலெக்டர்களிடமும், காவல் துறை உயர் அதிகாரிகளிடமும் விடியா அரசின் முதல்-அமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கு முன்னாள் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் நடத்தாமல் தான் காவல்துறை தலைவர் ஆபரேஷன் கஞ்சா 2.0 என்று அறிவித்தாரா? இந்த அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? காவல் துறை தலைவரின் இந்த அறிவிப்பு வெத்துவேட்டு ஆனதால்தான் இந்த முதல்-அமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

    “நாடகமே இந்த உலகம், ஆடுவதோ பொம்மலாட்டம்” என்ற ஒரு பழம்பெரும் திரைப்படப் பாடலை யாரோ ஒருவர் இந்த விடியா அரசின் முதல்-அமைச்சருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் போலும். ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்றுவரை மக்களை ஏமாற்றும் வகையில் தினம் ஒரு அறிவிப்பு, அடிக்கடி குழுக்கள் அமைத்தல் என்று பொம்மலாட்ட நாடகங்களை அரங்கேற்றி வருவது கண்டு மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

    இந்த ஆட்சியாளர்கள் போடும் இரட்டை வேடத்தால் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களினால் இளைஞர் சமுதாயம் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரும் தான். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் கஞ்சா வியாபாரிகள் சிறு சிறு பொட்டலங்களாக விற்பது கண்கூடான ஒன்றாகும்.

    இரு தினங்களுக்கு முன்புகூட, கரூர் மாவட்டத்தில் 3 மாணவிகள் போதைப் பொருள் உண்ட மயக்கத்தில் சாலையில் மயங்கிக் கிடந்ததாக அனைத்து ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன. இந்த விடியா அரசு பதவியேற்றதில் இருந்து மாணவ, மாணவிகள் இதுபோன்ற போதைப் பழக்கத்திற்கு ஆளாவதும், அவர்களை இதிலிருந்து மீட்க முடியாமல் பெற்றோர்கள் தவிப்பதும் தொடர்ந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, பெற்றோர்கள் இந்த விடியா அரசை நம்பாமல், எப்போதும் தங்கள் குழந்தைகளின் மேல் முழு கவனத்தை செலுத்தும்படியும், தவறான பாதைக்கு அவர்களைச் செல்லவிடாமல் கண்காணிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.

    காவல் துறைத் தலைவர் அலுவலகம் எதிரிலேயே, மெரினா பீச்சில் கள்ளச் சாராயம் பிடிபட்டது. இதனுடைய பின்னணி இதுவரை வெளிவரவில்லை. காவல் துறைத் தலைவரின் உத்தரவுப்படி ஒருசில நேர்மையான காவலர்கள் கஞ்சா வேட்டையில் ஈடுபடும் போது அவர்களை ஒருசில ஆளும் கட்சியினர் மற்றும் அதிகார வர்கத்தினர் மிரட்டுவதாகவும், அதனால் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் போலீசார் கையறு நிலையில் செயலற்று இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. கடந்த அம்மாவின் ஆட்சியின்போது, தங்களுக்கு வேண்டியவர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்த குட்கா பாக்குப் பொட்டலங்களை சரங்களாக கழுத்தில் அணிந்து சட்டசபையில் நாடகம் ஆடிய விடியா திமுக அரசின் முதல்-அமைச்சருக்கு, தற்போது தமிழகமே கஞ்சா காடாக, போதைப் பொருட்களின் விற்பனைக் கூடாரமாக மாறி இருப்பது தெரியவில்லையா?2021-ம் ஆண்டு சட்டமன்றத்தில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக சுமார் 7,000 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும் அதில் சுமார் 9,500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் இந்த அரசு கூறியபோது, இதில் எத்தனை பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்றும், எத்தனை பேருக்கு தண்டனை வாங்கித் தரப்பட்டுள்ளது என்றும் நான் வினா எழுப்பினேன்.

    அது போலவே, சட்டமன்றத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை செய்வதாக சுமார் 2,150 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஏன் வெறும் 150 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறியபோது, ஏன் இவ்வளவு குறைவான நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற வினாவையும் சட்டமன்றத்தில் நான் எழுப்பினேன். ஆனால், இதுவரை எனது இரண்டு வினாக்களுக்கும் முழுமையான பதில் வரவில்லை. இப்புள்ளி விவரம் இந்த ஆண்டு மேலும் அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த 14 மாதங்களில் இந்த விடியா அரசின் கையாலாகாத்தனத்தாலும், நிர்வாகத் திறமையின்மையாலும் தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாகவும், போதை வியாபாரிகளின் கேந்திரமாகவும் மாறிவிட்டது என்று நான் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்தேன். அப்போதெல்லாம் மழுப்பலான வார்த்தைகளைப் பேசி பிரச்சனையை திசை திருப்பிய முதல்-அமைச்சர் இன்றைக்கு, அவரே போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தை கடைபிடிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    காவல் துறையினர் தினசரி கஞ்சா மற்றும் போதைப் பொருட்களைப் பிடிப்பதாகவும், கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதாகவும், கடத்திய ஆசாமிகளைக் கைது செய்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால், வெட்ட வெட்ட முளைப்பதற்கு இது என்ன ஜி பூம்பா தலையா? இந்த முதல்-அமைச்சருக்கு எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்ற பழமொழி தெரியாதா? கஞ்சா கடத்தலுக்கு மூலக் காரணம் யார்? யாரைப் பிடித்தால் இது குறையும் என்று தெரியாதா? புதிது புதிதாக போதைப் பொருள் வியாபாரிகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகுகிறார்கள், அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை இந்த அரசு ஒத்துக்கொள்கிறதா? நடனமாடத் தெரியாத ஒருவர், “கூடம் கோணல்” என்று சொல்லுவது போல் தமிழகத்தில் இருந்து போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க முடியாத, இந்த கையாலாகாத அரசு போதைப் பொருள் தடுப்பு குறித்து ஆலோசனை என்று நாடகமாடுவதை இத்துடன் கைவிட வேண்டும்.

    மேலும் நான் சாப்ட் முதல்-அமைச்சர் அல்ல என்றும், சர்வாதிகாரி என்றும் வசனம் பேசுவதை நிறுத்தி விட்டு, இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை கையாண்டு, தமிழகத்தில் இருந்து போதைப்பொருட்களின் விற்பனையை முழுமையாக ஒழிக்க காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதல்-அமைச்சர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்” என்று அதில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eleven + 7 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    0FollowersFollow
    4,646FollowersFollow
    17,300SubscribersSubscribe
    -Advertisement-