மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. நடைபயணம் செல்லும் ராகுல்காந்தி இதை பார்ப்பார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செவ்வாய் கிழமை அக்கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமந்திரம் விளக்கவுரை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய தேசிய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்க இருக்கிறார். அவருக்கு எங்களது வாழ்த்துக்கள். 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மையான காலம் ராகுல்காந்தியின் குடும்பத்தினரே பிரதமர்களாக இருந்திருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இந்தியா எவற்றையெல்லாம் இழந்தது என்று பார்க்க வேண்டும். மோடி பிரதமராக வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா ஒரே நாடு, ஒரே மக்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. நடைபயணம் செல்லும் போது ராகுல்காந்தி இதை பார்ப்பார் என்ற நம்பிக்கை பாஜகவிற்கு இருக்கிறது. இந்தியா உலகின் 5-வது பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. நமது நாட்டு மக்கள் வறுமைக் கோட்டில் இருந்து மேலே வந்திருக்கிறார்கள்.
இதையெல்லாம் ராகுல் காந்தி நீண்ட, நெடிய நடைபயணத்தில் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ள நாட்டின் உள்கட்டமைப்பை பார்க்க வேண்டும், இந்தியாவின் ஒற்றுமையை பார்க்க வேண்டும் காஷ்மீர் செல்லும் போது அந்த மாநிலம் எப்படி இணைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
அவருடைய குடும்பத்தில் இருந்து வந்த 3 பிரதமர்கள் ஓட்டு அரசியலுக்கு இந்தியாவை எப்படி வேறு வேறு காலத்தில் பிரித்து வைத்திருந்தார்களோ? அவை அனைத்தையும் பிரதமர் மோடி உடைத்தெறிந்திருக்கிறார். எப்போதும் இல்லாத ஒற்றுமை இப்போது இந்தியாவில் இருக்கிறது. 8 ஆண்டுகளில் இந்தியாவை எப்படி மோடி இணைத்துள்ளார் என்பதையெல்லாம் பார்க்கும் ராகுல் காந்தி, நடைபயணம் முடியும் போது நிச்சயமாக மோடியின் பக்தராக மாறுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராகுல் காந்தியின் நடைபயணம் எந்த ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் திமுக.வின் தயவில் இருக்கிறார்கள். நடைபயணம் தொடங்கும் இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சக்தி இல்லை, வலுவில்லை. நடைபயணம் ஆரம்பிக்கிற இடத்திலேயே காங்கிரஸ் கட்சிக்கு சொந்தக் குரல் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த அரசியல் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நான்காவது தலைமுறை அரசியலில் இருக்கும் ராகுல் காந்தியின் முன்னோர்கள் 65 ஆண்டுகளாக இந்தியாவால் முடியாது என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து இருந்தாலும், அதை முறியடித்து சுயசார்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது நமது நாடு. மேலும் நமது நாடு விரைவில் உலகத்தின் விஸ்வகுரு என்ற அந்தஸ்தை அடையும். இதை கண்டு ராகுல்காந்தி பெருமை கொள்வார் என்று நம்புகிறோம். கடைசியாக திமுக உட்பட உங்கள் அனைத்து கூட்டணி கட்சிகளையும் நீங்கள் சந்திக்கும்போது அவர்களது மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கும் வரியை குறைக்க கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் நீங்கள் உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டுமெனில் பாஜக ஆளும் மாநிலங்களில் மலிவான விலையில் நிரப்பிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.