அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே தலைமை யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது. போட்டி யாகங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே தலைமை யுத்தம் உச்சத்தை எட்டியுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானாலும் தலைமை சர்ச்சை தொடர்வதால் இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். தனித்தனியாக தங்கள் தரப்புக்கு ஆதரவை அதிகரித்து வரும் இருவரும் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை கைப்பற்ற தொடர்ந்து போட்டா போட்டி நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 18-ந் தேதி ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்தார். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி விட்டு ராமநாதசுவாமி கோவிலில் ருத்ராபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.
பின்னர் அங்குள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 5 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு யாகம் நடத்தினர். அரசியலில் ஏற்பட்டுள்ள இழுபறியை சீர்படுத்திடவும், இதுதொடர்பான சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கவும் ஓ.பன்னீர் செல்வம் இந்த சிறப்பு யாகங்களை நடத்தியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற துணைத் தலைவர் பதவியை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் குடும்பத்துடன் சென்று ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்துள்ளார். இதற்காக நேற்று இரவு ராமேசுவரம் சென்ற அவர் இன்று அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் குடும்பத்துடன் நீராடினார். இதை தொடர்ந்து ராமநாதசுவாமி கோவிலில் உள்ள பர்வத வர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
பின்னர் ராமேசுவரம் மேல தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சிறப்பு யாகம் நடத்தினார். அப்போது சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சிறப்பு யாக பூஜையில் குடும்ப மேன்மை, தோஷம், முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைதல் உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனாலும் ஆர்.பி.உதயகுமார் நடத்திய சிறப்பு யாகம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு போட்டியாக நடத்தப்பட்டதாகவே ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்த போட்டி யாகங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வத்தின் இடத்தை ஆர்.பி.உதயகுமார் பிடித்துள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறி வரும் நிலையில் இருவரும் போட்டியாக யாகம் நடத்துவதும் அ.தி.மு.க.வினர் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
